1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த ஆங்கிலேயரான எல்லீஸ் துரை தமிழ் படிக்க விரும்பினார்.
அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடிவொன்றை தாம் வேலை பார்க்க வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பார்ப்பனரிடம், கந்தசாமி கொடுத்த திருக்குறள்பற்றிக் கூறினார்.
அதற்கு அந்தப் பார்ப்பனர் சொன்னது என்ன தெரியுமா? ‘‘கந்தசாமி தீண்டத்தகாதவர். அவர் கொடுத்த திருக்குறளும், தீண்டத்தகாதது'' என்றார். வள்ளுவர் புலைச்சியின் மகன் என்பது பார்ப்பனர்களின் எண்ணம்.
‘ஏன் இப்படி இவர்கள் கூறுகிறார்கள்?' என்று, கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை வினவினார்.
அதற்குக் கந்தசாமி சொன்ன பதில், ‘‘எங்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் விரோதம்! எங்கள் தெருக்களுக்குள் பார்ப்பனர்கள் வந்தால், ‘உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும்!' என்று சொல்லித் துரத்துவார்கள். வந்து சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து, சாணச் சட்டியையும் உடைப்பார்கள்'' என்று கூறினார்.
உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1819 இல் எல்லீஸ் மறைய நேரிட்டதால், குறளை முழுவதும் மொழி பெயர்க்க இயலாமல் போயிற்று.
இந்தத் தகவலை ‘‘செந்தமிழ்ச் செல்வி'' இதழ் (மார்ச் 2000) ‘‘குறளும், அயோத்தி தாசரும்!'' என்ற தலைப்பில் தலையங்கமாகவே வெளியிட்டது.
ஆண்டாளின் திருப்பாவையில் இடம்பெற்ற ‘தீக்குறளைச் சென்றோதோம்!' என்ற வரிக்குத் தீய திருக்குறளை ஓதமாட்டோம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறவில்லையா? ‘குறளை' என்றால், கோள் சொல்லுதல் என்பது பொருள். ஆனால், திருக்குறள்மீது இருந்த வெறுப்பின் காரணமாக இவ்வாறு கூறினார்.
ஆம், திருக்குறள் என்றால் சங்கராச்சாரியார்முதல் ஆளுநர் ரவி வரை ஓர் ‘இனம்' தெரியாத வெறுப்பே!
- மயிலாடன்
No comments:
Post a Comment