கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்த தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளை பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் மு. நாகநாதன் தமிழர் தலைவரின் தொடர் சமூகப் பணியினை நினைவு கூர்ந்து, சமூகநீதிக்கு அவர் ஆற்றிவரும் அரிய பணிகளை எடுத்துரைத்து - அவரை, அவர்தம் பணியினைப் போற்றும் விதமாக தந்தை பெரியார் - வீரமணியார் என்ற பெயரால் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது என (பலத்த கரவொலிகளுக்கிடையில்) அறிவித்தார்.
அறக்கட்டளை உருவாக்கத்திற்கு தனது முதல் பங்களிப்பாக ரூ.25,000த்தை வரலாற்றுத் துறைத் தலைவரிடம் வழங்கினார். பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் சார்பாக ரூ.25,000த்தை வழங்கினார். மேனாள் பேராசிரியர்கள் பெ. ஜெகதீசன் (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்), அ. கருணானந்தன் (செயலாளர்) ஒவ்வொருவரும் ரூ.10,000த்தை தமது பங்களிப்பாக வழங்கினர்.
அறக்கட்டளை உருவாக்கத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "தந்தை பெரியார் பெயரில் மட்டும் அறக்கட்டளை உருவானால் போதுமே - தான் பெரியாருள் அடக்கம்" எனப் பணிவுடன் தெரிவித்த நிலையில், அறக்கட்டளையை உருவாக்கியவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றல் ஆசிரியர் அவர்கள் என்பதன் அடையாளம்தான் அறக்கட்டளை - அந்தப் பெயரிலேயே அறக்கட்டளை உருவாக்கிட வேண்டும் என விழைவினை தெரிவித்தனர்.
தந்தை பெரியார் - வீரமணியார் அறக்கட்டளையின் பொறுப்பாளர்களாக, பேராசிரியர் அ. கருணானந்தன் மற்றும் கோ. கருணாநிதி ஆகியோர் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
புதிய அறக்கட்டளை சார்பில் சென்னை பல்கலைக் கழகத்தில் முறையாக தெரிவித்து, பின்னர் நிகழ்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
No comments:
Post a Comment