ஆர்.எஸ்.எஸ். இதழ் ‘விஜயபாரதம்' குல தெய்வங்களைத் தூக்கிப் பிடிப்பது ஏன்?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
தொகுப்பு: மின்சாரம்
ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம் இவ்வாண்டு தீபாவளி மலரை (2022) ஒரு முக்கிய நோக்கத்தோடு தயாரித்து வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கிராமங்களில் குல தெய்வ வழிபாடு என்பதை தூக்கிப் பிடித்திருக்கிறது.
பக்திப் போதை உருண்டையை கொடுத்துத்தானே பார்ப்பனீயம் தன் ஆதிபத்தியத்தை ஆயிரங்கால் வைத்து ஊன்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப் புற மக்களிடம் தங்கள் ஜம்பம் பலிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். கிராமத்தைக் குறி வைத்து தூக்க தனது தும்பிக்கையை தூக்கி இருக்கிறது.
தன் முன்னுரையிலேயே ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை‘ என்று சொல்லுகிறது.
"குடும்பத்தில் ஒரு கஷ்டம் என்றால் குல தெய்வத்தை நினைத்துக் கொள்ளும் தொன்மைப் பழக்கம் மறுபடியும் குடும்பங்களில் தலைகாட்டுவது நல்ல விஷயம்.
நமது தீபாவளி மலரில் குலதெய்வம் / கிராம தேவதை பற்றி வாசகர்களுக்கு (அவர்களுக்கு மிக நன்று தெரிந்த) பல விஷயங்களை நினைவூட்டத் தீர்மானித்தது தற்செயல் அல்ல.
நரகாசுரனை வதம் செய்த கண்ணனைப் போற்றும் பண்டிகை தீபாவளி.
அசுரர்களை கண்ணன் கையாளும் விதமே அலாதி. ஒரு அசுரன் விசித்திரமான வரம் பெற்று இருந்தான். அவனோடு மோதினால் மோதுகிறவனு டைய பலமும் அவனுக்குச் சென்று விடும். அவனோடு மோதாமல் அவனை ஒடுக்கிய கண்ணனின் அட்டகாச மான வியூகம் பற்றிய கதை நமக்கெல்லாம் தெரிந்தது தான்.
நமது கிராமங்களை மீட்டெடுப்பதற்கும் கண்ணன் காட்டிய வழியே சிறந்தது.
நாடு இந்து நாடு, நாட்டின் கிராமப்புற வள வாழ்வை மீட்டெடுப்பதும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதும் தங்களுடைய தலையாய கடமை என்று குலதெய்வ அருளை நாடும் இந்துக்களுக்கு நன்றாகவே தெரிந் திருக்கிறது"
- என்று விஜயபாரதம் தீபாவளி மலரின் நோக் கத்தை முகப்புரையிலேயே தெரிவித்துவிட்டது.
மலரில் பெரும்பாலும் குலதெய்வ வழிபாடு கூத்துத் தான்.
திடீர் ஞானோதயம்
இதுவரை கிராம தேவதைகள் - குல தெய்வங்கள் பக்கம் கண் செலுத்தாத விஜயபாரதங்களுக்கு இப் பொழுது என்ன ஞானோதயம்?
தொடக்கத்தில் நாம் கூறியதுதான். குலதெய்வ கண்ணிவெடியை வைத்து கிராம மக்களை ஆர்.எஸ்.எஸ். வலைக்குள் சிக்க வைக்கும் ஏற்பாடே இது.
"குல தெய்வ பிரார்த்தனை என்பது தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டியது, அதற்காகத்தான் முடி காணிக்கை பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். தெற்கே இருந்து இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வடக்கே செல்லும் குடும்பத்தினரின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தங்கள் குலதெய்வ கோயில் எங்கிருக்கிறது என்பது தெரியாது. சொந்த ஊர் பக்கம் வந்து, யார் யாரையோ கேட்டு, பிறகு அந்தக் கோவிலை அடையாளம் கண்டுபிடித்துச் செல்லுகிறார்கள். அந்த அளவுக்கு நாம் நம் பாரம் பரியத்திலிருந்து விலகி வருகிறோம் என்பது கவ லையைத் தருகிறது.
