ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி உண்டாம்
புதுடில்லி,ஆக.31- முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால், 'கேன்சலேஷன்' கட்டணத் துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டி.,யும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டு உறுதி யான பிறகு அதனை ரத்து செய்யப்பட்டால் 'கேன்ச லேஷன்' கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படும். தற் போது அதற்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை கடந்த 3ஆம் தேதியன்று ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக ரயில்வேயின் வரி ஆராய்ச்சி பிரிவு சுற்றறிக்கை மூலம் விளக்கம் கொடுத் துள்ளது. அதில், 'ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதென்பது அதன் சேவையை பெறுவதற்கான ஒப்பந்தம் போன்றது. அதற்கான பயணச்சீட்டு உறுதியான போதும் அதனை ரத்து செய்வதால் ரயில் சேவையை வழங்கும் அய்.ஆர்.சி.டி.சி நிறுவனத்துக்கு இழப்பீடாக இதுவரை கேன்சல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் சேர்த்து வசூலிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது, முதல் வகுப்பு ஏசி.,யில் முன்பதிவு செய்யப் பட்ட பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் 240 ரூபாயுடன் 5 சதவீத ஜி.எஸ்.டி. சேர்த்து 252 ரூபாய் வசூலிக்கப்படும். அதேபோல இரண்டாம் வகுப்பு ஏசி கோச் பயணச்சீட்டாக இருந்தால் ரூ.200 உடன் 5 சதவீத ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசியாக இருந்தால் ரூ.180 உடன் 5 சதவீத ஜிஎஸ்டி என சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படுமாம். அதேநேரத்தில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment