டில்லி செல்கிறார் முதலமைச்சர் குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

டில்லி செல்கிறார் முதலமைச்சர் குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திப்பு

சென்னை,ஆக.16- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டில்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி, ஆக.9 வரை நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தொடங்கிவைத்தார். இறுதியாக ஆக.9இல் நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

இந்நிலையில், போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற இன்னும் பல உலகப் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ் நாட்டுக்கு தரவேண்டும் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து, நேரில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் விரும்பினார்.

இதையடுத்து, இன்று (16.8.2022) இரவு 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி புறப்பட்டுச் செல்கிறார். டில்லியில் அவருக்கு திமுக மக்களவை உறுப்பினர் டிஆர்.பாலு உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர்.

இரவு டில்லியில் ஓய்வெடுக்கும் அவர், சமீபத்தில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவராக பொறுப் பேற்றுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோரை நாளை காலை சந்திக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் மாநிலத்துக்கான கோரிக்கை மனுவை அளிக்கிறார்.

தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள்

சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய துறைகள் சார்ந்த நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்தத்தை ரத்து செய்வது, நீட்தேர்வு தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் இருக்கும் மசோ தாவுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை தொடர் பாகவும், தமிழ் நாட்டின் தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் அங் கிருந்து புறப்பட்டு, நாளை இரவு 10.45 மணிக்கு சென்னை திரும்புகிறார்.


No comments:

Post a Comment