மலேசியா - பினாங்கு மாநில ஆளுநர், ச.த. அண்ணாமலை அவர்களுக்கு 'டத்தோ' விருதினை சூட்டுகிறார். விருது பெற்ற டத்தோ
ச.த. அண்ணாமலையுடன் அவரது வாழ்விணையர் டத்தின் கோ.அங்காயி, பினாங்கு மாநில ம.தி.க. துணைத் தலைவர் கோ. மருதமுத்து மற்றும் விருது பெற்ற பிறரும் உள்ளனர்.
மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பினாங்கு மாநில கழகத் தலைவருமான ச.த.அண்ணாமலை அவர்களுக்கு, மலேசியா, பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதான டத்தோ விருது 25.7.2022 அன்று பினாங்கு நகரில் வழங்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில ஆளுநர் மேதகு துன் டத்தோசிறீ உத்தாமா அஹமாட் ஃபூசி பின் ஹாஜி அப்துல் ரசாக் அவர்களின் 73 ஆம் ஆண்டு பிறந்தநாளில் டி.எஸ்.பி.என் எனும் டத்தோ விருது ச.த.அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. மலேசியத் திராவிடர் கழக வரலாற்றில் இதுவே முதல் முறையாக மலேசிய திராவிடர் கழகத் தோழருக்கு மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
1970களில் மலேசியத் திரா விடர் கழகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட டத்தோ ச.த.அண்ணாமலை படிப்படியாக உயர்வுப் பெற்று, இன்று மலேசியத் திராவிடர் கழகத்திற்கு தலைமையை ஏற்றுள்ளார். தன் வாழ்நாளில் மதிக மட்டுமே இவர் கண்ட, கொண்ட இயக்கமாகும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிப்படை கொள் கைகளை தன் வாழ்நாளில் முழுமையாக ஏற்றுக்கொண்டு தீராப்பற்றுடன் மலேசியத் திராவிடர் கழகத்தை வழிநடத்தி வரும் டத்தோ ச.த.அண்ணாமலை உயரிய விருது பெற்றமைக்கு நாடு தழுவிய நிலையிலும், தமிழ்நாட்டில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ச.த.அண்ணாமலை தான் செய்த சேவைக்கு இந்த உயரிய விருதை பெற்றிருந்தாலும் மதிகவிற்கு இது ஒரு மிகச்சிறந்த அங்கீகாரம் என்று கழகத்தின் மூத்த தலைவர்கள்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மலேசிய பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமியின் பெரும் முயற்சியில் மாநிலத்தின் உயரிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க பெரியார்! வளர்க அவர்தம் கொள்கை. நன்றி வணக்கம்.
பினாங்கு மாநிலம் தந்த உயரிய விருதை கழக முன்னோடிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்
பினாங்கு மாநில ஆளுநர் பிறந்த நாளில் எனக்கு கிடைத்த டத்தோ என்ற உயரிய விருதை கழக முன்னோடிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என ம.தி.க. தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை ஊடகங் களுக்கு வெளியிட்ட ஒரு செய்தியில் கூறினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் ஆயிரமாயிரம் தொண்டர்கள், தலைவர்கள் உழைப்பு தியாகத்தால் உருவானது மதிக என்ற பகுத்தறிவு இயக்கமா கும். திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி, கட்டடக் குழுத் தலைவர் மருதமுத்து, மூத்த தலைவர் மு.சு.மணியம், மேனாள் கழக தேசியத் தலை வர் பி.எஸ்.மணியம், கொள்கைச் சுடர் ரெ.சு.முத்தையா, பத்தாங் பெர்ஜுந்தை பரசுராமன், ஈஜோக் நல்லதம்பி, ம.பெ.இராமசாமி, பந்திங் கண்ணன் போன்ற எண்ணற்ற கழகத் தலைவர்களாலும், கொள்கைச் சுடர் கொண்ட உறுப்பினர்களாலும் கட்டிக் காக்கப்பட்ட மதிகவுக்கு முதல் முறையாக கிடைத்திருக்கின்ற ஓர் உயரிய விருதை கழகத்திற்கே நான் அர்ப்பணிக்கிறேன்.
பினாங்கு மாநில ஆளுந ருக்கும், மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கும் மதிக தனது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் தமது செய்தியில் கூறினார்.
- பினாங்கில் இருந்து செ.குணாளன்
No comments:
Post a Comment