கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (5) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (5)

வீ.குமரேசன்

சுற்றுலா நிறைவு நாள் 23.09.2022

முந்தைய நாள் வரை எங்களைச் சிற்றுந்தில் ஏற்றி அழைத்துச் சென்ற ஜப்பான்’ நாட்டு ஓட்டுநர் வேறு பணிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அவருக்கு அளிக்க வேண்டிய ஊக்கத்தொகையை   (tips) அன்று இரவே அனைத்துத் தோழர்களிடமும் பெற்று அவருக்குக் கொடுத்து நன்றி தெரிவித்து விடை கொடுத்தோம்.  சுற்றுலாவின் நிறைவு நாள் - ஒரு நாளைக்கு மட்டும் மாற்று ஓட்டுநர் வருவார் எனத் தகவல் கிடைத்த நிலையில் தோழர்கள் அனைவரும் கிளம்பும் நேரத்திற்கு முன்பே சீன நாட்டு ஓட்டுநர்  எங்களை அழைத்துச் செல்ல விடுதிக்கு வந்திருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார்.  அனைவரும் தங்களது  உடைமைகளை எடுத்துக் கொண்டு விடுதியைக் காலி செய்து விட்டுக் கிளம்பினோம்.  அடுத்த இரண்டு இரவு களுக்கு நாங்கள் தங்குவதற்கு மாநாட்டு ஏற்பாட்டா ளர்கள் டொரண்டோ நகரில், மாநாடு நடைபெறும் பகுதியான ஸ்கார்பரோவிற்கு (Scarborough) அரு கிலேயே ஒரு விடுதியில் முன் பதிவு செய்திருந்தனர்.  சுற்றுலா முடிந்து நேராக அந்த விடுதிக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

நிறைவு நாள்  பயணமாக - நெஞ்சில் நிறைவு - நீங்கா நினைவு தரும் இடத்தைக் கண்டு களிக்கும் பயணமாக இயற்கை எழில் சூழ்ந்த - உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பெருமை பெற்ற - பேரு ருவான நயாகரா அருவியைக் காணப் புறப்பட்டோம்.

நயாகரா அருவி

நயாகரா அருவி நகரம் என்பது அமெரிக்கா நியூயார்க் - மாநிலப்பகுதியில் உள்ளது. அருவி  அமெரிக்கா - கனடா நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.  அருவியின் பெரும் பகுதிகள் கனடா நாட்டு எல்லைக்குள் உள்ளது. வளைவாக அமைந் துள்ளதால் நயாகரா அருவியின் கனடா நாட்டுப்பகுதி ‘குதிரைலாட அருவி’ (Horse shoe Falls) என்று அழைக்கப்படுகிறது.  நயாகரா அருவியின் உயரம் 57 மீட்டர்; அருவி தொடர் பகுதியின் நீளம் 790 மீட்டர்; நீர் விழும் இடத்தின் ஆழம் 56 மீட்டர் (ஆழத்தை விட அருவியின் உயரம் அதிகம்),  நயாகரா அருவி என்பது குதிரைலாட அருவி, அமெரிக்க அருவி, பிரைடல் வெல்ஸ்  அருவி  ஆகிய அருவிப்  பகுதி களை உள்ளடக்கியது.  உலகில் நயாகரா  அருவியின் உயரத்தை விட அதிகமான  அருவிகள் 500க்கு மேற்பட்டு இருந்தாலும், நயாகராவின் சிறப்பு அதன் நீளமான, ‘பார்க்கும் விழிப்பரப்பில்’ உள்ளடக்க முடியாத  பேருருவாக அமைந்துவிட்டஅதன் இயற்கை எழில் ஆகும்.

குளிர் காலத்தில் அருவியை ஒட்டியுள்ள பகுதிகள் பனிப்பொழிவால் உறைந்திடும் வேளையில் அருவி உறையுமா ?  நயாகரா  அருவி  உறைந்தது உண்டா? என்னும் கேள்வி எழலாம்.  அருவி - குறிப்பாக நயாகரா  அருவி  உறைந்து போவதற்கான வாய்ப்பே இல்லை.  காரணம்  அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்து கொண்டே இருந்தால் பனிக்கட்டிபோல் உறைவதற் கான வாய்ப்பே இல்லை.  நகர்ந்து செல்லும் நீர்ப் போக்கின் போது  அருவியினால் விளையும் நீர்த்தி வலைகள் பனிக்கட்டிப் படலங்களாக நீர்மேல் மிதக்கக் கூடும்.  முழுவதும் நீர் உறைவதற்கான வாய்ப்பே இல்லை.  இருப்பினும் நயாகரா அருவி  உறைந்த வரலாறு உண்டு;  நடந்தது 1848 -ஆம் ஆண்டில்; அருவிக்குவரும் நீரைத் தடுத்துப் பனிப்பாறையில் அணை கட்ட முற்பட்ட பொழுது ஒரு முறை நயாகரா  அருவி   உறைந்துள்ளது. அதற்கு பின்னர்அப்படிப்பட்ட நிலைமை வரவில்லை.  உலகின் எந்தப் பகுதியைச் சார்ந்தவராக - வாழ்பவராக இருந்தாலும் ‘நயாகரா  அருவி’ யை பார்ப்பது ஒரு பெருமிதமாக இருக்கும்.  சுற்றுலாவில் பல இடங்களுள் ஒன்றாக மட்டுமே கருதிவிட முடியாத இயற்கைப் பேரழகைக் கொண்டு விளங்கி வருகிறது நயாகரா  அருவி.

