ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு ஏன்? ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு ஏன்? ஏன்?

"க்யா ச்சாஹியே சாவல் யா சீனி. ஹிந்தி பாத் கர்னே தோ மிலேகா. நஹி தோ ஜாவோ"

"என்ன வேணும்? அரிசியா? சர்க்கரையா? ஹிந்தி தெரிஞ்சா நில்லு இல்லேன்னா வெளியே போ!"

வீட்டிலிருந்து ரேசன் பொருள் வாங்கப் போகும் உங்கள் அம்மாவிடமோ, அப்பாவிடமோ ‘உனக்கு ஹிந்தி தெரிந்தால் தான் இனி அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை கிடைக்கும்.ஹிந்திதெரியாத உன்னிடம் என்னால் பேச முடியாது. போ வெளியே!’ என்று ஒரு ரேசன் கடை ஊழியர் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படியெல்லாமா வரப்போகிறது என்று ரொம்ப யோசிக்காதீர்கள்! வெகு விரைவில் அந்த நிலைக்கு வரக் கூடும். இப்போது இந்த நிலை இல்லை என் கிறீர்களா?

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில், அரசு வங்கி ஒன்றில் கடன் கேட்கச் சென்ற மருத்துவரை, “ஹிந்தி தெரியாத உனக்கு வங்கிக் கடன் தர மாட்டேன்” என்று ஒரு வடநாட்டுக்கார அதிகாரி திருப்பி அனுப்பவில்லையா?

தமிழ்நாட்டின் விமானநிலையத்தில் வேலை பார்க்கும் பாதுகாப்பு ஊழியர், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களைப் பார்த்து, 'ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?’ என்று இளக்காரமாகக் கேள்வி எழுப்பவில்லையா? 

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தமிழில் அறிவிப்பு சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் கோவைக்கு, தமிழர்கள் அதிகம் பய ணிக்கும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு இல்லாமல், ஹிந்தியில் சொல்லப்படுகிறதே, யாருக்காக? 

வங்கி சலான்கள், ஏ.டி.எம்.கள், ரயில்வே, தேசிய கல்விக் கொள்கை, ஒன்றிய அரசு நிறுவ னங்களின் பெயர்கள், அறிக்கைகள், கடிதங்கள், தேர்வுகள், வேலைவாய்ப்பு என்று எங்கே பார்த்தாலும் ஹிந்தித் திணிப்பு கண்ணுக்குத் தென்படவில்லையா?

தமிழ்நாட்டுல, சாதாரண ஓட்டல்களில் போய் அங்கே சர்வர் வேலை பார்க்கிற வடநாட் டுக்காரரிடம், ‘தோ தோசா... ஏக் டீ’ என்று ஆர்டர் போட்டதில்லையா நீங்கள்?

பிறகு...

நாளை இதே நிலை தமிழர்களின் அடிப்படைத் தேவைகளின்போதும் எழாதா? 

ஹிந்தித் திணிப்புக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தைச் செய்து, தமிழைக் காத்து வைத்திருக்கும் தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

எப்படியாவது பள்ளிகளில், கல்லூரிகளில் ஹிந்தி- சமஸ்கிருதத்தைத் திணித்து, ஆங்கிலத்தை ஒழித்து, நம்மைப் படுகுழியில் தள்ள நினைக்கிறது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.அரசு.

அதற்காகத் தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அறிக்கை ஒன்றை இந்தியாவின் குடியரசுத் தலைவரிடம் தந்திருக்கிறது.

என்ன சொல்கிறார்கள் அதில்? மத்தியப் பல் கலைக்கழகங்களிலும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும்ஹிந்தி வழியிலேயே பாடம் நடத்தப்படவேண்டும்.

இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளில் இங்கி லீஷை நீக்கிவிட்டு, ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம்.

மூன்றாவது விருப்ப மொழி என்ற பெயரில் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பு. (விருப்ப மொழி யாக மராத்தியையோ, வங்காள மொழியையோ படிக்க விரும்பினால், உங்களுக்காக ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவாரா? நிச்சயம் இல்லை. விருப்ப மொழி என்பது வெறும் பேப்பரில் இருக்கும். ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் கற்க மட்டுமே வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.)

நீட், கியூட், தேசியக் கல்விக் கொள்கை என்று நம் கல்வியை அழிக்கத் தானே இதுவரை பாஜக பாடுபட்டிருக்கிறது.