அப்படியில்லாமல் தொடர்ந்து கிராம தேவதை யையோ, பெரிய கோயில் தெய்வத்தையோ குடும்பத்து வழிபாட்டையோ கைவிட்டுவிடக் கூடாது! (பக். 117).
எவ்வளவு கரிசனம் - குல தெய்வக் கோயில் எங்கிருக்கிறது என்று பலரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமாம். "நான் இங்கிருக்கிறேன்" என்று கனவில் வந்து சொல்லியிருக்கலாமே. சிதம் பரத்தில் நடராஜன் நந்தனிடம் கனவில் வந்து சொன்ன தாக கதை அளக்கவில்லையா?
முடிக் காணிக்கை கிராம குல தெய்வத்திற்கு அளிப்பது பற்றி விஜயபாரதம் சிலாகித்துச் சிலிர்க்கிறது. ஏன், திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை அளிப்பதில்லையா? அந்த முடியை விற்ற பணத்தை குவிப்பதில்லையா? ஏழுமலையான் என்ன கிராம தேவதையா? யாருக்குக் குலதெய்வம் திருவாளர் வெங்கடாஜலபதி?
நாம் பாரம்பரியத்திலிருந்து விலகி வருகிறோம் என்று ரொம்பத்தான் கவலைப்படுகிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்!
பக்தியை வைத்து பிழைப்பு
இருக்காதா? பக்தியை வைத்துத்தானே பிழைப்பு நடக்கிறது. ஜாதி நோயைத் தூக்கி நிறுத்த உரமும் போடப்படுகிறது.
எல்லைக் காக்கும் தெய்வம் பற்றி ஒரு கட்டுரை (பக். 176-177).
"சிறு தெய்வ வழிபாடு" என்னும் தலைப்பில் அக்கட்டுரை.
அது என்ன கடவுளில் சிறு தெய்வம், பெரிய தெய்வம்?
சிறு தெய்வம் என்றால் மட்டக்கிளாஸா? பெரிய தெய்வம் என்£ல் உசத்தியா?
உயிர் பலி வாங்காத தெய்வங்கள் பெரு தெய்வங்களாம்.
உயிர் பலி வாங்குபவை சிறு தெய்வங்களாம்.
கடவுள்களிலேயே வெஜ்டேரியன், நான்-வெஜ்டேரியனா?
புரியும்படி சொல்லப்போனால் பிராமணர், சூத்திரப் பேதமா?
உண்மை அதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கு மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 3 கிலோ தங்கத்தில் பூணூல் சாத்தவில்லையா?
அதே சங்கராச்சாரி திருப்பரங்குன்றம் சுப்பிர மணியனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் பூணூல் அணி விக்கவில்லையா?
ஜீயர் சும்மா இருப்பாரா?
சிறீரங்கம் ரெங்கநாதனுக்கு ரூ.52 லட்சம் மதிப்பில் தங்கப் பூணூல் அணிவிக்கவில்லையா?
எந்தக் கிராமக் கோயில் கடவுள்களுக்கு இவர்கள் இதுமாதிரி அணிவித்தனர்?
விரலை மடக்க முடியுமா?
கிராம கோயில்களுக்குப் பூசாரி என்ற பெயர். நகர்ப்புற அவாள் கோயிலில் பூஜை செய்பவர்கள் குருக்கள், அர்ச்சகர்கள்.
"மாரியம்மன்" மற்றும் "காளியம்மன்" வழிபாடு தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது. தென்மாநிலங்களில் இவ்வழிபாடு நடைபெறுகிறது.
