நூல் அறிமுகம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

நூல் அறிமுகம்

திராவிடப் பத்திரிகைகளில் 

8

ஆதிதிராவிடர் ஆவணங்கள்தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று புரிதலற்ற வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வரும் நிலை உள்ளது. மேலும், பண்டிதர் அயோத்திதாசரை திட்டமிட்டு திராவிடர் இயக்கத்தினர் மறைக்கின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டையும் திராவிடர் இயக்கத்தின் மீது சுமத்தி திராவிடர் இயக்கத்தையும் குறிப்பாக தந்தை பெரியாரிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் பார்ப்பன சூழ்ச்சி பகிரங்கமாக அரங்கேற்றப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் அதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் உறுப்பினராக பணியாற்றும் 

திரு. கோ.ரகுபதியினால் தொகுக்கப்பட்டு, தடாகத்தின் வெளியீடாக ‘திராவிட பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள்‘ என்ற அதி அற்புதமான நூல் ஒன்று வரலாற்று பெட்டகமாக வந்துள்ளது.

இந்த நூலை அதன் ஆசிரியர் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகம் பெரியார் திடல் ‘சென்னை’க்கு அர்ப்பணித்துள்ளதன் மூலம் இந்த நூலில் உள்ள கருத்துகள் எத்தகையது என்பதனை தெள்ளென நமக்கு உணர்த்தும்.இது இந் நூலின் தனி சிறப்பும் கூட. இதன் மூலம் பெரியார் திடலில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்தின் தனித்தன்மை அதன் அறிவார்ந்த பணியையும் ஆராய்ச்சியாளர் உலகமும் தமிழ் கூறும் நல் உலகமும் புரிந்துகொள்ள சரியான சான்றாக உள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்று தரம் பிரித்துப் பார்க்க இந்நூல் சரியான வழிகாட்டி ஆம் அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களையும் அதற்காக பாடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் கருத்துகளையும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களிடத்திலும் துணிச்சலுடன் கொண்டு சேர்த்தபெருமை திராவிட இயக்க பத்திரிகைகளான ‘திராவிடன்‘, ‘நகரத் தூதன்‘, ‘புரட்சி‘, ‘குடிஅரசு’ ஆகியவைகளை மட்டுமே சேரும் என்பதனை ஆதாரத்துடன் நிறுவியுள்ளார் நூலாசிரியர்.

மது தரும் ‘மாலை நேர‘ போதையை விட ஹிந்து - ஜாதியம் ஏற்றும் ‘இராப்பகல்’ போதை மனிதர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கிறது என்று அன்று பேசியுள்ள கருத்து இன்றும் பொருந்தி வரும் நிலையை தொகுப்பாசிரியர் வரிசைப்படுத்தி உள்ளது காலாகாலத்திற்கும் அறிவுறுத்தும் ஆவணம் ஆகும்

மேலும் இந்நூலில் ‘இந்து மதக் கொடுமை’ என்ற பொருளில் ‘நாம் இந்துக்கள்’ என்று அழைக்கப்படுவதாக இருந்தால் மற்ற இந்துக்களைப் போல் சகல உரிமையும் நமக்கு கொடுக்கப்பட வேண்டும் இல்லையானால் சுயமரியாதை தலைவர்கள் சொல்லியபடி ஏதாவதொரு இந்தியத்திற்கு எதிர்மதத்தில் நாம் அனைவரும் பிரவேசித்து இந்து மதத்தை இல்லாதொழிக்கவே பாடுபட வேண்டும் என்ற அன்றைய ஆதிதிராவிடர் நண்பர் திரு வி.அண்ணாமலையின் இக்கருத்தை இன்றைய இளைஞர் சமுதாயம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்

ஈரோடு ஆலய பிரவேச வழக்கு விசாரணை அன்று ஆலய பிரவேசம் நடத்தியதில் யார் முன்னோடி என்பதை பறைசாற்றுகிறது.

ஆதிதிராவிடர்கள் உருவாக்கிய சுயமரியாதை கோட்பாட்டை பின்னாளில் பெரியார் பின்பற்றியதால் நியாயப்படி அயோத்திதாச பண்டிதர் தான் சுயமரியாதை தலைவர் எனத் தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படை தலைவரான பாலகுரு சிவத்தின் பேச்சு ‘திராவிடன்’ பத்திரிகையிலேயே வெளியானது என்பது திராவிடர் இயக்கம் நியாயத்தையும் உண்மையையும் மறைக்காத இயக்கம் என்பது நிறுவப்படுகிறது.

மேலும் மதவாதத்தை சுட்டுவதற்கு இன்று பயன்படுத்தும் தீவிரவாதம் தீவிரவாதி என்ற சொற்களுக்கான “Terrorising, Terrorisers”  என்ற ஆங்கில சொற்களால் ஜாதி வெறியர்களை இரட்டைமலை சீனிவாசனும் ஆர். வீரையனும் குறிப்பிட்டுள்ளது போன்ற ஆவணங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில் இந்நூல் அனைவரும் படித்து குறிப்பாக இளைஞர் சமுதாயம் உணர்ந்துஉள்வாங்கி திராவிடர் இயக்கம் பற்றி திரிபு வாதம் செய்பவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த படைக்கலனாக பயன்படுத்த வேண்டிய வரலாற்று ஆவணம்.

- பூவை புலிகேசி, வழக்குரைஞர்

தடாகம் வெளியீடு

தொகுப்பாசிரியர்: கா.ரகுபதி, 

விலை: ரூ.160

No comments:

Post a Comment