"சமூக நீதி - நேற்று, இன்று, நாளை"
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கவுரை
சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை சார்பில் 29.11.2022 அன்று கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. ‘சமூகநீதி - நேற்று, இன்று, நாளை' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். பொருளாதாரப் பேராசிரியர் மு.நாகநாதன், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் கோ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்று சமூகநீதி வரலாற்று கருத்துகளை வழங்கினர்.
பல்கலைக்கழக குற்றவியல் துறை கருத்தரங்கக் கூடத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பல துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மேனாள் கல்விப் பணி ஆற்றிய அறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அளவில் பங்கேற்றுச் சமூகநீதிக் கருத்து உரை வெள்ளத்தில் தோய்ந்து மகிழ்ந்து நல் ஆக்கம் பெற்றனர்.
கருத்தரங்கிற்கு வருகை தந்தோரை வரவேற்று தனது முகப்புரையினை பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் வழங்கினார்.
பேராசிரியர் மு.நாகநாதன்
பொருளாதார வல்லுநரும், தமிழ்நாடு அரசின் திட்டக் குழு மேனாள் துணைத் தலைவருமான பேராசிரியர் மு.நாகநாதன் தமது உரையில் சமூக நீதி வரலாற்றுப் போரில நேர் கொண்ட அறைகூவல்கள், விளைவுகள், சமூகம் அடைந்த மேம்பாடு என பல செய்திகளை, பல தரவுகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட வகுப்புரிமை ஆணை செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய நிலையில், தந்தை பெரியார் மக்கள் மன்றத்தில் வகுப்புரிமை தொடர்வதற்குப் அனைவரையும் ஒன்று திரட்டி, ஒருங்கிணைத்து பெரும் போராட்டத்தினை நடத்தினார். டில்லி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து, முதல் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு புதிய விதி 15(4) சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழிமுறை தொடர்ந்திடச் செய்தார். இதுகுறித்த முழுமையான வரலாற்றுச் செய்திகளை பொதுவெளியில் சமூகநீதியால் பயன்பெறுபவர்கள் கூட அறிந்திடாத நிலைமைகள் நிலவுகின்றன.
சிள்தன் சந்திரசூட் எழுதிய "The Cases that India forgot" (இந்தியா மறந்துவிட்ட நீதிமன்ற வழக்குகள்) எனும் நூலில் அரிய பல செய்திகள் உள்ளன.
கடந்த கால சமூகநீதி வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டால்தான் வருங்கால அறைகூவல்களை நேர்கொண்டு இடஒதுக்கீடு தொடர்ந்திட, உரியவர்க ளுக்கு சமூகநீதி கிடைத்திட வழி ஏற்படும்.
சமூக நீதி எதிர்ப்பாளர்கள் விழிப்பாக உள்ளனர், சமூக நீதியால் பயன்பெறுபவர்களைவிட, சமூக நீதி பற்றிய சரியான புரிதலை உரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். திரிபுவாத, திசை திருப்பல் நடவடிக்கைகளை அப்பொழுதுதான் முறியடிக்க முடியும்.
இடஒதுக்கீடு மக்களை பிளவுபடுத்துவதாக எதிர்ப் பாளர்கள் பேசி வருகின்றனர். ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தியவர்களால் உருவாக்கப்பட்ட ஏற்றத் தாழ்வு களை, பாகுபாட்டினை போக்குவதற்குத்தான் "இடஒதுக் கீடு" தொடர வேண்டும் என்பது பரவலாக அறியப்பட வேண்டும்‘ இது பற்றிய கருத்துப் பரவலை சமூக அறிஞர்கள் பலர் எளிதாக எடுத்துரைத்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த் தியா சென், இடஒதுக்கீடு பற்றிய புரிதலை, விளக்கத்தினை எளிதாகக் கூறுகிறார். அனைவருக்கும் விளங்கிடும் வகையில் கூறுகிறார்.
"இடஒதுக்கீட்டை ஓடும் நதியில் உள்ள ஒரு வளைவை மட்டும் வைத்து புரிந்து கொள்ளக்கூடாது. நதியின் தொடக்கம் முதல், கடலில் கலக்கும் வரை உள்ள நதியின் போக்கு - பலவித நிலைகளைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்".
கோ.கருணாநிதி
அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமது உரையில் நாடு தழுவிய அளவில் சமூக நீதி வளர்ச்சி பெற்ற நிலைகளை எடுத்துரைத்தார்.
