மறக்க முடியுமா நவம்பர் இருபத்தாறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

மறக்க முடியுமா நவம்பர் இருபத்தாறை!

1957 நவம்பர் 26ஆம் தேதி - ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட நகலை  தந்தை பெரியார் அவர்களின் ஆணைப்படி திராவிடர் கழகத் தோழர்கள் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர். மூன்றாண்டு வரை தண்டனை பெற்றதுண்டு, பலர் இன்னுயிரை இழந்தனர். அந்தக் கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையிலும், ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும், அதே நவம்பர் 26 நாளன்று தமிழ்நாடெங்கும் பொதுக் கூட்டங்களை திராவிடர் கழகம் நடத்திட உள்ளது. அதனையொட்டி திரும்பிப் பார்க்கச் செய்யும் கட்டுரை இது.

அறிவு ஆசான் தந்தை பெரியாரின் தலைமையேற்று எவ்வித ஆசாபாசங்களுக்கும் ஆளாகாமல் தொண்டறத்தை ஏற்றுக்களப் பணிகள் செய்துவரும் பெரியார் தொண்டர்கள் பல பல ஆயிரம். தஞ்சையில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்ட மாநாடு நடந்து அந்த மாநாட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவரின் கட்டளையையேற்று நாடெங்கும் ஜாதியைப் பாதுகாக் கும் சட்டப் பிரிவை எதிர்த்து 10,000க்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர். அரசு 6 மாதம் முதல் 3 ஆண்டுவரை சிறை செல்ல வேண்டி வரும் என்று மிரட்டியது அதைப் பற்றி கவலை கொள்ளாமல் சிறைக்குச் சென்றனர். அவற்றில் குடந்தை அருகில் உள்ள சோழபுரத்தில் ஊரே கலந்து கொண்டு சட்ட நகலை கொளுத்தியது வியப்பிற்குரியது. 24 பேரை மட்டும் கைது செய்து வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தது. மீதமிருந்த தோழர்கள் எங்களையும் கைது செய்யுங்கள் எனக் கோரி போராட்டம் நடத்தினர். காவல் துறை செய்வதறி யாமல் குடந்தையிலுள்ள கழக தலைவர்களை அழைத்து வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக சோழபுரத்தில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் எஸ்.வி. குமாரசாமி தலைமையில் சட்ட நகலை கொளுத்துவது என்று முடி வெடுத்து பிரச்சாரம் செய்தனர். அதே வேளையில் பிராமணாள் பெயர்ப் பலகை அழிக்கும் ஒழிப்புப் போராட்டம் சென்னையில் நடந்தது. சோழபுரத்திலிருந்து எஸ். வி. குமார சாமி, கோவிந்தசாமி, பன்னீர்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

சோழபுரம் எஸ். முருகேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. சோழபுரத்தில் மூன்று இடங்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் சட்ட நகலை கொளுத்தினர். "ஜாதி ஒழிக - தந்தை பெரியார் வாழ்க" என சட்ட நகலை கொளுத்தினர். காவல்துறையினர் லாரிகளில் ஏற்றி திருப்பனந்தாள் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கொளுத்திய எல்லோ ரையும் அழைத்து செல்லாமல் ஆயிரக் கணக்கான பேர்களை மட்டும் லாரியில் ஏற்றி சென்றனர். லாரியில் கொண்டு சென்றவர்களில் 24 பேர்களை மட்டும் கைது செய்தனர்.

1. முருகேசன், புதுத்தெரு, சோழபுரம். 

2. நடேசன், புதுத்தெரு, சோழபுரம். 

3. ம.பிச்சை , புதுத்தெரு, சோழபுரம். 

4. சி.மாரிமுத்து, புதுத்தெரு, சோழபுரம். 

5. பொ.சுப்பிரமணி, புதுத்தெரு , சோழபுரம். 

6. ம.அழகப்பன், புதுத்தெரு , சோழபுரம். 

7. தொ. துரைசாமி, புதுத்தெரு, சோழபுரம். 

8. குண்டுகண்ணு , புதுத்தெரு, சோழபுரம். 

9. பொன்னுசாமி, புதுத்தெரு, சோழபுரம். 

10. தாஜிதின் கீழத்தெரு , புதுத்தெரு , சோழபுரம். 

11. கு. மாணிக்கம், நடுத்தெரு , சோழபுரம் 

12. வீ.பெருமாள், மானம்பாடி 

13. கு.சண்முகம், துலுக்கவெளி

14. வெ.மாரிமுத்து, இராமானுஜபுரம் 

15. கதிர்வேல், இராமானுஜபுரம் 

16. ஜெகநாதன், நரிக்குடி 

17. வெ.வீரப்பன், நரிக்குடி 

18. சிவக்கொழுந்து, நரிக்குடி

19. இராமலிங்கம், சேங்கனூர் 

20. விசுவலிங்கம், சேங்கனூர்

21. வை.தங்கராசு , சேங்கனூர்

22. சா.கலியபெருமாள், சேங்கனூர் 

23. சின்னதுரை, சேங்கனூர் 

24. ந.கலியபெருமாள், சேங்கனூர் 

கைது செய்யப்பட்ட தோழர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்காக குடந்தை நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு உணவு சோழபுரம் எஸ்.வி. குமாரசாமி கடையில் தயார் செய்யப்பட்டு - 50 பேர்களுக்கு மிதிவண்டி மூலம் அவர் தம்பி எஸ்.வி. விசுவநாதன் மூலம் அனுப்பி வைத்தார். சமயத்தில் தினமும்கூட விசாரணை நடந்தது. ஒருநாள் உணவு எடுத்து செல்லும் வழியில் விளந்த கண்டம் என்ற இடத்தில் லாரி மோதி மயங்கி விழுந்தார்.

விசுவநாதன் இறந்து விட்டதாக வதந்தியால் சோழபுரத்திற்கு பரவி கடைகள் அடைக்கப்பட்டு பொது மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடந்தது. குடந்தை சென்ற தோழர்கள் விசுவநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி தேறி வருகிறார் என்று தகவல் சொன்ன பிறகு மக்கள் கலைந்து சென்றனர் என்ற வரலாறு சோழபுரத்திற்கு உண்டு. 

அன்புடன், 

ஜாதி ஒழிப்பு வீரர்களிடம் 

கேட்ட தகவல்களை  தெரிவிப்பது

குடந்தை கு.கவுதமன்


No comments:

Post a Comment