இந்து மதமே ஓர் இரவல் பெயர்தானே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

இந்து மதமே ஓர் இரவல் பெயர்தானே!

மின்சாரம்

கேள்வி: ‘நீ கிறிஸ்துவனாக, இஸ்லாமி யனாக, பெர்சியனாக இல்லை என்றால் இந்துவாகத்தான்  இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதா?

பதில்: அப்படிக் கூறுவது உச்சநீதி மன்றம் அல்ல, நமது அரசியல் சாசனம். அதற்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன்கீழ் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஆ. இராசா.

(‘துக்ளக்’ 5.10.2022 பக்கம்.16)

தந்தை பெரியார்தான் தனக்கே உரித் தான வகையில் சொலவடை சொல்லுவார்.

‘அவனை அனுப்பாதே, கலகம் செய் திடுவான், என்னை விடு செருப்பாலடிச் சிட்டு வர்றேன்’ என்றானாம் ஒருவன்.

அந்தக் கதையாக அல்லவா ஆகி விட்டார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்!

ஆ. இராசா கூறியது உச்சநீதிமன்றம் கூறியதல்ல என்று சொல்லிவிட்டு, அப் படிக் கூறியது அரசியல் சாசனம் என்று ஒருபடி மேலே சென்றல்லவா ஒப்புதல் வாக்குமூலமாக சரணம் பாடியிருக்கிறார்.

உச்சநீதிமன்றமாகட்டும், அரசியல் சாசனமாகட்டும்; அதுவல்ல பிரச்சினை. சொல்லப்பட்ட விடயம் என்ன?

ஹிந்து மதத்துக்கு என்று ஒரு தனித் தன்மை - ஒரு தனி அடையாளம் இல்லை - இல்லவே இல்லை - கிடையவே கிடையாது என்று ஆகிவிட்டதே!

இப்படி அட்ரஸ் இல்லாத ஒரு மதத் தைத் தலையில் தூக்கி வைத்து ‘தை தை’ என்று ஆடும் பரிதாபத்தை என் சொல்ல!

ஒரு மதம் என்று சொன்னால் அதற் கொரு வரலாறு இருக்க வேண்டும், தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும்; அதற்கென்று சொல்லத் தக்க மத நூல் ஒன்று இருக்க வேண்டும்.

அப்படித்தான் இஸ்லாமும், கிறிஸ்துவ மும் இருக்கின்றன. ஆனால் ஹிந்து மதமோ யார் பெற்ற பிள்ளையோ என்று தெரியாமல் அனாதையாகப் புழுதியில் கிடக்கிறது.

அதற்குள்ளும் ஆயிரம் குத்து, வெட்டு- அடி- தடி!

வடகலைக்காரன் தென்கலைக்காரனை நேரில் கண்டால் சுவரில் முட்டிக் கொள்வான், அதற்குப் பெயர் ’கண்டு முட்டு;’ தென்கலைக்காரனோ வட கலைக்காரன் ஒருவனைப் பற்றிக் காதால் கேட்டுவிட்டால் சுவரில் போய் முட்டிக் கொள்வான். அதற்குப் பெயர் “கேட்டு முட்டு.’’

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்கிற வழக்கு இலண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரித்தது.

ஜீயரும், சங்கராச்சாரியாரும் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தானே! அவர் களின் ‘தரம்’ எப்படி இருக்கிறது?

‘கல்கி’ இதழில் ஒரு பேட்டி (11.4.1982) 

கேள்வி:  “திருவரங்கத்தில் பெருமாள் கோவிலில் மொட்டை கோபுரம்’’ என்று வழங்கப்பட்டுவந்த கோபுரத்தைச் சீர் செய்து, இந்தியாவிலேயே மிகவும் உயரமான (226 அடி உயரம்) நெட்டைக் கோபுரமாக ஆக்கும் வேலை (திருப்பணி) அகோபில மடத்து ஜீயரின் தலைமையில் நடந்துவருகிறது.

அந்த வைஷ்ணவக் கோவிலின் கோபுரம் கட்டும் வேலைக்கு சைவ மதத் தைச் சேர்ந்தவரான காஞ்சி சங்கராச் சாரியாரும் மற்றும் பல சைவர்களும் பணஉதவி செய்துள்ளனர். “இதேபோல சைவ ஸ்தலப் பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவதில்லை? நீங்கள் சிவன் கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய் வீர்களா?’’ 

என்ற கேள்விக்கு ஜீயர் தந்துள்ள பதில்:

“நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாரா யணன்தான் எல்லா தெய்வங் களுக்கும் மேற்பட்ட தெய்வம்”ங்கிறது என் னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராய ணன்  தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்தப் பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்த னையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங் கல்லாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்த வர்கள். ஆனால், நாராயணன் எப் போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடுற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வ மாகக் கொண்டு வழிபட்டு மோட்சத் துக்குப் போக வழி செய்துகொண்டவர்கள். நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப்போகும். அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்கு பணம் இருந் தாலும் தர மாட்டேன்’’ என்று,  அகோபில மடத்து ஜீயரான அழகிய சிங்கரின் பேட்டி ‘கல்கி’யில் (11.4.1982) வெளி வந்துள்ளது.

குருமூர்த்தி கூட்டமே இப்பொழுது சொல்லுங்கள். இப்படி ஒருவருக்கொரு வர் குத்து வெட்டு நடத்துகிறதே - இது ஒரு மதமா? மதம் பிடித்த யானையா?

“சிவனைக் கும்பிட்டா புத்தி கெட்டுப் போகும்” என்று சொல்லுபவர்கள் நாத்தி கரான நாங்கள் அல்ல; சாட்சாத் ஜீயர் ‘பெருமான்’தான்!

சரி, ஹ¤ந்து மதம் என்று சொல்லிக் கொள்கிறார்களே -அதாவது ஒரிஜினலா?

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!

எதற்கெடுத்தாலும் கிறிஸ்துவன், முஸ்லிம் என்று சண்டைக் கோழிபோல சலாம் வரிசை எடுக்கும் சங்பரிவார்களே! ஹ¤ந்து என்று பெயர் வைத்தது - மிலேச் சன் என்று வாய்ச்கூசாமல் சொல்லு கிறீர்களே - அந்த சாட்சாத் வெள்ளைக் காரக் கிறிஸ்துவன்தானே!

இதற்கு என்ன சாட்சி அத்தாட்சி என்று கேட்டுவிடாதீர்கள்! சொன்னவரின் பெயரைக் கேட்டால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள்.

குருமூர்த்தி அய்யர் ‘மகான் மகான்’ என்று எதற்கெடுத்தாலும் அழைக்கும் சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதிதான் அந்த மகா பெரிய சாட்சி.

அதுவும் எங்கிருந்து என்றால் “தெய் வத்தின் குரலி’’லிருந்து! நாம் சொன்னால் மனுஷாள் குரல்; அவாளின் மகான் சொன்னால், அது தெய்வத்தின் குரல்!

இதோ அந்தத் தெய்வக் குரல் பேசுகிறது.

“வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக் கள் என்று பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். இல்லாவிட்டால், சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்ப பக்தர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித் தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம்.

(தெய்வத்தின் குரல்’ முதல் பாகம், பக்கம் 267)

இப்படி இரவல் வாங்கிய ஒரு பெயரை வைத்துக்கொண்டு, கிஞ்சிற்றும் வெட்க மில்லாமல் சிலம்பம்  விளையாட ஆசைப் படலாமா குருமூர்த்தி - சங்கராச்சாரி வகையறாக்கள்?


No comments:

Post a Comment