நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சீனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சீனா

பீஜிங், நவ. 30- அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டது. பூமி தவிர்த்து வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை தேடும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

அந்த வகையில் நிலவு மற்றும் பூமியின் அருகேயுள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் வாழ்வியலுக்கான சூழலை தேடும் ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இதில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முன்னிலையில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது. ஆர்டிமெஸ் என்கிற திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 

இதில் முதல் படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீன விண்வெளி நிறுவன இயக்குனரின் உதவியாளரான ஜி குய்மிங் கூறுகையில், 

"விண்வெளி ஆய்வில் சீனாவின் அடிச்சுவடுகள் பூமியின் சுற்றுப்பாதையில் மட்டும் இருக்காது, நாங்கள் நிச்சயமாக மேலும் பறப்போம். நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கி, மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் சரிபார்ப்பை சீனா நிறைவு செய்துள்ளது. எனவே நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நாடு தயாராக உள்ளது. நிலவில் சீனர்கள் கால்பதிக்கும் கனவு விரைவில் நனவாகும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார். 

நிலவு குறித்த ஆராய்ச்சியில் சமீபகாலத்தில் சீனா பல மைல்கல் சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment