இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் பேசுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் பேசுவதா?

பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நினைத்ததையெல்லாம் பேசட்டும்!

தமிழ்நாட்டு மக்கள் காவி - ரிஷிகளிடம் ஏமாறமாட்டார்கள்!

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிக்கையை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக தமிழ்நாடு ஆளுநர் பேசலாமா? தாம் நினைத்ததை யெல்லாம் பேசவேண்டுமானால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பேசட்டும்! தமிழ்நாட்டு மக்கள் காவி - ரிஷிகளிடம் ஏமாறமாட்டார்கள் என்று - மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிக்கையை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சுமார்  8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யாகும்.

இது வெறும் அரசியல் தேர்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கை லட்சியங்களைக் கொண்டு தொடங் கப்பட்ட கூட்டணியாகும்.

அது இன்றைய தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கும் லட்சியக் கூட்டணி யாகும்.

இந்திய அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளில் வலியுறுத்தும், சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற அரசின் கொள்கைகளைப் பாதுகாக்கவும், மக்களிடம் உள்ள இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலும் மக்களாட்சியின் நெறிமுறைகளை அரச மைப்புச் சட்டம் எப்படி வகுத்துள்ளதோ அதன்படியே ஆட்சியாளர்களின் நடவடிக்கை அமையவேண்டும் என்பதை கண்ணுங்கருத்துமாய் கண்காணிப்பது இக்கூட்டணியின் முக்கிய பணியாகும்!

அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர்

அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் ஆளுநராக வந்துள்ள ஆர்.என்.ரவி என்ற ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி, தான் ஆளுநராக பதவியேற்றே போது அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது கூறு (Article)படி தனது கடமையைச் செய்யாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் முரணாக நடந்துவருவதோடு, தனது அரசியல் சட்ட வரம்பு எல்லைபற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல், நாளொருமேனி பொழுதொரு வண்ணம் கொள்கை விமர்சனப் பேச்சுகளையும், தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிரானவம்புப் பேச்சு களையும் பேசி, மக்களாட்சியின் மாண்புக்கு குந்தகம் விளைவித்து, விரைந்து செயலாற்ற தமிழ்நாடு அரசை தடுப்பதோடு, அரசமைப்புச் சட்டத்தினை அவமதிக்கும் வகையிலும் வெளிப்படையாக நடந்துவருகிறார் என்பதால், நேற்று (30.10.2022) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஒரு கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் 

தலைவர்களின் அறிக்கை

‘‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல” என்று பேசி இருக்கிறார் ஆளுநர். அதாவது தன்னைத்தானே இந்திய நாடாளுமன்றமாக, தன்னையே உச்சநீதி மன்றமாக, தானே இந்தியாவின் குடியரசுத் தலைவர் என - இன்னும் சொன்னால், இந்திய நாட்டின் மன்னராகவே அவர் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கி இருக்கிறார்.

அவருக்கு உலக வரலாறும் தெரியவில்லை ; இந்திய அரசமைப்புச் சட்டமும் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

அய்க்கிய நாடுகள் அவை அங்கீகரித்த நாடுகள் 195 என்றால், அதில் 30 நாடுகளை மட்டும் தான் PEWஎன்ற பன்னாட்டு ஆய்வு அமைப்பு மதச்சார்புள்ள நாடுகளாகச் சொல்கிறது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு நாட்டுத் தலைவர்களாக ஆகமுடியும். 

29-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பும் - சார்பின் மையும் கொண்ட நாடுகள். மற்றபடி 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள்தான். இந்து நாடாகச் சொல்லிக் கொண்ட நேபாளம் கூட இப்போது, ‘மதச்சார்பற்ற கூட்டாட்சி முறையைப் பின்பற்றும் நாடாளுமன்றக் குடியரசு தான். (நேபாள அரசியல் சட்டம் பிரிவு 4).

மதச்சார்பற்ற இந்த நாடுகளில் எல்லாம் மதங்கள் உண்டு; அரசும் உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பு இல்லை. இது எதுவும் தெரியாமல், ‘எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்' என்று ஆளுநர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.

அதேபோல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு எதிராக ஆளுநர் பேசுவதையும், கருத்துச் சொல்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘மதச்சார்பற்ற நாடு' இது என்கிறது அரசமைப்புச் சட்டம். ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக ஆளுநர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்து மதங்களுக்கும் நடுநிலையானவராகவே ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமைகளே உண்டு என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்.

இப்படி கூட்டணிக் கட்சிகளின் அறிக்கையின் ஒரு பகுதியில் விளக்கி - ஆளுநரின் அறியாமையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை 

கூறுவது என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய கொள்கையான அதன் முகப்புரை - Preamble மூலம் அரசமைப்புச் சட்டம் இயற்றிய கர்த்தாக்களின் நீண்ட விவாதங்கள் மூலமும், வாக்கெடுப்பு மூலமும் இடம்பெற்றவை ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அப்பகுதி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானப் பகுதி யாகும். (Basic Structure of the Constitution).

மற்றவைகளை மாற்ற முடியும்; ஆனால், அடிக் கட்டுமான கொள்கைகளை மாற்ற முடியாது; கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பும் ஆகும்.

அதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் மறுக்க முடியாது.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் நினைப்பதையெல்லாம் ஆர்.என்.ரவி பேசட்டும்!

அரசின் மதச்சார்பின்மைக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவிக்கிறார்; ஆளுநர் என்ற முறையில் அவருக்கு அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிராகப் பேச உரிமையில்லையா? கருத்துச் சுதந்திரம் இல்லையா அவருக்கு என்று சிலர் கேட்கக் கூடும்.

நிச்சயம் உண்டு;  ஆனால், அதை அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனி நபராக, எத்தனை வேக மான கருத்தையும் எடுத்துக் கூறலாம்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்து, அதனைக் காக்கவேண்டிய தலையாயக் கடமை உடைய ஒருவரான ஆளுநர் ரவியாக இருந்து அதனைச் செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை; அரச மைப்புச் சட்டப்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் படியும் என்பதை அவருக்கு உணர்த்தவே அந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, மதச்சார்பின்மை பற்றி அரசமைப்புச் சட்ட முகப்புரைபற்றிய விவாதம் - அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்றபோது ஒரு நிகழ்வை அவரது கவனத்திற்கு மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டம்பற்றிப் புரியாமல் பிதற்றும் சிலருக்குப் புரியவேண்டி இதோ சுட்டிக்காட்டுகிறோம், படியுங்கள்!

1. அரசமைப்புச் சட்ட விவாதங்கள் தொகுதி பத்து, பக்கம் 439 - The Constitution Assembly Debats Vol.X, Page 439.

எச்.வி.காமத் என்ற பிரபலமான சோஷலிஸ்ட் என்று அறிமுகமான ஒருவர் ஒரு திருத்தம் முன்மொழிந்தார்.

முகப்புரையில் முதலில்,

‘‘In the name of God,    We, the people of India,    having solemnly resolved to constitute India into a Sovereign Democratic Republic, and to Secure all her citizens.

Shri Kamath wanted ‘‘The Constitution should be consecrated this by a Solemn dedication to God in the spirit of the Gita. 

The amendment was supported by a few and opposed by many.  M.Thirumala Rao opposing the amendment had pleaded that - 

‘‘God should not be subjected to vote of the House. Pandit H.N.Kunzru while opposing the amendment said that -

Sacred feeling should not have been brought into the array of discussion. The proposed amendment was inconsistent the Preamble which proposes Liberty of thought, Expression, Belief, Faith and Worship to everyone.

Thereafter, Shri H.V.Kamath pressed for a vote and amendment was  negatived by 41 against 68. Reacting to this, Shir H.V.Kamath said-

‘‘This Friday, is Black Day in our annals. God save India.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘கடவுளின் பெயரால், இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு அமைப்பதற்கும், அதன் குடிமக்களை  பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்.

சிறீ காமத் ‘‘கீதையின் கருத்துக்களின் அடிப் படையில்  கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இந்த அரசமைப்பை அர்ப்பணிக்க வேண்டும்'' என்று விரும்பினார்.

இந்தத் திருத்தத்தை மிகவும் சொற்ப நபர்கள் ஆதரித்தனர், பலர் எதிர்த்தனர்,

திருத்தத்தை எதிர்த்து எம்.திருமலராவ் கூறியதாவது -

‘‘இந்திய அரசமைப்பில் கடவுள்  சொல் கூடாது'' என்றார்.

பண்டிட் ஹெச்.என்.குன்ஸ்ரு, ‘‘புனிதம் போன்ற வற்றை விவாத வரிசைக்குள் கொண்டு வந்திருக்கக் கூடாது'' என்றார்.

 முன்மொழியப்பட்ட திருத்தம் அனைவருக்கும் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, பொறுப்புறுதி மற்றும் வழிபாடு ஆகியவற்றின் சுதந்திரத்திற்கும்  முன்மொழிந்த முகவுரைக்கு முரணாக இருந்தது.

அதன்பிறகு, எச்.வி.காமத் வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுத்தார்,  வாக்கெடுப்பு திருத்தம் -  ஆதரவாக 41, எதிராக 68 என்று தோல்வி அடைந் ததால் அது நிராகரிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிறீ எச்.வி.காமத் கூறிய தாவது-

‘‘இந்த வெள்ளிக்கிழமை, எங்கள் வரலாற்றுப் பக்கங்களில் கருப்பு தினமாகக் குறிப்பிடப்படும். கடவுளே இந்தியாவை காப்பாற்றுங்கள்!''

அரசமைப்புச் சட்டத்தில், கடவுளை உள்ளே கொண்டு வர முயன்றவர்களுக்கு எதிரான முடிவு என்பது மதச்சார்பின்மையைத்தான்!

அதுமட்டுமல்ல, பதவிப் பிரமாணம் எடுக்கிறபோது, கடவுள் பெயரால் மட்டுமே உறுதி எடுக்காமல், மாறு பட்டவர்கள் ‘‘மனச்சாட்சிப்படியும்'' உறுதி எடுத்துக் கொள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பாடு செய்திருப்பது எதைக் காட்டுகிறது?

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 25, 26-லும்கூட, மதச் சுதந்திர உரிமை என்பதற்கு அரசு கட்டுப்பாடு விதிக்க முழு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் பிரிவுகள் உண்டு என்பதையும் எவரும் மறுக்கவே முடியாது என் பதை ‘திரிபுவாத சிகாமணி''களும் கூட உணரவேண்டும்.

காவி - ரிஷியிடம் தமிழ்நாட்டு மக்கள் 

ஏமாற மாட்டார்கள்!

தனது ஆளுமைப் பணிகளை ஒதுக்கி வைத்து, இப்படி ஓர் ‘‘அரசியல் விவாத மேடையாக'' (ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்போல்) ஆக்குவது, ஆளுநர் ஏற்ற பொறுப்புக்குக் களங்கம் விளைவிப்பதாகும்.

தமிழ்நாடு மக்கள் காவி - ரிஷிகளிடம் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

31.10.2022

No comments:

Post a Comment