ஜகார்த்தா, நவ. 23- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று (21.11.2022) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை ஜாவா தீவுகள் ஆளுநர் ரித்வான் காமில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நவ.22 அன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. (6.21 மைல்) ஆழத்தில் இதன் மய்யப்பகுதி காணப்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தின் மய்யப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இப்பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 268 பேர் இறந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தோனேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பலி எண்ணிக்கையை இன்னும் 62 என்றளவிலேயே கூறிவருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜாவா ஆளுநர் ரித்வான் செய்தியாளர்கள் சந்திப்பில், "ஆங்காங்கே இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சுகிறோம். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்பதே எங்களின் கணிப்பு" என்றார். நிலநடுக்கத்தில் 2200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நில நடுக்கத்தினால் ஏற்பட்ட முழு சேத விவரத்தையும் கணிக்க ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்.
2004இல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 14 நாடுகளில் சுனாமியை ஏற்படுத்தியது. இதில் 226,000 மக்கள் உயிரிழந்தனர். இதில் பாதி பேர் இந்தோ னேசியாவைச் சேர்ந்தவர்களாவர். இந்தோனேசியா பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் நிலநடுக்க ஆபத்து அதிகமுள்ள வளையத்தில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுகின்றன. நேற்றைய நிலநடுக்கத்திற்குப் பின்னர் 80 முறை நில அதிர்வு இருந்ததாக மீட்புக் குழுவினர் கூறுகின்றனர். இதனால், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே பெரும்பாலான நேரத்தை சாலைகளில் கழிக்கின்றனர்.
No comments:
Post a Comment