கொள்கையைக் கைவிட்டு, கட்சியையும் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கிறது பி.ஜே.பி.!
மக்கள் பலம் என்னும் இரும்புக்கோட்டை தி.மு.க. அரசு -
தக்கைகளால் அதனைத் தகர்க்க முடியாது!
மக்கள் வளர்ச்சித் திட்டத்தால் மக்கள் பலத்தோடு ஆட்சி நடத்தும் ‘திராவிட மாடல்' தி.மு.க. ஆட்சியைக் குறுக்கு வழியில் வீழ்த்தலாம் என்று பி.ஜே.பி. திட்டமிடுகிறது. இரும்புக் கோட்டையைத் தக்கை களால் தகர்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த இரண்டு நாள்களாக (28, 29.11.2022) தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்தும், அவர்தம் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றியும் வர லாறு படைத்து, ‘திராவிட மாடல்' ஆட்சியின் சிறப்பை யும், செயல்திறனையும் உலகுக்கு நிரூபித்து வருகிறார்!
உடலில் வலியிருந்தாலும் -
முதலமைச்சரின் உற்சாகப் பணி!
உடலில் வலி இருந்தாலும், மனதில் வலிமையும், கடமை உணர்வுக்கே முன்னுரிமை தந்து, நாளும் உழைக்கும் உற்சாகமும், மக்களிடம் அவர் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சியும், நாளும் அவரை மக்கள் மன்றத்தின்முன் சீரிய சாதனை யாளராகவே உயர்த்துகிறது!
மனிதநேயமும், ஏழை, எளிய மக்களுக்கு கரு ணையோடு உதவிடும் பண்பில் அவரது மக்கள் குறை தீர்க்கும் சந்திப்புகளும், ‘திராவிட மாடல்' ஆட்சியில் ‘அனைவருக்கும் அனைத்தும்' தருவதில் அக்கறை காட்டுவதில் அவருக்கு நிகர் அவராகவே உள்ளார்!
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் ஓட்டைகளையும், ஒழுங்கீன முறைகேடுகளையும் களைவதற்கு எந்த ஓர் ஆளுமைத் திறன் கொண்ட முதலமைச்சருக்கும் மூன்று பத்தாண்டுகள் ஆகும்!
அவர் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகியுள்ளது!
இதற்குள் அவரது சரித்திரப் பெருமையும், சாதனை யும், அதன் பயனும், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டு வதாக உள்ளது!
‘திராவிட மாடலை'க் காப்பியடிக்கிறதா
குஜராத் மாடல்!
‘குஜராத் மாடல்' என்று தம்பட்டமடிக்கப்பட்ட ‘மாடலே'கூட, ‘திராவிட மாடலைக்' காப்பியடிக்க முயற்சி(?)ப்பதாகும். ஆனால், பி.ஜே.பி.யின் அடிப் படைத் தத்துவமே மாறுபாடானது. இப்போது நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சியின் நீட்சியான அண்ணா, கலைஞர் ஆகியோரின் சாதனைகளை மேலும் காத்தும், விரித்தும் பெருக்கியும், ‘திராவிட மாடல்' ஆட்சி அதன் புகழ் ஒளியை இந்த பூமியில் நாளும் பதித்து வருகிறது!
இதைப் பொறுக்க முடியாதவர்களும், ஆட்சியை இழந்தவர்களும், ஆட்சிக் கனவில் மிதக்கும் அடிப் படையற்ற அவசரக்காரர்களும், ஆரிய பதைபதைப் பாளர்களும் நாளும் அங்கலாய்க்கின்றனர்; தங்கள் வசமுள்ள ஊடகங்களின் வாயிலாகக் ‘கோணிப் புளுகன் கோயபல்சின் குருநாதர்களாகி' தொடர்ந்து அவதூறு களை தி.மு.க. ஆட்சிமீது அள்ளி வீசுகிறார்கள்!