"மாரி" என்றால் "மழை" என்று பொருள். மழையைப் பொழிந்து பயிர்களைச் செழிக்க வைக்கிறாளாம். சக்தி கிரகத்தைத் தண்ணீரால் நிரப்பி அதை அம்மனாக வழிபடுவதும், பின்னர் கிரகத்தில் உள்ள தண்ணீரை நீர் நிலைகளில் விடுவதும் மாரியம்மன் வழிபாட்டில் முக்கிய அங்கமாகும். வெப்பத்தை தணித்து குளிர்ச்சியையும் தருவாள், குறிப்பாக வெப்ப நோயான "அம்மை" காக்கும் போது மாரியம்மனை வழிபட்டால் குணமாகும் என்பது அய்தீகம் - கூறுகிறது விஜயபாரதம்.
இப்பொழுது அரசாங்கமே அறிவிக்கிறது.
அம்மை இருப்பதாக தெரிவித்தால், ரூ.1000 பரிசு என்று. அம்மை ஒழிக்கப்பட்டுவிட்டது. கிறித்துவ வெள்ளைக்காரர் ஜென்னர் கண்டுபிடித்த அம்மை தடுப்பூசியால் தடுக்கப்பட்டு விட்டது. அம்மை வருவது ஒருவகை கிருமியால் என்பதைக் கூட தெரியாத பாலகர்களா இந்தப் பார்ப்பனர்கள்?
காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரே அம்மை நோயால் மரணம் அடைந்ததுண்டே!
அறிவு நாணயம் அற்றவர்கள்
காலரா வந்தால் காளியம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். காலரா வந்துகொண்டு தான் இருந்தது; மக்களும் செத்துக் கொண்டுதான் இருந்தனர். காலரா என்பது ஒரு நோய் - குறிப்பிட்ட கிருமி தொற்றால் அந்நோய் ஏற்படுகிறது - காளியம்மன் கோபத்தால் அல்ல என்று விஞ்ஞானம் அஞ்ஞானிகளின் முகத் திரையை கிழித்த பின்னும் இந்த 2022லும் மாரியாத் தாள் கதையை அளந்து, மக்களை மவுடீகச் சேற்றில் மூழ்கச் செய்வது மாபெரும் கிரிமினல் குற்றமல்லவா?
இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. இதுபோன்ற கதைகளை அளக்கும்போது... "அய்தீகம்" என்று கூறி தப்பித்து விடுவார்கள். கடவுள் சக்தி என்று கூறும் தைரியமில்லாத கோழைகள் அல்லது அறிவு நாணயம் அற்றவர்கள்தானே.
இன்னொரு கதையைக் கேட்டால் வெடிச் சிரிப்புதான்.
3,000 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் விவசாயக் குடிகளாக மாறியபோது, நாம் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்தோம். ஒரு குடி என்பது அதிகபட்சம் 100 குடும்பங்களை உள்ளடக்கியது. இந்தக் குடும்பங்கள் ஒரு கோட்டைக் கட்டி அதனுள் வாழ்ந்தனர். வயல்கள் கோட்டைக்கு வெளியே இருந்தன. ஊருக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கு வெவ்வேறு குலதெய் வங்கள் இருந்தாலும், ஊருக்கு பொதுவாக ஒரு கிராம தேவதை வேண்டும் என்றும் அப்படி ஒரு தெய்வத்தை வழிப்பட்டோம். வயல்கள் கோட்டைக்கு வெளியே இருந்தமையால், அங்கே காவல் செய்ய காவலர்கள் தேவை, அவர்கள் தங்க ஒரு இடம் தேவை, அவர்களைக் காப்பாற்ற ஒரு காவல் தெய்வம் தேவை. இதனால் தான் இன்றும் காவல் தெய்வங்கள் ஊருக்கு வெளியே இருக்கின்றன.
மேலும் அக்கோயில்களில் நாய், குதிரை சிலை களை காண முடிகிறது. அவசர உதவிக்கும், ஆபத்தை விரட்டவும் மணிகள், மணிக்கம்பு, வேல்கம்பு முதலிய ஆயுதங்களும் அங்கே காணப்படும். நாள்கள் கழிந்தன. பயம் மறந்து பக்தி பிறந்தது. அதிலும் ஆரம்பகால கட்டத்தில் இஷ்ட தெய்வங்களை வழிபட்டோம். (பக். 144-145).