1800களின் மத்தியில் மராட்டிய மாநிலத்தில் ஜோதிபா பூலே சமூகநீதிக்கு அழுத்தமான குரல் எழுப்பி, களம் இறங்கிச் செயல்பட்டார். சமூகத்தின் பல்வேறு எதிர்ப்பு களைச் சந்தித்து பெண்கள் கல்வி கற்க தனிப்பள்ளிக் கூடங்களைத் தொடங்கியவர். தனது மனைவி சாவித் திரிபா பூலே அவர்களுக்கு கற்பித்து அவரையே ஆசிரி யராகக் கொண்டு பெண்கல்விக்கு புரட்சி கண்டார்.
1902அம் ஆண்டில் மராட்டிய மாநில கோல்காபூர் சமஸ்தானத்தில் மன்னர் சத்ரபதி சாகுமகாராஜ் சமூகநீதி பற்றிய முதல் அரசாணையை வெளியிட்டார். அரசுப் பணிகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு வழங்கிய முதல் சமூகநீதிப் போராளி சாகுமகாரஜ் ஆவார்.
1918இல் மைசூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கு, சமூகநீதி கிடைக்க மில்லர் குழு முன்மாதிரியாக அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கின.
பிரிட்டிஷ் ஆட்சியில் அலெக்சாண்டர் கார்டியூ மக்கள் தொகை கணக்கு பற்றிய தனது அறிக்கையில் சென்னை மாகாணத்தில் பெரும்பாலான அரசுப் பணி களில் பார்ப்பனர்களே உள்ளனர்; ஒரே குடும்பத்தைச் சார்ந்தோரே உள்ளனர். அனைவருக்கும் - அனைத்துப் பிரிவினருக்கும் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார்.
அவர்தம் பரிந்துரைகளை உள்வாங்கி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் 1920இல் ஆட்சிக்கு வந்து, 1921லும், 1922லும் வகுப்புரிமைக்கான ஆணைகளைப் பிறப்பித்தது, ஆனால் ஆணைகள் நடைமுறைக்கு வராமல் ஆதிக்க வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்த னர். பின்னர் 1928ஆம் ஆண்டில்தான் வகுப்புரிமை ஆணை நடை முறைக்கு வந்தது. அன்று முதல் நடைமுறையில் இருந்த ஆணை, 1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, ‘வகுப்புரிமை ஆணை செல்லாது' என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. தந்தை பெரியார் மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தினை நடத்தி அரசமைப்புச் சட்டத்தினை திருத்த வைத்து சமூகநீதி - இடஒதுக்கீடு தொடர்ந்திட காரணமாக இருந்தார்.
பின்னர் படிப்படியாக இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டு மொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடு என வந்த நிலையில் - அதற்கு ஆபத்து வந்த நிலையில் அதனைப் பாதுகாக்க உரிய ஆலோசனை சட்ட வடிவினை வழங்கி, முதன்முறையில் சட்டம் இயற்றி, அரசமைப்புச் சட்டத்தினை திருத்தி, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார்.
1992 மய்ய அரசிலே பிற்படுத்தப்பட்டவர் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மண்டல் பரிந்துரை மூலம் நடைமுறையானது.
2006ஆம் ஆண்டு மத்திய பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு என அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் 9 விழுக்காடு என மூன்று ஆண்டு களில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய இடஒதுக்கீடு 5, 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
ஆனால் 2019ஆம் ஆண்டில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த உயர் ஜாதியினரில் ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு, ஒரு வார காலத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலை வர் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப் பட்டது. நடைமுறைக்கும் வந்தது.
அதுவரை இடஒதுக்கீடு நடைமுறைக்கு இருந்த வந்த தடைக் கற்கள், 10 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு இல்லாத நிலை சமூகநீதியின் உண்மையான புரிதலை மடை மாற்றும் விதமாக உள்ளதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நேற்றைய வரலாற்றை உணர்ந்ததால்தான் வருங்கால சமூகநீதிப் பயணம் சரியாக இருக்க முடியும். சமூக நீதியில் பயன்பெறுவோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தமிழர் தலைவர்
கருத்தரங்கில் நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எளிமையாக மாணவ - மாணவியர் சமூகநீதிக் கருத்துகளை புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பது போல விளக்கமளித்துப் பேசினார். கருத்துகளை எளிமைப்படுத்திச் சொல்வது கடினமானது. எளிமைப்படுத்திச் சொல்லும் கடினக் கலையில் வல்லவரான ஆசிரியர் அவர்கள் மாணவ மாணவியரை கேள்வி கேட்டு பதில் பெற்று கருத்து வழங்கிடும் வகையில் உரையாற்றினார்.
