யார் இந்த ரிஷி சுனக்? - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

யார் இந்த ரிஷி சுனக்?

5

அ.அன்வர் உசேன்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி  சுனகிடம் பிரிட்டன் பிரதமர் பதவி  வந்துள்ளது. அவரது நீண்ட நாள்  ஆசை நிறைவேறியுள்ளது. இதற்கு முன்பாக  பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் 44 நாட்களிலேயே  அவரது சொந்த கட்சியினரால் துரத்தப்பட்டுள்ளார். பணக்காரர்களுக்கு சுமார்  40 பில்லியன்  டாலர்கள் அதாவது ரூ 3.25 லட்சம் கோடி அளவுக்கு வரி சலுகைகளை அளித்து அதற்கான வருவாய் வாய்ப்புகளை உருவாக்க முடியாத காரணத்தால் பிரிட்டனின் நிதிச்சந்தை படுகுழியில் வீழ்ந்தது. பிரிட்டன் மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதன் விளைவாக சொந்த கட்சியினராலேயே டிரஸ் பதவி பறிக்கப்பட்டது. “டிரஸ் பதவி இழப்பு ஒரு துளி கண்ணீருக்கு கூட தகுதியற்றது” என ஜேக்கோபின் இதழ் எழுதியது. இதுதான் பெரும்பாலான பிரிட்டன் மக்களின் எண்ணம் கூட! இதன் தொடர்ச்சியாக ரிஷி சுனக் பிரதமர்  வாய்ப்பை பெறுகிறார். இந்தியாவில் உள்ள பலர் இதனை ‘பெருமைக்குரிய’ நிகழ்வாக கருதுகின்றனர். இதில் சங்பரிவாரத்தினரின் ஒரு பிரிவினரும் அடங்குவர். 

வாய்ப்பு பெற்ற ரிஷி சுனக்- 

வாய்ப்பு மறுக்கப்பட்ட சோனியா காந்தி

அகதியாக வந்த குடும்பத்தை சேர்ந்த ரிஷி  சுனக் உச்சபட்ச பதவியான பிரதமர் நாற்காலியில் உட்கார்வது  பிரிட்டனின் பன்முகத்தன்மையை காட்டுகிறது என பலர் கூறுகின்றனர். உலகின் பல தேசங்கள் தமது “மண்ணின் மைந்தர்களுக்கு” மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இந்த சூழலில் 1960களில் பிரிட்டனில் குடியேறிய வேறு தேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் வழிவந்தவர் பிரதமராவது குறிப்பிடத்தக்க நிகழ்வுதான். ரிஷி சுனக் மட்டுமல்ல; பல இந்திய/பாகிஸ்தான் மற்றும் ஏனைய ஆசிய ஆப்பிரிக்க தேசங்களின் வம்சாவளியினர் பிரிட் டனின் டோரி மற்றும் தொழிலாளர் கட்சிகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.   பாகிஸ்தான் வம்சா வளியை சேர்ந்த சஜித் ஜாவித் பிரிட்டனின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.  பிரிட்டன் முதலாளித் துவத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய காரல் மார்க்சும் ஏங்கெல்சும் அகதிகளாக வாழ்ந்ததும் பிரிட்டனில்தான். அவர்களது விமர்சன கருத்து களுக்கு பிரிட்டன் முதலாளித்துவ ஜனநாயகம் பெரும்பாலும் தடையாக இருக்கவில்லை. ‘பாரிஸ் கம்யூன்’ புரட்சி தோற்ற பிறகு பிரான்ஸ் அரசின் கொடுமைகளிலிருந்து தப்ப பல போராளிகள் தஞ்சமடைந்த தேசம் பிரிட்டன்தான்! 