சிறு பிள்ளைகள் ஒண்ணுக்குப் போய் மண்ணைக் குழைத்து வைத்து கூட்டாஞ்சோறு ஆக்கி மரப்பாய்ச்சி ஆட்டம் ஆடுவதற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
மண் குதிரைகளும், மண்ணால் செய்யப்பட்ட நாய்களும் காவல் காக்குமா.
இப்பொழுது அதெல்லாம் கிடையாதாம்...
எப்படி வழிக்கு வருகிறார்கள் பார்த்தீர்களா?
பயம் போய் பக்தி வந்துவிட்டதாம்!
என்னே நகைமுரண்!
தலைகீழ் புரட்டு
கடவுள் பக்தி என்பதே பயமும் பேராசையும் பெற்றெடுத்த பிள்ளைதானே.
இதில் விவசாயத்தைப் பற்றி பேசுகிறது விஜய பாரதம். விவசாயம் தான் பாவத் தொழில் என்கிறதே மனுதர்மம். (அத்தியாயம் 10, சுலோகம் 84).
அடுத்த கதையைக் கேளுங்கள் -
அதே கட்டுரையில், "மனிதனுடைய அன்றாட உடை, உணவு, உடையுள் தேவைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டபோது இறை நாட்டம் முதிர்ச்சி பெற்றதாம். தேவைகள் மனித அறிவால் உறுதி செய்யப்பட்ட நிலையில் இறை நாட்டத்திற்கு அங்கு என்ன வேலை? ஏன் இந்த தலைகீழ் புரட்டு?
இன்றைய இறை நாட்டம் வந்த காலத்தில்தான் தத்துவம் சார்ந்த சிவம், சக்தி,. பெருமாள், திருமகள் எல்லாம் இப்படியாக உருவான கடவுள்கள் என்று எழுதுகிறது ஆர்.எஸ்.எஸ். மலர்.
கடவுள்கள் உருவாயின என்பதை இந்த இடத்தில் தன்னை அறியாமலேயே விஜயபாரதம் ஒப்புக் கொண்டு விட்டதே!
ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள் கடவுள் என்ற வர்கள் - அவர்தான் இந்த அண்டத்தையே படைத்த வர்கள் என்று புருடா விட்டவர்கள் - இப்பொழுது இந்த இடத்தில் கடவுளர்கள் உருவானார்கள் என்பதை ஒப்புக் கொண்டு விட்டனரே!
"இன்று கோயில்கள் ஊருக்கு நடுவே இருப்பதால் முந்தைய தெய்வங்கள் எல்லாம் ஊருக்கு வெளியே இருப்பது போல தோற்றமளிக்கிறது. இதைத் திருட்டு திராவிடமும் துணை போகும் பிற சமயங்களும் திரித் துப் பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று திமிர்த்தனமாக தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுகிறது.
"இந்து என்றாலே திருடன்" என்று பொருள்படுகிறது. உண்மையிலேயே திருடிக் கொண்டு ஓடுகிறவன் "திருடன் திருடன்" என்று கத்திக்கொண்டு ஓடும் திருட்டுத்தனம் தான் இந்த திரிநூலோருக்குச் சொந்த மானதாயிற்றே.
வீரத்திற்கும், காவலுக்கும் அடையாளமாக திகழும் மதுரை வீரன், காவல் தெய்வங்களுள் ஒருவராக எல்லோராலும் வணங்கப்படுகிறார். மதுரை வீரனைப் பல குடும்பங்கள் குல தெய்வமாகவும் கொண்டிருக் கின்றன. மதுரை வீரன் தனியாக வணங்கப்படுவதில்லை. வெள்ளையம்மன், பொம்மி ஆகிய இரு மனைவி களுடன் தம்பதி சமேதரராகத்தான் மதுரை வீரன் காட்சி தருகிறான். சில கோயில்களில் இவர்களுக்குத் தனி சன்னதி உண்டு என்று கதையை முடித்துவிடுகிறது.