ஒன்றியத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சியின் சில வித்தைகள் - சில வியூகங்கள்மூலம் குறுக்கு வழியில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நப்பாசையோடு பதவி இழந்ததோடு, நாளும் அண்ணா, எம்.ஜி.ஆர். கொள்கை வழிமுறை களையும்கூட துறந்துவிட்டு, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அ.தி.மு.க.வை தன் கைத்தடியாகப் பயன்படுத்த திட்டமிடுகிறது.
நம் முதலமைச்சர், நெற்றியடிபோல், நேற்றைய உரையில் அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா?
‘‘தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று சிலருக்கு வயிறு எரிகிறது; சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க பல்வேறு உத்திகளில் ஈடுபட்டுள்ளனர்!'' என்று மக் களுக்கு விளக்கியுள்ளார்.
‘‘ஆட்சியை விமர்சனம் செய்ய உரிமை உண்டு; விஷமப் பிரச்சாரத்திற்கு இடம்தர முடியாது'' என்று திட்டவட்டமாக அறுதியிட்டு அத்தகைய சக்திகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்!
முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளவர்களின் இடத்தைப் பறித்து அந்தக் கட்சியைக் கூறுபோட்டு பிளவுபடுத்தி, ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி. திட்டமிட்டு, ‘‘முதல் இல்லா வியாபாரம்போல'' செயல்படுகிறது. மக்கள் ஆதர வின்றியே, மற்ற மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டையும் ஆக்கத் திட்டமிடுகிறது. டில்லியின் ஏவலுக்குக் கீழ்ப் படிந்தவர்களாகி, தங்கள் பலத்தை பலவீனமாக்கிடும் பந்தயம் கட்டி கெட்டுப் போக ஆயத்தமாகி நிற் போருக்கிடையே நமது முதலமைச்சர் நாளும் தன் பணி, மக்கள் பணி என்பதை மகிழ்ச்சியோடு செய்து கொண் டுள்ளார்.
மின்மினிகள் மின்சாரத்தோடு
போட்டிப் போடுவதா?
ஆளுநராக அனுப்பப்பட்ட ஒருவர் ஒரு ‘போட்டி அரசு'போல மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் கடமையினைச் செய்யாமல், கொள்கை முடிவுகளையே எதிர்த்துப் பேசிடும் அரசமைப்புச் சட்ட விரோத வேலைகளைச் செய்தும், இந்த ஆட்சிக்கு நித்தம் நித்தம் தொல்லை தருகிறார்!
நாட்டில் தண்டனைக்குரிய பகுதியோ என்று முன்பு கருதப்பட்ட பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று முன்னேறிய தொழில்பகுதிகள், கல்விக் கூடங்கள் பெருகிய கல்விக் கண் கலங்கரை வெளிச்சங்கள்மூலம் தலைகீழ் மாற்றத்தினை ‘திராவிட மாடல்' ஆட்சி நாளும் செய்து வருகிறது!
மின்மினிகள் மின்சாரத்தோடு போட்டியிட்டு தோற் கடிக்கக் கனவு கண்டு வித்தைக்காரர்களாக மாறிவரு வதன் பலன் பூஜ்யம்தான்!
தக்கைகளால் இரும்புக்கோட்டையைத்
தகர்க்க முடியாது
அமைதிப்பூங்காவாக - மதவெறி மாய்த்து, மனித நேயம் காக்கும் மண்ணாக ‘பெரியார் மண்' அன்றும், இன்றும் திகழும் நிலையில், இரும்புக்கோட்டையைத் தகர்க்கலாம் என்று தக்கைகள் நினைத்தால் அவர்கள் ஆதிக்கம் திராவிடர் ஆட்சி பெற்றுள்ள மக்கள் பலத்தாலும், அதன் கொள்கை வீரியத்தாலும், சாதனை களின் வீச்சுகளாலும் முறியடிக்கப்பட்டே தீரும்.
அதைத்தான் ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரின் பிரகடனம் - பிதற்றுவோருக்குத் தக்க பதிலடியாக உள்ளது! ''நிழல்கள் ஒருபோதும் நிஜங்களாகி விட முடியாது'' என்பதை உணரட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.11.2022
No comments:
Post a Comment