தொடக்கத்தில், தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்ட மாணவனாக பயின்ற காலத்தில் தேர்வில் முதல் இடம் பெற்று சர் வில்லியம் மெயர் அறக்கட்டளை வழங்கிய தங்கப்பதக் கத்தை பெற்றதை நினைவு கூர்ந்தார். அவர் பெயரிலான சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை கருத்தரங்கில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் - பெருமையாகக் கருதுகிறேன்.
இதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு போராடிய ஆசிரியப் பெருமக்களிடம் நான் ஆற்றிய உரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகநீதி பற்றி ஆற்றிய உரையும் சேர்த்து ‘சமூகநீதி‘ எனும் தலைப்பில் புத்தகமாக வெளி வந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு சமூகநீதி பற்றிய கூட்டத்தில் பங்கேற்க நேர்ந்தது. அதில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும் பங்கேற்று உரையாற்றினார். அந்த நீதிபதி இடஒதுக்கீடு வழங்கிட பொருளாதார அளவு கோல் கூடாதென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தவர். அவர் உரை யாற்றும் பொழுது தன்னிடம் இடஒதுக்கீடு வழக்கு விசா ரித்திட வந்த நிலையில் சமூகநீதி பற்றிய முழுமையான புரிதலை தான் அறிந்து கொள்ள கி.வீரமணி எழுதிய ‘சமூகநீதி‘ புத்தகம் பெரிதும் உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார். இன்று கூட நானும் கருத்தரங்கில் அறிஞர்கள் ஆற்றிய உரைகளும் புத்தகமாக வெளிவந்து பலரும் படித்துப் பயன் பெற விரும்புகிறேன்.
இப்படியாகக் கூறி தமிழர் தலைவர் மாணவ மாணவி யரைப் பார்த்து "உங்களில் எத்தனைக் குடும்பத்தில் தாத்தாமார்கள் பட்டதாரியாக இருந்தனர்?" என்ற கேள்வியை எழுப்பினார்.
5 பேர் கை உயர்த்தினர். பின்னர் "எத்தனை குடும்ப பாட்டிமார்கள் பட்டதாரிகள்?" என்றபொழுது ஒருவர் மட்டும் கை தூக்கினார்.
இன்று நீங்கள் பட்டப்படிப்பு, முதுநிலை படிக்க வந்துள்ளீர்கள். இதுதான் சமூகநீதி நேற்று - இன்று என்பது கல்விக்கு கடவுளான சரஸ்வதியின் பெயரைக் கொண்ட பல பாட்டிமார்கள் எழுதப் படிக்கத் தெரியாத வர்களாக இருந்தனர் என்பதுதான் கடந்த கால நிலை. கல்வி கற்காமல் தடுத்தது எது? இதுதான் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
தான் சொல்லிக் கொடுக்காமலே வில்வித்தையை கற்றுக் கொண்ட நிபுணத்துவம் பெற்ற ஏகலைவனிடம் "குருதட்சணை" அவனது கட்டை விரலைக் கேட்ட துரோணாச்சாரியார் இன்றும் பெருமையாகக் கருதப்படு கின்றார். விளையாட்டுக் கலை கற்பித்தலில் சிறந்தோ ருக்கு "துரோணாச்சாரியார் விருது" பல ஆண்டுகாலமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருது வழங் கப்படலாம். விருதின் பெயர் சமூகநீதியைச் சிதைக்கும் வெளிப்பாடுதான்.
இளைய தலைமுறையினர் சமூக நீதி பற்றிய உரிய கருத்ததுகளை அறிந்து கொள்ள முன் வர வேண்டும்.