டொரண்டோ நகரிலிருந்து 130 கி.மீ தொலைவை 2.30 மணி நேரப் பயணத்தில் கடந்து நண்பகல் 12 மணி அளவில் நயாகரா  அருவியைச் சென்றடைந்தோம்.   அருவிக்குச் சற்றுத் தொலைவிலேயே  ஊர்திகளை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும்.  அருவியை  நெருங்க நெருங்க மகிழ்ச்சியும், வியப்பும் கலந்து உணர்வு மேலோங்கியது.  அமெரிக்க நாட்டு மேரிலாந்து மாநாட்டில் கலந்த கொண்ட பின் சுற்றுலா சென்ற 10 தோழர்களுக்கு மேலும் ஓர் இன்ப உணர்வு தோன்றியது; 

ஆம்! 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க சுற்றுலாவில் நயாகரா  அருவி  நகரத்திற்கும் சென்றி ருந்தோம்.  ஓர்  இரவு அங்கே தங்கினோம்.  அமெரிக்க நாட்டுப் பகுதியில் தங்கி, நயாகரா அருவியை பார்த்தது - படகுப் பயணத்தில் அருவி வரை சென்ற நினைவுகள் மீண்டும் உள்ளத்தில் துளிர்த்தன.  அப்பொழுது அமெரிக்கப் பகுதியில் இருந்து  நீர்வீழ்ச்சியைப் பார்த்த வாறு ‘அதோ தெரிகிற மறுபக்கம் கனடா நாட்டுப் பகுதியாம்’ என்பது செய்தியாக இருந்தது.  இன்று அந்த கனடா நாட்டுப் பகுதியிலிருந்து ‘அதோ அந்தப் பகுதியில்தான் சென்றமுறை வந்தபோது நின்றிருந் தோம்;  அந்த இடத்தில்தான் நின்று கொண்டு மகிழ்ந் தோம்’ என அமெரிக்க நாட்டுப் பகுதியைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்,  மூன்று ஆண்டுகளில் வரும் என்பதை நினைத்துப் பார்க்கவே இல்லை.  நமது கொள்கைக் குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் மேற்கொண்ட முயற்சிகள், ஊக்கத்தின் காரணமாக கனடா - டொரண்டோ மாநாடு ஏற்பாடானது.  அதில் பங்கேற்க வந்ததால் நயாகரா அருவியை  மறுபக்கமான  - கனடாவிலிருந்து கண்டு மகிழ முடிந்தது.

முன்பதிவு செய்யப்பட்ட படகுச்சீட்டை - பதிவு அடையாள எண்ணைக் காட்டி பெற்றுக் கொண்டு மிகப்பல பயணியரை ஏற்றிக் கொண்டு காத்திருந்த விசைப் படகிற்கு விரைந்தோம். படகில் ஏறுவதற்கு முன்னர் சிவப்பு நிறத்திலான -  உடல், தலை முழுவதும் மூடிக் கொள்ளும் வகையில் பாலித்தீன் உடை ஒன்றை ஒவ்வொரு பயணியருக்கும் வழங்கினார்கள். படகுப் பயணத்தில் அருவிக்கு அருகாமையில் செல்லும் பொழுது அருவியின் நீர்திவலைகள் பயணிகள் மீது மிக அதிக அளவில் விழும்- நீர்திவலைகளால் அணிந்திருக்கும் உடைகள் நனைந்து விடக் கூடாது எனும் நோக்கத்தில் தான் பாலிதீன் உடை வழங்கப் படுகின்றன. பாலிதீன் உடைகளை அணிந்துகொண்டு படகில் ஏறியதும் படகு நகர்ந்தது.  படகில் இருந்தவாறே  நயாகராவின் இரண்டு கரைகளான அமெரிக்கா, கனடா பகுதிகளைப் பார்ப்பது தனி அழகாகத்தான் இருந்தது.  படகின் மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தோம்.  கனடா கரைப்பகுதியில் படகில் ஏறுபவர்களுக்கு சிவப்பு நிறத்தில் பாலிதீன் உடைகள் வழங்குவது, அமெரிக்கக் கரையிலிருந்து ஏறுபவர்களுக்கு நீல நிறத்தில் பாலிதீன் உடைகளையும் வழங்குகிறார்கள்.  அந்தந்த நாட்டுப் போக்குவரத்து கட்டுப்பாட்டால் அந்தந்தப் படகுகள் அருவிக்கு அருகில் வரை சென்று திரும்புகின்றன.

நமது தோழர்களுள் கொள்கை முழக்கத்தின் குரலாக விளங்கிடும் தோழர் ஊமை ஜெயராமன், இரண்டு நாட்டுப் படகுகளையும் அவைகளில் தனித் தனியாக சிவப்பு, நீலநிற உடையணிந்த பயணிகள் பயணித்ததையும் பார்த்துவிட்டு கூறினார்.

