இதற்குப் பெயர் ஊழல் இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

இதற்குப் பெயர் ஊழல் இல்லையா?

பந்தல் கண்ட் விரைவுச்சாலை என்ற பெயரில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் 296 கி.மீ நீளத்திற்கு  நான்கு வழிச்சாலை மோடியால்    திறந்து வைக்கப் பட்டது.

 சில ஆண்டுகளுக்குமுன் இந்த பந்தல்கண்ட் அதிவிரைவு சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த சாலையை ஜூலை 16ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த சாலை திறக்கப்பட்டு 4 நாட்களே ஆன நிலையில், தூறல் மழைக்கே சாலையில் ஒருபகுதி பெயர்ந்து விட்டது. 

 ஜலான் மாவட்டத்தில் உள்ள சிரியா சேலம்பூரில்   தொடர்ந்து பெய்த மிதமான மழையால் சாலையின் ஒரு பகுதியில் 1.5 அடி ஆழமுள்ள பள்ளம் உரு வாகியது. இதையடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையை சரி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

 உத்தரப் பிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை  திறந்து வைத்துப் பேசிய பிரதமர், “இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏமாற்றும் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களுக்காகப் புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அல்லது பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்க மாட்டார்கள். இந்த ரவுடி கலாச்சார மக்கள் இலவசங்களைக்  கொடுத்து பொதுமக்களை வாங்க நினைக்கிறார்கள். அவர்களின் இந்த சிந்தனையை நாம் கூட்டாக தோற்கடித்து, நாட்டின் அரசியலில் இருந்து இலவசம் என்று கூறி ஏமாற்றும் கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்,” என்று கூறினார்.

இந்த நிலையில் இத்தனைக் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலையின் பல இடங்கள் சாதாரண மழைக்கே சேதமாகி உள்ளதால் தற்போது பெரும்பாலான இடங் களில் மீண்டும் செப்பனிடும் வேலை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் சமூகநீதி திட்டங்களையும் மறைமுகமாக, ஏமாற்று வேலை என்று இந்தக் கூட்டத்தில் மோடி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

28 மாதங்கள் பணி மேற்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்ட 296 கி.மீ. சாலை நான்கே நாட்களில் சிறுமழைக்கே சீர் குலைந்து போன அவலம் பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.

இதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகையோ ரூ.14 ஆயிரம் கோடி (பழுதான சாலையின் படம் மூன்றாம் பக்கத்தில் காண்க)

ஊழலற்ற ஆட்சி என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பி.ஜே.பி. கூட்டணி நடத்தும், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் நிர்வாகம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இந்தச் சாலைப் பிரச்சினை ஒன்றே போதுமானது.

கடுமையான ஊழல் நடந்திருந்தாலொழிய ரூ.14 ஆயிரம் கோடியில் 28 மாதங்கள் பணி நடத்தப்பட்ட நிலையிலும் சாலை சின்னாபின்னம் ஆகியிருக்க முடியாது.

ஒரு பகுதியில் 1.5 அடி ஆழமுள்ள பள்ளம் ஏற்பட்டது என்றால் எந்தத் தரத்தில் சாலை அமைக்கப்பட்டிருக்கும் என்பது புரியவில்லையா? அந்தச் சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு - தான் பேசிய பேச்சு அடுத்து தன் மீதே அம்பாக பாயும் என்பது தெரியாமல் போனதுதான் பரிதாபம்!

No comments:

Post a Comment