கேள்வி: நாம் கடவுள் மறுப்புக் கொள்கை பேசுவதை தோழமைக் கட்சி தோழர்களே சட்டவிரோதம் என்று கூறும் அளவிற்கு செல்கிறார்களே?
- பார்வேந்தன், காஞ்சிபுரம்
பதில்: பரிதாபத்திற்குரிய அவர்களுக்கும் சேர்த்து நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இன்னும் அதிகமாகச் செய்வதோடு, இதன் தேவையை அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமாக விளக்க வேண்டும்.
நமது ஏடுகளை அவர்கள் படிக்குமாறு வழிகாட்டத் தவறாதீர்கள்!
- - - - -
கேள்வி: இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுகள் குறித்த குழப்பங்கள் எப்போது தீரும்?
- மோகன் செந்தில், அரியலூர்
பதில்: அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்ததால் ஏற்பட்ட கோளாறுகள்.
நிச்சயம் தக்க மறுஆய்வினை நடத்தி ஆதாரத் தோடு சமர்ப்பித்து வெல்லலாம். உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை. அனுமதித்த தீர்ப்பு முன்னோட்டமாக உள்ளது. அரசியலில் பயன் பெறக் காட்டிய அவசரக் கோலமே இந்த நிலையை உருவாக்கியது. நிச்சயம் தீர்வு காணமுடியும். முறைப்படி தீர்வு காண்போம்.
- - - - -
கேள்வி: தமிழ்நாடு அரசின் காவல்துறை - சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போல் தொடர்ந்து பேசி வரும் மதவெறியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நம் கூட்டங்களில் நாம் எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்று பாடம் நடத்துகிறார்களே- இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
- அ.தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: எத்தனையோ முறை விளக்கப்பட்டுவிட்டது. என்றாலும், பல காவல்துறை அதிகாரிகள், “கீதா உபதேசம்“ போல செய்துவிட்டு குற்றவாளிகளைத் தப்பவிட்டு, இப்படி சட்ட விரோத முறைகேடுகளுக்கு இடங்கொடுக்கின்றனர்.
- - - - -
கேள்வி: எளிய மக்களை வதைக்கும் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றினாலும் தொடர்ந்து பா.ஜ.க வெற்றி பெறுகிறதே!
- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை
பதில்: அது ஒரு விந்தை. இரண்டாவது எதிர்க்கட்சி களிடையே ஒற்றுமை இல்லாமை பெரிய பலவீனம். இரண்டும் மாறும் நிரந்தரமல்ல என்று நம்புவோம்.
- - - - -
கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பொருளாதார நெருக்கடி குறித்து பேசக்கூடாது என்கிறார்களே- அவர்கள் வெறும் பார்வையாளர்களா?
- தமிழ்ச்செல்வன், சிறுபாக்கம்
பதில்: நல்ல கேள்வி, மக்களவைத் தலைவருக்கு வாக்காளர் என்ற முறையில் இந்த மில்லியன் டாலர் கேள்வியை அனுப்பி விடை கேளுங்கள்.
- - - - -
கேள்வி: மாணவச் செல்வங்களின் தொடர் தற்கொலைகள் கவலை அளிப்பதாக உள்ளதே - தடுக்க ஏதேனும் பிரச்சாரம் செய்வீர்களா?
- செ.பாக்யா, பொன்னமராவதி
பதில்: ஜூலை 28ஆம் தேதி விடுதலையில் உள்ள அறிக்கையை இணையத்தில் தேடியாவது படியுங்கள்! நிச்சயம் பிரச்சாரம் செய்வோம்.
- - - - -
கேள்வி: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காத அமைச்சர் க.பொன்முடி, அண்ணா பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது ஏன்?
- ப.ஆனந்தன், சைதாப்பேட்டை
பதில்: இது முறைப்படி உயர் கல்வித்துறை அனுமதி யோடு, ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரல்களோடு நடந்தது என்பதாலும், மதுரையில் இருந்த ஏற்பாட்டு முறைகேடுகள் இங்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
- - - - -
கேள்வி: செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நடைபெற்ற நேரு ஸ்டேடியத்தில் தமிழர் பாரம்பரியம் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன - இனியாவது பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உணர்வாரா?
- சிவகுமார், வேலூர்
பதில்: நேற்றே உணர்ந்திருப்பார். திராவிட மாடல் ஆட்சி நன்கு உணர்த்தியுள்ளதே - முறைப்படியான செயல்பாட்டின் மூலம்.
- - - - -
கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்கு பொதுவாக விளையாட்டுகள் பிடிக்குமா?
- கதிர்நிலவன், செஞ்சி
பதில்: அவரது பொதுவாழ்க்கை பொதுத் தொண்டில் இதுபற்றிய சிந்தனை, மனதில் எழுவதற்கு, அவரது பிரச்சார, போராட்டக்களம் நேரம் தந்ததாக தெரிய வில்லை.
- - - - -
கேள்வி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறை வேற்றிய சட்ட மசோதாக்களை, நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் (சொந்த விருப்பத்தின் பேரில்) கிடப்பில் போட்டு வைக்கும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் அளிக்கிறதா? அப்படி அளித்தால் அது சரியா?
- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை பேரறிவாளன் வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் வழங்கிய தீர்ப்பும், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும் போதிய சான்றாவணங்களாகும்.
No comments:
Post a Comment