எனினும் பிரிட்டனுக்கு இன்னொரு முகமும்  உண்டு. இந்தியா உட்பட ஆசிய ஆப்பிரிக்க தேசங்களை காலனிகளாக்கி அவற்றின் செல்வத்தை கொள்ளை அடித்த தேசம் பிரிட்டன். இப்பொழுது அகதிகளை பெருமளவு கட்டுப்படுத்துவது மட்டுமல்ல; அவர்களை ருவாண்டா போன்ற மிகவும் பின் தங்கிய தேசங்களுக்கு அனுப்பி வைப்பதும் பிரிட்டன்தான்.  பிரிட்டனில் ரிஷி சுனக் பிரதமர் பதவியை அலங்கரிப்பதை மற்றவர்களைவிட, ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் ‘இந்தியாவின் பெருமிதம்’ என்று புளகாங்கிதம் கொள்கிறார்கள். ஆனால் அதே காவிக் கும்பல்தான் இந்திய குடிமகனை மணந்து இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியை ‘இத்தாலியர்’ என இகழ்வதும் அவரை பிரதமர் ஆவதை தடுக்கும் கைங்கர்யத்தையும் அரங்கேற்றினார்கள். 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. தோற்று இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பெற்றது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திதான் பிரதமர் எனும் சூழல் உருவானது. ஆனால் இத்தாலியப் பெண் இந்தியாவுக்கு பிரதமராவதா என ஒரு மிகப்பெரிய இழிவு பிரச்சாரத்தை பா.ஜ.க.வும் சங் பரிவாரத்தினரும் முன்னெடுத்தனர். இதன் உச்சபட்சமாக சோனியா பிரதமரானால் தனது  தலை  முடியை மழித்து கொள்வேன் என  சுஷ்மா சுவராஜ் சபதம் எடுத்தார். இந்தப் பின்னணியில்தான் மன்மோகன் சிங் அவர்களை பிரதம ராக சோனியா முன் நிறுத்தினார். சங்கிகளின் இரட்டை வேடம் அற்பத்தனமானது. ரிஷி சுனக் பெருமையைப் பேசும் எந்த ஊடகமும் சங்கி களின் இரட்டை வேடத்தை பேசுவது இல்லை.

ரிஷி சுனக்கின் பின்னணி

“தனது இந்து அடையாளத்தை பெருமை யாக முன்நிறுத்துபவர்” என ரிஷி சுனக்கை பாராட்டுகிறது இந்தியா டுடே இதழ். கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் கோமாதா பூஜை நடத்தி யதை டுவிட்டரில் பதிவிட்டு உலகத்துக்கே வெளிக்காட்டினார் ரிஷி சுனக். தனது நாடாளு மன்ற பதவி பிரமாணத்தை கீதை மீது சத்தியம் செய்து அரங்கேற்றிய ரிஷி சுனக்கின் சொத்து  மதிப்பு அதிகமில்லை ஜென்டில் மென்! வெறும் 800 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்தான்! அதாவது ரூ. 7600 கோடிதான்!  பிரிட்டன் நாடாளு மன்ற உறுப்பினர்களில் அதிக சொத்து உடையவர் ரிஷி சுனக்தான் என்பது மட்டுமல்ல; பிரிட்டன் அரச குடும்ப சொத்தைவிட இரு  மடங்கு சொத்து இவருக்கு உண்டு எனவும்  சிலர் கூறுகின்றனர். இந்திய கார்ப் பரேட்டு களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளைதான் ரிஷி சுனக்  திருமணம் செய்துள்ளார். ரிஷி சுனக்கின் மனைவி வெகு நாட்களாக பிரிட்டனில் ஒரு  பவுண்டு கூட வரி கட்டாமல் இருந்தார். இது  அம்பலமான பொழுது ரிஷி சுனக்கின்  அரசியல் வாழ்வே பெரிய கேள்விக் குள்ளாக்கப்பட்டது. பகிரங்கமாக ரிஷி சுனக்கும் அவரது மனைவியும் வருத்தம் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள் மட்டு மல்ல; பிரிட்டனின் நிதி அமைச்சராக இருந்தவரின் மனைவி வரி கட்டாமல் இருந்தது தற்செயலானது என எவராவது நம்ப இயலுமா?

தொழிலாளி வர்க்க வட்டத்தில் ஒருவர் கூட தனக்கு நண்பர் கிடையாது என்பதை ‘பெரு மையுடன்’ குறிப்பிடும் ரிஷி சுனக் சமீபத்தில் தனது வீட்டில் ஒரு நீச்சல் குளத்தை கட்டினார். இதற்கு அவர் செய்த செலவு 15,00,000  பவுண்ட் ஸ்டெர்லிங் அதாவது சுமார் ரூ 14.25 கோடி. ரிஷி சுனக் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பங்குச் சந்தையில் தீவிரமாக இயங்கியவர். அவரது செல்வம் பெரும்பாலும் பங்கு சந்தை மூலம் ஈட்டப்பட்டது. அவர் பிரிட்டன் நிதி மூலதனத்தின் செல்லப்பிள்ளை எனவும் அழைக்கப்படுகிறார். இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் பிரிட்டன் உழைப்பாளி மக்களின் பிரச்சனைகளை உணர்வாரா? அவர்கள் பக்கம் நிற்பாரா? எனும் கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அதே போல பகிரங்கமாக தனது இந்து  அடை யாளத்தை வெளிப்படுத்தும் அவர்  பிரிட்டனின் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவாரா எனும்  கேள்வியும் உள்ளது. இந்த கேள்விகளை எவரும் புறந்தள்ள முடியாது. பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ருவாண்டா தேசத்துக்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரித்தவர் ரிஷி சுனக். தானும் ஒரு  அகதியாக வந்தவர்தான் என்பதை மறந்து தான் பெற்ற வாய்ப்புகளை ஏனைய அகதிகள் பெறக் கூடாது என நினைக்கும் ஒரு அரசியல்வாதியாக உள்ளார் ரிஷி சுனக். 