‘சிவப்பு உடை பயணியர் அணி பொதுவுடைமைக் கொள்கையையும் நீல உடை பயணியர் அணி புரட்சி யாளர் அம்பேத்கரின் கொள்கையையும் இரண்டிற்கும் நடுவில் தந்தை பெரியாரின் கொள்கையின் அடை யாளமாக கருப்புச் சட்டைத் தோழர்கள்.  இவை மூன்றும்தான் மானுடத்தைக் காப்பாற்றி முன்னேற்ற முடியும் என்பதன் அடையாளமாக - நயாகரா அருவியில் இந்தப் பயணம் எனக்குத் தோன்றுகிறது.

தந்தை பெரியார் வாழ்க!

அன்னை மணியம்மையார் வாழ்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க!

என முழக்கமிட்டதும், அனைத்துத் தோழர்களும் சேர்ந்து ஒரே குரலில் முழக்கமிட்டதும் மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது.  முழக்கமிட்ட கருப்புச் சட்டைத் தோழர்களை படகில் பயணித்த மற்ற பயணியர் கவனித்து வியந்தனர்.  படகில் பயணித்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த  இளம் இணையர்கள் ‘முழக்கத்தின் முக்கியத்துவம்- பெரியார் என்பவர் யார்?’ எனக் கேட்ட விளக்கங்களுக்கு தோழர் ஊமை ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி இணையர் சிறிய தொரு பரப்புரையையே படகுப் பயணத்தில் நடத்தி விட்டனர்.

பரப்புரை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அருவியை நெருங்கி விட்டோம்.  வானத்தில் விமானம் தாழப்பறந்து உயரே எழுவது போல, படகுகள் வேகமாகச் சென்று அருவியின் நுனிப் பகுதியில் சென்று விட்டு சாய்வாகத் திரும்பியது.  பயணிகளின் குரல் ஓர்மித்து எழுந்தது.

படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு கரை திரும்பியதும் நயாகரா அருவியின் பின்னணியில் ஒளிப்படங்களை தோழர்கள் அனைவரும் இணைந்து நின்று எடுத்துக்கொண்டோம்.  தனித்தனியாகவும் ஒளிப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

நண்பகல் உணவினை சற்று தாமதமாகவே நயாகரா நகரத்திலிருக்கும் ஒரு பஞ்சாபிக்காரர் நடத்திடும் உணவு விடுதியில் அருந்திவிட்டு டொராண்டோ நகருக்குக் கிளம்பினோம்.  செல்லும் வழியிலேயே,  தொடக்கக்கால நயாகரா குடியிருப்பு பகுதிகள் அப்படியே பராமரிக்கப்படும் பகுதியைத் தோழர்கள் சென்று பார்த்தனர்.

இரவு நெருங்கும் மாலை நேரத்தில்  டொராண்டோ நகருக்குத் திரும்பினோம்.  முந்தைய நாள் இரவு உணவு அருந்திய சென்னை உணவகத்திலேயே  தேவையானவற்றைக் கட்டித்தரச் சொல்லி பெற்றுக் கொண்டு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பதிவு செய் திருந்த விடுதிக்குச் சென்று சேர்ந்தோம்.  

எங்களையெல்லாம் மாநாட்டை ஏற்பாடு செய்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் - மருத்துவர் சரோஜா இளங் கோவன், அருள்செல்வி பாலகுரு, பேராசிரியர்கள்   முனைவர் இலக்குவன் தமிழ், முனைவர் அரசு செல்லையா ஆகியோர் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.   

அமெரிக்கா - வாசிங்டன் மாநிலம் சியாட்டல் நகரிலிருந்து தோழர்கள் ந.மணவாளன் - ரேணுகா இணையர் அப்பொழுதுதான் வருகை தந்தனர்.   டொரண்டோ நகரில் உயர்கல்விப் பெற்றுவரும் க.எழிலனும் உடன் இருந்தார்.

கடந்த அய்ந்து நாள்களாக வெளிநாட்டுப் பயணத் தின் நிறைவாக, ஏற்கெனவே அறிமுகமானவர்களை - தமிழர்களைச் சந்தித்ததில் பயணக் களைப்பும் நீங்கியது.  அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று அடுத்த நாள் தொடங்கும் பன்னாட்டு மாநாட்டிற்கு ஆயத்தமானோம்.

அய்ந்து நாள்கள் கனடா நாட்டு பயணம் முந்தைய வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தது.  இயற்கைச்சூழலில் பயணித்த மகிழ்ச்சி மேலோங்கி இருந்தது.  தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், முழுமையான உடல் நலத்துடனும்  பயணம் செய்தது - தட்பவெப்ப நிலை மாறுபட்ட சூழலிலும் - மனதிற்கு நிறைவாக இருந்தது.

பன்னாட்டு மாநாடு நடந்த விதம் பற்றி விரிவாக எழுதுவோம்.  

நன்றி வணக்கம்!

(நிறைவு)


No comments:

Post a Comment