இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல்லையா?


* இது நூல் ஆய்வுரையல்ல! அறிமுகவு ரையும் அல்ல! எனது அனுபவ உரை!

*  ஒன்றிய அரசுப் பணியில், அதுவும் ஆல் இண்டியா சர்வீஸ் பதவிகளில் சேர்ந்த என்னைப் போன்றோர்க்கு பணியை கையில் கொடுத்ததால், இந்தி மொழியை நமக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பணியில் இருக்கும் வரை இந்தியோடுதான் வாழ்ந்து தீர வேண்டும்! இது ஒன்றிய அரசின் கட்டாய இந்தி மொழித் திருமணத் திட்டம்!

*  ஒன்றிய பொதுப் பணித்துறையில் 1977ஆம் ஆண்டு, இளநிலை பொறியாளராக டில்லியில் பணியில் சேர்ந்தேன். தலை நகரம் அல்லவா? எங்கு திரும்பினாலும் இந்தி! நம் முன்னுக்கும் பின்னுக்கும் முந்தி வந்து நிக்குது இந்தி! அந்த கால வேளையில் நமது தமிழகமெங்கும் - எஸ்.டி,  ஆர்.டி. பர்மன்களும், கிஷோர், லதா பாடல்களும் கொடிகட்டி பறந்த நேரம்.. அதனால் கொஞ்சம்... கொஞ்சம்.. இந்தி மாலும் ஹை!

*  டில்லியில் இந்தி கட்டாயம் என்பதை அரசும் உணர்த்தியது, அன்றாடமும் உணர்த்தியது. இந்தி தெரியாத அந்நிய மொழியினருக்கு உதவ - Central Hindi Directorate, அஞ்சல் மூலம் தமிழ் வழியில் இந்தி கற்பிக்கும் திட்டம் இருந்தது. அதில் சேர்ந்து ஓராண்டு கற்று, ஓரளவு இந்தியை எழுத, பேசக் கற்றுக் கொண்டேன்!

* இனி தான் அனுபவம் பேசுகிறது :

ஒரு தமிழன் இந்தி கற்றுக் கொள்ளும் போது இரண்டு பெரிய சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது! அவைகள் இரண்டுமே தமிழில் இல்லாததும் யாரும் அதுவரை நமக்கு சொல்லாததும்!

* முதலாவது சிக்கல் :

தமிழில் நமக்கு உயிரெழுத்துக்கள், க, ச, ட, த, ப போன்றவைகள் ஒவ்வொன்றும்  ஒரே ஒரு எழுத்தாகவும் ஒரே ஒரு ஒலியாக வும் உள்ளன. ஆனால் இந்தியிலோ அவைகள் நான்கு க, நான்கு ச, நான்கு ட, நான்கு த, நான்கு ப என நான்கு எழுத்துக் களாகவும் நான்கு ஒலிகளை கொண்டதாக வும் உள்ளன! இந்த காரணத்தால், தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் உச்சரிப்பில் பெரும் சிரமம் அடைகின்றனர்!

ஏதோ ..அந்த இந்திவாலாக்களிடையே  வாழ வேண்டிய சூழல் கிடைத்ததால்,  இந்த உச்சரிப்பை கற்று,  நச்சரிப்பிலிருந்து தப்பித் தேன்!

*  இரண்டாவது சிக்கல் :

அந்த சிக்கலைப்பற்றி விளக்குவதே இந்த உரையின் நோக்கம்! தமிழில் நாம் உயிருள்ள பொருட்களை மட்டுமே ஆண் பால் - பெண்பால் என பிரிப்போம். உயிரற்ற எல்லா பொருட்களையும் அஃறிணை என்போம்! அதற்கு எந்த பால் வேறுபாடும் கிடையாது! 

*  இந்தி மொழியிலோ எல்லா உயிரற்ற பொருட்களுக்கும் பால் பிரிவினை உண்டு. அதை தெரிந்து கொண்டு தான் நாம் பேசவோ எழுதவோ முடியும்! அப்படி அதை தவறாக பயன்படுத்தினாலே அதை 'மதராஸியின் இந்தி ' என கண்டு கொள் வார்கள். இவைகளை உதாரணத்தோடு இங்கு விளக்குகிறேன்!

* தமிழில் நாம் இவ்வாறு பேசுகிறோம் / எழுதுகிறோம் :

1) நீளமான ரயில் வண்டி.

2) பெரிய வீடு.

3) நல்ல ரொட்டி.

இவைகளில் - ரயில், வீடு, ரொட்டி போன்ற உயிரற்றவைகளுக்குள் எந்த வேறுபாட்டையும் நாம் தரவில்லை.