சீனா மற்றும் ரஷ்யப் பிரச்சினைகளில் அமெரிக்காவின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுபவர் ரிஷி சுனக். பிரிட்டனின் நீண்ட கால மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என சீனாவை சாடுகிறார் ரிஷி சுனக். பிரிட்டனில் உள்ள 60 கன்ஃபூசியஸ் கல்வி நிலையங்களையும் மூடுவேன் என சபதம் செய்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிக்காமல் ஓய மாட்டேன் என்பது அவாது சூளுரைகளில் ஒன்று.  டொனால்டு டிரம்பும் ஜோ பைடனும் அடங்கிய  அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்ய இயலாத ஒன்றை சபதம் செய்கிறார் ரிஷி சுனக். உண்மை  நிலை என்னவெனில் இன்று பிரிட்டனில் தேர்தல் நடந்தால் ரிஷி சுனக்கின் கட்சியை பிரிட்டன் மக்கள் ஒழித்து விடுவர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இவரது மாமானார் நிறுவிய இன்ஃபோசிஸ் நிறுவனம் என நினைத்துவிட்டார் போலும். அந்த இன்ஃபோசிஸ் நிறுவனமே அவரது மாமனாரை ஓரம் கட்டிவிட்டது. அதனைக் கூட  தடுக்க இயலாத ரிஷி சுனக், சீன கம்யூ னிஸ்டு கட்சியை ஒழிப்பேன் எனப் பேசுவது நகைப்புக்குரியது.

நாசகர பொருளாதார 

கொள்கையின் ஆதரவாளர்

பிரிட்டன் மிகப்பெரிய பொருளாதார சவால்களை சந்திக்கிறது. அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறுவது எனும் கருத்தை வலுவாக ஆதரித்தவர் ரிஷி சுனக். இந்த முடிவு பொருளாதார நெருக் கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் பிரிட்டன் மக்கள் பெரும்பாலானோர் இன்று இதனை  எதிர்க் கின்றனர். ரிஷி  சுனக் நிலை என்ன என்பது பொருத் திருந்து பார்க்கவேண்டிய ஒன்று. அய்ரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தால் தாங்கள் பிரிட்டன் ஒன்றி யத்திலிருந்து வெளியேறுவோம் என வட அயர்லாந்து மக்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு நேர்மாறாக அய்ரோப்பிய ஒன்றியத்தில் தொடரா விட்டால் நாங்கள் தனி நாடாக போய்விடுவோம் என ஸ்காட்லாந்து மக்கள் எச்சரிக்கின்றனர். ஒன்றுபட்ட பிரிட்டனின் எதிர்காலத்தை எப்படி ரிஷி சுனக் பாதுகாக்கப் போகிறார் என்பது பெரிய சவால்.  ரிஷி சுனக் தீவிர தாராளமய கொள்கைகள் ஆதரவாளர். பிரிட்டன் அரசின் இலவச மருத்துவ வசதிகளை தனியார்மயமாக்க வேண்டும் என கூறுபவர். பெரும் பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகளை ஆதரிப்பவர். தொழிற்சங்கங்களின் போராட்ட உரிமைகளை சிதைக்க வேண்டும் என கொள்கைகளை உடையவர்.  பிரிட்டன் எங்கும் ரயில்வே/ அஞ்சல்/ ஆசிரியர்கள் போராட்டங்கள் தீவிரமாக தொடங்கி யுள்ளன. குறிப்பாக ரயில்வே தொழிற்சங்க உரிமைகளை நசுக்க அரசாங்கம் முக்கிய  சட்டங்களை இயற்ற முனைந் துள்ளது. உலகின் உற்பத்தி மய்யமாக பிரிட்டன் ஒரு காலத்தில் இருந்தது. இன்று பெரும்பாலும் நிதி மூலதன சந்தையாக மாறிவிட்டது.மூன்றில் ஒரு பங்கு சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் பல பாதக பிரச்சினைகளை பிரிட்டனின் வாசற்படியில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  இதன் விளைவாக பெரும் நெருக்கடி மேகங்கள் பிரிட்டனை சூழ்ந்துள்ளன. 

இன்று தேர்தல் நடந்தால் ரிஷி சுனக் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. எனவே அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. ரிஷி சுனக் மூலம் 2024க்குள் நிலைமையை மாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். இந்த ஆசை நிறைவேறுமா அல்லது ஒரு இந்திய வம்சவளியினர் ஆட்சியில் பிரிட்டன் சரிவை சந்தித்தது எனும் நிலைமை உருவாகுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நன்றி: 'தீக்கதிர்' 26.10.2022


No comments:

Post a Comment