தொடர்ந்து, கல்விக்கென போராடி ஒடுக்கப்பட்ட வர்களுக்கான சமூகநீதியினை இடஒதுக்கீடு அளவு உயர்வின் மூலம் பெற்று வந்துள்ளோம். அதன் நடை முறை இன்னும் முழுமையாகவில்லை. ஆனால் சமூக நிதியின் முறையான பயணத்தை திசை திருப்பிடும் வகையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இடஒதுக்கீடு சமூகநீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய வர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. பொருளாதார அளவு கோள் கூடாது. துணிக் கடையில் வேண்டப்படும் துணியின் அளவினை உலோக, மர அளவுகோலால் அளந்து வாங்க வேண்டும்; விற்க வேண்டும். ரப்பர் அளவுகோல் பயன்படுத்தினால் சரியாக இருக்காது. ரப்பர் அளவு நிலையானது அல்லவே. நிலையில்லாத பொருளாதார அளவுகோல் கொண்டு சமூகத்தில் நிலைத் திருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அளந்திட வேண்டும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.9000 என உத்தரவு பிறப் பித்தார். அதனை எதிர்த்து ஒராண்டு காலம் போராட்டம் நடத்தினோம். அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை அவரது கட்சி தழுவியது. அனைத்துக் கட்சியைக் கூட்டினார். அதில் பங்கேற்றிட திராவிடர் கழகத்திற்கு அழைப்பு வந்தது. கூட்டத்தில் முதல்வர் தொடர்ந்து எதிர்த்து வரும் கி.வீரமணி அவர்கள் பேசட்டும் என கூறினார். புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அறிக்கையும் கொடுத்தோம். கூட்டத்தில் விளக்கமும் அளித்தோம். வருமான வரம்பு எனும் பொருளாதார அளவீடு சமூக நீதிக்கு எதிரானது. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு - அதாவது வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற வந்ததே இடஒதுக்கீடு வழி முறை. பொருளாதார நிலை என்பது நிலையில்லாதது எனக் கூறி ஓர் எடுத்துக்காட்டைச் சுட்டிக் காட்டினோம்.
அரசு பணிபுரியும் ஒருவர் செங்கல்பட்டு அல்லது அடுத்த கிராமத்தில் பணிபுரியும் பொழுது வீட்டு வாடகை படி குறைவு. ஒட்டுமொத்தமாக ஆண்டு வருமானம் ரூ.9000க்குள் வரும். அவரது ஒரு பிள்ளைக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். அதே பணியாளர் சென்னைக்கு மாற்றலாகி வந்தால் வீட்டு வருமானப்படி, நகர குடியிருப்புப் படி என கூடுதலாக வருமானம் கிடைத்து ஆண்டு வருமானம் ரூ.9000க்கு மேலே அதிகரிக்கக் கூடும். சென்னைக்கு பணி மாறுதலில் வந்த பணியாளர் தனது அடுத்த பிள்ளைக்கு இடஒதுக்கீட்டுப் பலன் மறுக்கப்படுவார். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு இடஒதுக்கீடு, சில காலம் கழித்து அடுத்தவருக்கு இடஒதுக்கீடு மறுப்பது. இது நியாயமா? பொருளாதார அளவு கோலை இடஒதுக்கீடடில் திணித்ததால் விளை வது அநியாயமல்லவா? இடஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு சரியாகாது. நாம் சொன்னதும் ‘பளிச்‘ என்று எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ஒரு சில நாள்களில் இடஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு ஆணை திரும்பப் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 31 லிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பொருளாதார அளவுகோலிலான இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு விரைவில் மக்கள் மன்றத்தில் தனிக் கவனத்துடன் எடுத்துச் செல்லப்படும். சமூகநீதிப் பயணத்தைத் திசை திருப்பிடும் வேலைகள் முறியடிக்கப்படும். அத்தகைய சவால்களை இளைய தலைமுறை சந்திக்க வேண்டும். பாடுபட வேண்டும். சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார். (முழுப் பேச்சு விரைவில் ‘விடுதலை'யில் வெளிவரும்).
கருத்தரங்கின் நடவடிக்கைகளை பேராசிரியர் தினேஷ் வெகு நேர்த்தியாக தொகுத்தளித்தார். நிறை வாக பேராசிரியர் லட்சமணன் நன்றி கூறினார்.
கருத்தரங்க நிகழ்விற்கு, தமிழ்நாடு மாநில தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினர் குழுவின் உறுப்பினர் முனை வர் ச.தேவதாஸ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமைப் பேராசிரியர் பெ.ஜெகதீசன், செயலாளர் அ.கருணானந்தன், திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் தோழர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், கல்வியா ளர்கள், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலக் கூட்டமைப்பின் தோழர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் - செயல்பாட்டாளர்கள் மாணவப் பெருந்திரள் என பலரும் வருகை தந்திருந்தனர். கருத்தரங்க நிகழ்வு சமூகநீதி பற்றிய கருத்து விருந்தாக, கருத்துக் களஞ்சிய விளக்கமாக சிறப்பாக நடந்தேறியது.
- தொகுப்பு: வீ.குமரேசன்
No comments:
Post a Comment