அரட்டை அடிப்பது ஆளுநருக்கழகல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

அரட்டை அடிப்பது ஆளுநருக்கழகல்ல!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிறித்தவ மத போதகர் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது.

டில்லியில்  தமிழ் கல்விக் கழகம் 1923ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நூற்றாண்டை நோக்கி சென்று கொண் டிருக்கிறது. இதையொட்டி அதன் லோதி சாலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் திருக்குறள் தொடர்பாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:

"திருக்குறளின் ஒவ்வொரு குறளிலும் கோட்பாடு, நடத்தை, நெறிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறளில் இவற்றை விட மிக, மிகப் பெரியது உள்ளது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது. திருக்குறளில் முதலாவது குறளே ஆதிபகவன் பற்றியது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்று ஒரு மாணவர் படிக்கிறார். அதில் தொடர்ச் சியாக  வரும் 10 குறள்களிலும் அடிப்படையாக இருப்பவை 'அந்த 'ஆதி' பகவன் மீதான பக்தியை' பற்றியது. ஆதிபகவன் என்ற தமிழ்ச் சொல்லை மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், அசாமீஸ் என எல்லா இந்திய மொழிகளிலும் உணரலாம். அதைச் சொல்லும்போதே, ஆதி பகவன் என்பது யார் எனத் தெரிந்து விடும். ரிக் வேதத்திலும் ஆரம் பத்தில் ஆதிபகவன் என்றே தொடங்குகிறது. அந்த ஆதிபகவன்தான் ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார். பிறகு இந்த புவியைப் படைத்து அதன் எல்லாவற்றிலும் நிலைத்திருக்கிறார்.

இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனித னுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட் டுள்ளார். நமது மொழிக்கு அடிநாதமாக இருப்பது எழுத்துகள். அந்த எழுத்துகள் இல்லையென்றால் நம்மால் எழுத முடியாது, படிக்க முடியாது. எந்தவொரு வார்த்தையையும் பேச முடியாது. அந்த எழுத்துகள் தான் நமது எழுத்துக்கும் பேச்சுக்கும் அடிப்படை. அதுபோல 'ஆதிபகவன்' தான் எல்லா படைப்புக்கும் தொடக்கமாக இருக்கிறார்" என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். 

ஆளுநராக இருக்கக் கூடிய ஒருவரின் வேலை- அரசமைப்புச் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதையும் சரியாக செய்வதில்லை - எதிலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவது, நடப்பது என்பது ஆளுநர் ரவியின் வழைமையாகி விட்டது.

பொதுவாக திருக்குறள் என்றாலே பார்ப்பனர் களுக்கு வேப்பெண்ணெய் சாப்பிட்ட மாதிரிதான். ஆதி பகவனுக்கு ஆளுநர் கூறும் விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும்.

வ.வே.சு. அய்யர் 'The kural or Maxims of Thiruvalluvar' என்ற பெயரில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார்.

அதில் திருவள்ளுவர் 'ஆதி' என்ற பறைச்சிக்கும், 'பகவன்' என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவர் திருவள் ளுவர் என்று எழுதியுள்ளார்.

திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உள்ள மேன்மையைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் நிலைப்பாடு.

திருக்குறளில் எந்த இடத்திலும், கடவுள், மதம் என்ற சொற்கள் இடம் பெறவில்லை. 

'கடவுள் வாழ்த்து என்று கூறப்படும் முதல் அதி காரமே திருவள்ளுவர் எழுதியது கிடையாது' - என்று வ.உ.சிதம்பரனார் ஆய்வு செய்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் வேதங்கள் எங்கே? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் திருக்குறள் எங்கே? அரட்டை அடிப்பது ஆளுநருக்கு அழகல்ல!

No comments:

Post a Comment