கடந்த சனியன்று (30.7.2022) அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு எல்லா வகையிலும் சிறப்புப் பெற்ற வெற்றிகரமான மாநாடாகும்.
இளைஞரணி மாநாடாக இருந்தாலும் குடும்பம் குடும்பமாக கழகத்தினர் கூடிய காட்சியைக் கண்டு மனம் களித்த மாநாடாகும் - மணம் கமழும் அம்சங்கள் வீசிய மாநாடாகும்.
காலத்திற்குத் தேவையான அவசியமான வழிகாட்டும் தீர்மானங்கள் மாநாட்டின் அரிய முத்திரைகளாகும்.
திராவிடர் கழக சிந்தனை என்பது மற்றவர்களிடமிருந்து அமைப்புகளிடமிருந்து எந்த அளவு வித்தியாசப்பட்டது என்பதற்கு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சாட்சியங்களாகும்.
இளைஞர்கள் எடுத்த உறுதிமொழிகளும் - அணி வகுப்பும் - பொது மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் எள்ளளவு அய்யமும் இல்லை.
பேரணியை, தமிழர் தலைவரோடு அமர்ந்து பார்த்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கரன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது முக்கியமானது.
"நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இளைஞர்கள் அணி வகுத்த விதம், வெளியிட்ட கருத்தாழமிக்க முழக்கங்கள், கட்டுக்கோப்புடன் பேரணி நடந்த முறைகள் என்று" மனந்திறந்து பாராட்டினார்.
இதே கால கட்டத்தில் தி.மு.க.வின் சார்பில் பாசறைக் கூட்டங்கள் நடப்பது குறித்து தமிழர் தலைவர் பாராட்டிய தையும் இணைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் சங்பரிவார்களின் திட்டத்தைத் தூள் தூளாக்க இளைஞர் பெரும்படை தாய்க் கழகமான திராவிடர் கழகத்திலும், அரசியல் வடிவமான தி.மு.க.விலும் அணி வகுத்து பலமாகக் கிளம்பி விட்டது என்பது தெரிய வேண்டிய வர்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
பகுத்தறிவு, சுயமரியாதை, பாலியல் நீதி, சமூகநீதி சிந்தனையில்லாமல் நடைபோடும் எந்த அமைப்புக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை நம் தலைவர்கள் உணர்ந்து இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் போக்கு காலத்தாற் போற்றப்படும்.
அரியலூரில் கூடிய கழக இளைஞரணியினருக்கு அடுத்த கட்டமாகப் பயிற்சிப் பட்டறைகள் தேவைப்படும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் அதுவும் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் மண்டல அளவில் பெரியாரியப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்ற தீர்மானத்தைக் கழகப் பொறுப்பாளர்கள் மனதிற் கொள்ள வேண்டும் - செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்து கிறோம்.
கழகத்தின் அமைப்புச் செயலாளர் மண்டலத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், கழகத்தின் அனைத்து அணிகளையும் சேர்ந்த பொறுப் பாளர்கள் (பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஆசிரியரணி உள்பட) அனைவருடனும் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வெறும் உணர்ச்சி மட்டும் போதுமானதல்ல; கொள் கைகளை உள்வாங்கும், சுவாசிக்கும் செயல்படுத்தும் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நடத்திச் செல்லப்பட வேண்டும்.
திருக்குறளில் வினையின் செயல் வகை அதிகாரத்தில் ஒரு குறள்
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (குறள் - 678)
ஒரு வினையைச் செய்யும்போது அதனோடு ஒத்து வரக் கூடிய மற்றொரு வினையையும் சேர்த்துச் செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும்.
எதுபோல் என்றால் ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைக் கட்டுக்குள் கொண்டு வருவது போன்றதாகும் என்பது இதன் பொருள்.
இயக்கத்திற்கு வரும் இளைஞர்களை, இரு கைகளால் அரவணைத்து, இதயத்தால் பேசி, இலட் சியப் பாதைக்கான பாலூட்டும் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்து, ஆற்றுப்படுத்துதல் அடிப்படை பணியாகும்.
அப்படி உறுதி செய்யப்பட்ட இளைஞர்கள், எந்தப் புயல் அடித்தாலும் சபலத்திற்கோ, சஞ்சலத்திற்கோ குழு மனப்பான்மைக்கோ இடமளிக்காமலும் மாற்றார் விரிக்கும் வலைக்குள் விழாமலும், துரோகங்களுக்குத் துணைப் போகாமலும், அத்தகையவர்களையும் இயக்கப் பாதைக்கு இழுத்து வரும் உறுதி படைத்த நெஞ்சினராக இயக்கத்திற்குப் பேரரணாக உருவாவார்கள் - எதிர்காலத்தில் இயக்கத்தில் இருப்பவர்களாக மட்டுமல்லாமல் நடத்திச் செல்பவர்களாகப் பரிணமிப்பார்கள்.
அரியலூர் மாநாடு இந்த வழியைக் காட்டட்டும் - காட்டவும் வேண்டும். மாநாட்டின் வெற்றிக்கு எம் கடன் பணி செய்து கிடப்பதே!" என்று பணியாற்றி மாநாட்டை வெற்றி முகட்டுக்குக் கொண்டு சென்ற கருஞ்சட்டைத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டும், நன்றியும் அளவிட முடியாதவை!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு
வெல்க திராவிடர் கழகம்!
No comments:
Post a Comment