* இவைகளையே இந்தியில் பேசுவது / எழுதுவது எவ்வாறு என்றால் :

1) லம்பி (நீளமான) ரயில் காடி.

இதில் ரயில் காடி பெண்பால் (பெ) என்பதால் ' லம்பி ' என எழுத வேண்டும். ஆண்பால் (ஆ) சொல் என்றால் ' லம்பா ' என எழுத வேண்டும். 

2) படா (பெரிய) கர். கர் அதாவது வீடு ஆண்பால். ஆகவே ' படா ' . பெண்பால் சொல்லுக்கு ' படி ' ..

3) அச்சி (நல்ல) ரோட்டி. ரோட்டி பெண்பால். எனவே ' அச்சி '. ஆண்பால் சொல்லுக்கு ' அச்சா '..

என்ன தலை சுற்றுகிறதா? அப்படித்தான் இருந்தது எனக்கும்!

*  கால ஓட்டத்தில், பத்தாண்டுகளுக்குப் பின் அரசு அலுவலர்கள் கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நடைமுறை படுத்திய போது - 1989ம் ஆண்டு இந்தியை மீண்டும் முதலிலிருந்து கற்றுக் கொள்ள புது டில்லியின் ' ரயில் பவன் இந்தி வகுப்பில் ' சேர்ந்தேன். அதில் சேர்ந்ததிற்கு காரணமே இந்த இரண்டாவது சிக்கலின் அடிப்ப டையே அறிந்து கொள்ளத்தான்!

*  இந்தி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை திருமதி. சுனிதா இந்தி மொழியை தாய் மொழியாகவும் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்ற அனுபவசாலி. அவரிடம் இந்த ஆண்பால் - பெண்பால் பிரித்தது எப்படி? எவ்வாறு உயிரற்றவைகளை பிரித் தீர்கள்? சிறிது - பெரிது என்ற அடிப்ப டையிலா? கடினம் - இலகு என்ற அடிப் படையிலா? புதியன - பழையன என்ற அடிப்படையிலா? உருவத்தினாலா அல் லது பருவத்தினாலா? ஒலி மாற்றத்தின் அடிப்படையிலா? வேறு மொழி சொற் களின் கலப்பினாலா? அழகு - அழகற்றது என்ற அடிப்படையா? என்று கேள்விகளால் துளைத்துப் பார்த்தேன்!

*  இந்தியை தாய் மொழியாக கொண்ட அந்த ஆசிரியையிடம் எந்த பதிலும் இல்லை! இந்தி மொழியில் அப்படித்தான் உள்ளது - என ஒரே ஒரு பதில்தான்.. எங் களுக்கு இது பற்றி சொல்லியே தரவில்லை. இந்த சொற்களை சிறு வயதிலிருந்தே இப் படித்தான் பேசி வருகிறோம்.. ஏன், இப்படி என யோசித்ததும் இல்லை, என்றார் அழாத குறையாக! 

*  இதை இந்தி இலக்கணத்தின் பிழை என்று சொல்லலாமா? என்று கூட கேட்டுப் பார்த்தேன்! இதை பிழையென்றோ, குறை யென்றோ வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த குறையோடுதான் நீங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சமரசம் செய் தார்கள்! அதன் பின்பு வேறு வழியில்லாமல் நானும் வகுப்புகளில் தொந்தரவு செய்யா மல் கலந்து கொண்டு, படித்து முடித்தேன்!

*  இவற்றை மேலும் விரிவாக அறிய, இந்தியின் விநோதமான வாக்கிய அமைப்பு களை காரணங்களுடனும்,  உதாரணங்க ளுடன் தந்துள்ளேன் :

1)  குடி நீர் - இந்தியில் ' பாணி ' (ஆண்பால்). இந்த நீர் கரை புரண்டு ஓடுவதை நாம் ஆறு என்கிறோம் - இந்தியில் நதி (பெண்பால்). 

ஆகவே - 

அச்சா(நல்ல) பாணி (ஆ) | 

அச்சி (நல்ல) நதி (பெ) |

ஏன் இரண்டையும் அச்சா என்றே சொன்னாலென்ன? பதிலில்லை!

2)  காகிதம் - இந்தியில் ' காகஜ் ' (ஆ). நிறைய காகிதங்கள் கொண்டு உருவான புத்தகம் - இந்தியில் ' கிதாப் ' (பெ). 

ஆகவே -

படா (பெரிய) காகஜ்(ஆ) | 

படி (பெரிய) கிதாப் (பெ) |

ஏன் இரண்டுமே படா இல்லை?