"விஜயபாரதம்" தீபாவளி மலர் (பக். 343) ஆர்.எஸ்.எஸ். இதழ் அல்லவா? அதன் உடன் பிறந்த திருட்டுத்தனம் போகுமா?
மதுரை வீரன் வரலாறு
உண்மையிலேயே மதுரை வீரன் வரலாறு என்ன?
வீரன் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவன். மதுரை மன்னனின் மகள் வெள்ளையம்மாளையும், பொம்மி யம்மாளையும் காதலித்தான். அரசகுமாரிகளும் அவனை காதலித்தனர். வீரன் காதலிகளை சிறை யெடுத்தான். ஊரே பற்றி எரிந்தது. ஆட்கள் பறந்தனர். வீரன் மாறு கை, மாறு கால் வாங்கப்பட்டான்.
ஜாதி வெறிக்கு பலியானவனைக் குல தெய்வம் என்று ஆக்கியதன் மூலம் ஜாதி வெறிக்கு பீதாம்பரம் சூட்டுகிறார்கள். ஜாதி காரணமாக இந்த வரலாற்றை மறைத்து படுகொலை செய்யப்பட்டவரை குலதெய்வ மாக்கிக் காட்டுவதற்கு பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.
ஜாதியின் மீது சீறியெழும் உணர்வை திசை திருப்பும் திருட்டுத்தனம் தானே இது.
நரகாசுர வதையும் மாவலி கொலையும் பார்ப் பனர்கள் சதிதானே?
ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த காத்தவ ராயன் வரலாறு என்ன?
ஆரியபட்டர் மகன் ஆரிய மாலாவைக் காதலித் தான். ஆரியமாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரிய மாலாவைச் சிறைப்பிடித்தான்.
ஜாதி கெட்டுப் போனது என்றும், ஆசாரம் தொலைந்தது என்றும் கூச்சல் போட்டனர்.
6000 வேதியப் பார்ப்பனர்கள் ஆரியபூர் ராஜனிடம் முறையிட்டனர். ஆணையிட்டான் அரசன். அரண் மனை ஆட்கள் பறந்தனர். காத்தானை பிடித்து இழுத்து வந்து துடிக்க துடிக்க கழுவிலேற்றி கொன் றனர். காத்தான் குலதெய்வம் ஆனான்.
குல தெய்வ வழிபாட்டின் வரலாறு என்ன?
இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தூக்கி நிறுத்த விஜயபாரதங்கள், ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் யுக்தி வகுத்து செயலில் இறங்கியுள்ளனர்.
உண்மையிலேயே என்ன நடந்திருக்க வேண்டும்?
ஜாதி வெறிக்கு பலியான தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்காக ஆவேச குரல் கொடுக்க வேண்டி யவர்களை - உயிர்ப் பலிக்குக் காரணமான ஜாதி மீது போர் தொடுக்க ஆவேச உணர்வுடன் தோள் தூக்கி எழ வேண்டியவர்களின் சுயமரியாதை உணர்வை - பக்தியைக் காட்டி தலைகீழாகப் புரட்டி விட்டார்களே!
உண்மையைச் சொல்லப் போனால் புத்தி குறைந்தவர்களுக்குத்தான் சிலை வணக்கம் - உத்தர கீதை.
திராவிடத் தோழர்களே, திராவிட மக்களே, குல தெய்வம் பூஜை என்று கூறி கிராமத்தில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அடையாளம் காண்பீர்!
தும்பை விட்டு வாலைப் பிடிக்காதீர்கள்! தொடக் கத்திலேயே விரட்டி அடிப்பீர்!
குறிப்பு: ‘விஜயபாரதம்' தீபாவளி மலரைப் படித்த நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் "குலதெய்வம்" என்ற பெயரால் கிராமங்களில் ஊடு ருவ ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் திட்டத்தை - யூகத்தைச் சுட்டிக் காட்டினார் எங்களிடம். அதன் எதிரொலியின் அடிப்படையே இந்தக் கட்டுரை.
No comments:
Post a Comment