நம்முடைய கல்விக்கோ, இட ஒதுக்கீட்டுக்கோ, மேம்பாட்டுக்கோ இதுவரை எதுவுமே செய்யாத பா.ஜ.க. - திடீரென்று ஹிந்தி படித்தால் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் என்று சொல்வது அசல் ஏமாற்றுவித்தை அல்லவா?

இப்போது ஹிந்தியை கல்வி, வேலை வாய்ப்பு என எல்லாவற்றிலும் கட்டாயப்படுத்தினால், மொழியைப் படிப்பதில் தோல்வி அடைந்து நம்மில் பலர் கல்வியில் இருந்து வெளியேறி விடுவார்கள். 

ஹிந்தியில் தான் எல்லாம் என்றால், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் களுடன் நாம் மோதினால் யார் வெல்வார்? 

இல்லை, ஹிந்திதான் எதிர்காலம். அதிலேயே இனி எல்லாம் வைத்துக் கொள்வோம் என்று நினைத்தால், தமிழ் அழியும். இரண்டில் எதுவென்றாலும் அவர் களுக்கு மகிழ்ச்சி தானே!

அதனால் தான் ஹிந்தித் திணிப்பு! எந்த வடிவில் வந்தாலும், எத்தனை அடக்குமுறைகள் என்றாலும் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாட்டு மாணவர்கள் ஏற்க மாட்டோம். ‘எங்கள் எதிர்காலத்தைப் பாழாக்க, எங்கள் தாய் மொழியை அழிக்க ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று நாம் உரத்துக் குரல் எழுப்ப வேண்டிய காலம் இது! 

எப்போதெல்லாம் எதிர்த்தோம்?

1937-இல் ஹிந்தி கட்டாயப் பாடம் என்றார்கள். தந்தை பெரியார், மறைமலையடிகள் உள்ளிட்டோர் தலைமையில் மாணவர்கள் ஒன்று திரண்டு விரட்டி யடித்தனர்

1948-இல் விரும்பினால் படிக்கலாம் என்று நூல் விட்டுப் பார்த்தார்கள். விரும்பவில்லை என்றோம்.

1955-இல் ஹிந்தி - தேசியக் கொடி கொளுத்தப்படும் என்றார் பெரியார் ஹிந்தி பாம்பு புற்றில் பதுங்கிக் கொண்டது.

அதற்கும் பிறகு, எத்தனை எத்தனை முறை ஹிந்தி- சமஸ்கிருதத்தின் படையெடுப்பு? ஒவ்வொரு முறையும் போராடிப் போராடித் தான் ஹிந்திப் பாம்பு தமிழ்நாட்டில் நுழையாமல் தடுத்திருக்கிறோம். 

...................

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்லவா? ஹிந்தி நம் நாட்டை ஒன்றுபடுத்தாதா?

இல்லை.ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை. சட்டப்படி தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. அலுவலகப் பயன்பாட்டுக்கான மொழிகள் ஹிந்தியும் ஆங்கிலமும். இது தவிர இந்திய அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 (ஹிந்தி, தமிழ் உள்பட). அவை அனைத்துக்கும் சம உரிமை, தகுதி வழங்கப்பட வேண்டும். ஆனால், ஹிந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் மட்டும் கோடி கோடியாய்ச் செலவு செய்கிறது இந்திய ஒன்றிய அரசு. 

ஹிந்தி பேசும் மாநிலங்களை விட,ஹிந்தி பேசாத மாநிலங்கள் தான் அதிகம். ஹிந்தி பேசாத மக்கள் தான் அதிகம். அனைவருக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் மட்டும் தான். 

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, மகாராட்டிரா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

ராஜஸ்தானி, பீகாரி, ஹரியானி, போஜ்பூரி, மைதிலி, சிந்தி, கடிபோலி என 30க்கும் மேற்பட்ட மொழிகளை விழுங்கிவிட்டது ஹிந்தி. குஜராத்தி, மராத்தி, வங்கம் என அடுத்த மொழிகளை ஏப்பம் விட்டு, அம் மொழிகளை அழித்து ஒரு மொழி ஆதிக்கம் செலுத்துவது ஒற்றுமைக்கு வழிவகுக்குமா? வேற்றுமை வளர வழிவகுக்குமா?

...................

ஏன் ஹிந்தியை எதிர்க்கிறோம்? 

ஆங்கிலத்தைக் கற்கிறோம்?