3)  வீடு - இந்தியில் ' கர் ' (ஆ). அதுவே பெரிய கட்டிடம் என்றால் - இந்தியில் ' இமாரத் ' (பெ).

 ஆகவே -

புரானா (பழைய) கர் (ஆ) | 

புரானி (பழைய) இமாரத் (பெ) |

ஏன் இரண்டுமே புரானியாக இருக்க கூடாது?

4)  துணி - இந்தியில் ' கப்படா ' (ஆ). அந்த துணியில் தைத்த சட்டை - இந்தியில் ' கமீஜ் ' (பெ). 

ஆகவே -

நயா (புதிய) கப்படா (ஆ) | 

நயி (புதிய) கமீஜ் (பெ) |

ஏன் இரண்டுமே நயா என இருக்க கூடாது?

5)  கப்பல் - இந்தியில் ' ஜகாஜ் ' (ஆ). ஆனால் ரயில் வண்டியோ - இந்தியில் ' ரேல் காடி ' (பெ).  

ஆகவே -

லம்பா (நீளமான) ஜகாஜ் (ஆ) | லம்பி (நீளமான) ரேல் காடி (பெ) |

ஏன் லம்பி என்றே இரண்டையும் அழைக்க கூடாது?

6)  குருமா - இந்தியிலும் குருமா (ஆ) . அதற்கு தேவையானது ரொட்டி - இந்தியில் ' ரோட்டி ' (பெ). 

ஆகவே - 

அச்சா (நல்ல) குருமா (ஆ) | 

அச்சி (நல்ல) ரோட்டி (பெ) |

ஏன் இரண்டையும் அச்சாவென்றோ - அச்சியென்றோ அழைக்க கூடாது?

7)  மேகம் - இந்தியில் ' மேக் ' (ஆ) .மேகங்கள் மோதும் போது மின்னல் - இந்தியில் 'பிஜ்லி '(பெ). 

ஆகவே -

சோட்டா ( சிறிய) மேக் (ஆ) | சோட்டி (சிறிய) பிஜ்லி (பெ) |

ஏன் சோட்டா - சோட்டி?

8)  மலை - இந்தியில் ' பர்வத் ' (ஆ) . பல மலைகளை கொண்டது உலகம் - இந்தியில் ' துனியா ' (பெ). 

ஆகவே -

படா (பெரிய) பர்வத் (ஆ) | 

படி (பெரிய) துனியா (பெ) |

ஏன் இரண்டையும் ஒன்றாக கருதவில்லை?

9)  கோதுமை - இந்தியில் ' கேகூம் ' (ஆ). கோதுமையை உடைத்து தயாரித்த ரவை - இந்தியில் ' சூஜி' (பெ). 

ஆகவே - 

படா (பெரிய) கேகூம் (ஆ) | 

படி (பெரிய) சூஜி (பெ) | 

ஏன் ஆராயமல் வித்தியாசப் படுத்தினார்கள்?

10)  பாவாடை - இந்தியில் ' காக்ரா ' (ஆ). அதைவிட பெரிய துணி வேட்டி - இந்தியில் ' தோத்தி ' (பெ). 

ஆகவே - 

சோட்டா (சிறிய) காக்ரா (ஆ) | சோட்டி (சிறிய) தோத்தி (பெ) |

ஏன் அறிவுக்கு பொருத்தமில்லாமல்?

*  இவ்வாறு ஒவ்வொரு அஃறிணை பொருட்களையும் ஆண்பால் - பெண்பால் என எவ்வித அடிப்படையும் இல்லாமல் வகைப்படுத்தி, அறிவுக்கு விளக்கம் சொல்ல ஆதாரமில்லாமல், அதை சீர்திருத்த வேண்டுமென்ற சிந்தனையே இல்லாமல் வழக்கில் இருந்து வருகிறது - ஹமாரா இந்தி!

*  ஆகவேதான் தமிழை தாய் மொழியாக கொண்டு, சிறப்பான இலக்கணத்தை அடிப்படையாக கொண்ட தமிழை கற்றவனுக்கு - இந்தியின் இந்த வாக்கிய அமைப்பை - இலக்கண பிழை என்றே சொல்ல வைக்கிறது!

*  இந்த அடிப்படையிலும், கட்டாய இந்தி மொழித் திணிப்பை -  தமிழை தாய் மொழியாக கொண்டவன், இந்தியை கற்ற பின்னும் எதிர்ப்பானல்லவா?

இது அனுபவம் கற்று தந்த பாடம்!

(ஆதாரம் - ஹிந்தி தமிழ் அகராதி - தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா - முதல் பதிப்பு 1978 - சென்னை) 

- பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை. 27.07.2022.

No comments:

Post a Comment