ஹிந்தியும் ஒரு மொழி தானே! கற்பதில் என்ன தவறு? என்று உங்களுக்குத் தோன்றலாம். ஹிந்தியை ஒரு மொழியாக யாரும் கற்பதற்குத் தமிழ்நாட்டில் தடையில்லை. இன்றும் ஹிந்திப் பிரச்சார சபாக்கள் உண்டு,ஹிந்திவகுப்புகளில் படிப்போர் உண்டு. ஹிந்தித் தேர்வுகள் எழுதித் தேர்வோர் உண்டு. வேண்டுவோர் படிக்கட்டும். எல்லோருக்கும் திணிக்காதே என்பது தான் நம் குரல்.

ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழுடன் ஆங்கிலத்தையும் படித்ததால் தான் இன்று உலக அளவில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் தமிழர்கள் சிறந்து புகழ்பெறுகிறார்கள். 

ஹிந்தி படித்தால் நன்மை என்றால்,ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், ஹிந்தியையே தாய்மொழியாகக் கொண்ட வர்கள் நம் தமிழ்நாட்டுக்குக் கூலி வேலைக்கு வருவார்களா? 

தமிழ்நாட்டிலிருந்து  skilled labour களாக வடநாட்டுக்கு வேலைக்குப் போகிற வர்களைவிட, அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் என்று அயல்நாடுகளுக்கு வேலைக்குப் போகும் தமிழர்கள் தான் அதிகம். அப்படியென்றால், ஹிந்தியைவிட அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்பது தான் வேலைவாய்ப்புக்குப் பயன்படும். அதற்காக அனைவரும் கற்க வேண்டுமா?

ஹிந்தி கற்காததால் குடி முழுகிப் போச்சு என்று புலம்புபவர்கள், “ஹிந்தி தெரியாததால் பானிபூரி விற்பவரிடம் பேசமுடியவில்லை. குல்பி விற்பவரிடம் பேரம் பேச முடியவில்லை. கூர்க்காவிடம் பேச முடியவில்லை” என்று சொல்வார்களே தவிர, 

ஹிந்தி தெரியாததால் எனக்கு மருத்துவ அறிவு கிடைக்கவில்லை, பொறியாளருடன் பேச முடிய வில்லை; பொருளியல் அறிஞரின் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை, புதுமைச் சிந்தனை, உலக அறிவு கிடைக்கவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? 

எதற்காக ஒரு மொழியை நாம் கற்க வேண்டும்? பானிபூரியில் மசாலாவை அதிகம் வைக்கச் சொல்லி பேரம் பேசவா? உலக அறிவை வளர்த்துக் கொள்ளவா?

ஹிந்தியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்டா? அதைப் பற்றிய நூல்கள் உண்டா? தமிழில் கலைச் சொற்கள் உண்டு. அதுகூட ஹிந்தியில் கிடையாது. மருத்துவப் புதுமை ஹிந்தியில் நடக்கிறதா? அல்லது ஆங்கிலத்தில் கிடைக்கிறதா? 

"நம் தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்! உலகோடு உரையாடுவதற்கு ஆங்கிலம்” என்ற இருமொழிக் கொள்கை நம்முடையது. வேறு மொழிகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாருக்கு வேண்டுமோ அவர்கள் கற்றுக் கொள்ளட்டுமே!

தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிக் கொள் கையால் தமிழர்களாகிய நாம் பெற்றதும், கற்றதும், சாதித்ததும் அதிகம் - ஹிந்தி கற்காததால் இழந்தது எதுவும் இல்லை.

...................

எனவே, நம் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதில் தான் அடங்கியுள்ளது. நமக்கு மட்டுமல்ல... இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உரிமை வேண்டும் என்ற குரலுக்கு தமிழ்நாடு தான் முன்னோடி - வழிகாட்டி! இன்று அந்த உரிமைக்குரலை முன்னெடுத்துச் செல்லவேண்டி யது மாணவர்களாகிய நம் கடமை!

மொழி காக்கப் புறப்படுவோம்! நம் வருங்கால வாழ்க்கையைப் பாதுகாப்போம்!

இது அரசியல் பிரச்சினையல்ல... நம் எதிர் காலம்... நம் படிப்பு, நம் வேலை, நம் வாழ்க்கை... அத்தனையும் இதில் அடங்கியிருக்கிறது.

மாணவர்கள் ஒன்று திரண்டால், சாதிக்க முடியாதது உண்டா?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இணைவோம்! வெல்வோம்!

- திராவிட மாணவர் கழகம்

குறிப்பு: நவம்பர் 4 அன்று திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

வருவீர்! இணைவீர்!!

No comments:

Post a Comment