தமிழர் தலைவர் ஆசிரியர் நினைத்திருந்தால் மாநில அமைச்சராக மட்டுமல்ல; - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் நினைத்திருந்தால் மாநில அமைச்சராக மட்டுமல்ல;

ஒன்றிய அமைச்சராகக்கூட ஆகியிருக்க முடியும்; அமைச்சர் பதவியெல்லாம் அவருக்குப் பெரிதல்ல!

பதவி என்ற நினைப்பே இல்லாதவர்கள்தான் கருஞ்சட்டைக்காரர்கள்

பெரியாரின் உண்மையான வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே!

குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உரை

குருவரெட்டியூர், ஜூலை 23  பதவி என்ற நினைப்பே இல்லாதவர்கள்தான் கருஞ்சட்டைக்காரர்கள். குறிப்பாக, ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் நினைத்திருந்தால், தமிழ்நாடு அமைச்சராக அல்ல; ஒன்றிய அமைச்சராகக் கூட ஆகியிருக்க முடியும்; ஆனால், அமைச்சர் பதவி யெல்லாம் அவருக்குப் பெரிதல்ல என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்கள்.

குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்

கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்றைக்குத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் பேரியக்கமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் - அதை ஒரு கை பார்ப்போம் என்ற உறுதியோடு நாம் இருக்கின்றோம் - நம் முன் வருவதற்கே அவர்கள் பயந்துகொண்டு, போகின்ற இடங்களில் எல்லாம் தமிழ் மொழியைப்பற்றி பேசுவது, பாரதியாரைப்பற்றி பேசுவது, வள்ளுவரைப்பற்றி பேசு வது - அது வெளிநாடாக இருந்தாலும் சரி, உள்நாடாக இருந்தாலும் சரி, அவர்களுடைய பசப்புத் தன்மைகள் அவர்களின் பேச்சின்மூலம் வெளிப்படுகின்றது - அவர்களின் பசப்புத்தன்மைக்குத் தமிழர்களாகிய நாம் ஏமாந்துவிடமாட்டோம் என்பதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

எங்கு வேண்டுமானாலும் நீ ஆட்சி அமை - எந்த அரசாங்கத்தை வேண்டுமானாலும் நீ கவிழ்த்துவிடலாம் - ஆனால்,  தமிழ்நாட்டின்மீது உன்னால் கை வைக்க முடியுமா? என்றால், அப்படி வைக்கின்ற கை வெட்டப்படும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

காவிக் கொள்கைகளை எதிர்க்கக்கூடிய மாவீரன்

இன்றைக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றார். ஆனால்,  அதற்காக மோடிக்கு ‘சலாம்‘ போடுகிறவராக அவர் இல்லை. மாறாக, மோடியினுடைய இந்துத்துவா காவிக் கொள்கைகளை எதிர்க்கக்கூடிய மாவீரனாக இருக்கின்றார்.

எனக்குக் கொஞ்சம் வருத்தம் என்னவென்று சொன் னால், திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் களும், குறிப்பாக மு.க.ஸ்டாலின் அவர்களும், பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கின்ற வேகத்திற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாம் கொஞ்சம் பின்தங்கி இருக் கின்றோமே என்ற கவலைதான் எனக்கு.

நாள்தோறும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்படு கின்றன; பொய்ச் செய்திகள் பேசப்படுகின்றன - வானொலியிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகை களிலும்.

அவற்றை எதிர்த்து நிற்கக்கூடிய அளவிற்கு, எதிர்வாதம் செய்யக்கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது, காங்கிரசிடம் இருக்கிறது - ஆனால், அதை செய்கின் றோமா என்றால், இல்லை.

செய்தால், பெயரளவிற்குச் செய்கின்றோமே ஒழிய, அதனை உறுதியாக நாம் செய்வதில்லை.

தமிழர் தலைவரைப் பார்க்கும்பொழுது வியப்பாக இருக்கிறது!

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், அதில் உறுதியாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம். அதை விட, நாள்தோறும் அவர்களுக்குப் பதில் - ‘துக்ளக்‘ பத்திரிகையில் குருமூர்த்தி என்ற ஒருவர் இருக்கின்றார் - அவர் எழுதுகின்ற செய்திகளுக்குப் பதில் வேண்டும் என்று சொன்னால், நாம் ‘விடுதலை’யைப் பார்த்தாக வேண்டும்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், எப்படி இத்தனைக் காரியங்களை சாதிக்கின்றார் என்று எனக்குப் புரியவில்லை, அதுவும் 90 வயதில்.

45 நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கின்றார் மக்களுக்காக -

‘விடுதலை’ நாளிதழை நடத்துகின்றார்; நாள்தோறும் எழுதியும் கொண்டிருக்கின்றார். சுற்றுப்பயணங்களையும் மேற்கொள்கின்றார்.

இன்றைக்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலை போடுவதற்கு, அவரால் மேலே ஏற முடியுமா? என்கிற சந்தேகம் எனக்கு. ஆனால், இளைஞரைப் போன்று, இந்த 90 வயது இளைஞர் படியில் வேக வேகமாக ஏறினார்;  அவருக்குப் பின்னால் நான் படியில் ஏறினேன்; எனக்குப் பின்னால்தான் நல்லுசாமி  அவர்கள்  வந்தார். 

எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால், கொண்ட கொள்கையிலும், ஏற்றுக்கொண்ட நியாயங் களிலும் ஒருவர் உறுதியாக இருக்கும்பொழுது, அவருக்கு வயது ஒரு பொருட்டல்ல, எதை வேண்டு மானாலும் செய்யலாம்.

அரசியல்பற்றி மட்டுமா - ஆசிரியர் அவர்கள் எழுது கின்றார் - சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்றும் எழுதுகின்றார். 

தமிழர் தலைவர் எழுதாத தலைப்புகளே கிடையாது!

மனிதன் எப்படி வாழவேண்டும்? - உடல் நலத்தோடு வாழுவது எப்படி? என்று ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரைகளில் எழுதுகிறார்.

அவர் தொடாத தலைப்புகளோ, அவர் தொடாத சப்ஜெட்டுகளோ எதுவும் கிடையாது.

இவ்வளவு பெரிய அறிவு அவரிடம் இருக்கிறது என்று சொன்னால், அப்பொழுதுதான் எனக்குப் பட்டது, அவர் பட்டப் படிப்பு படிக்கும்பொழுதே, அதில் முதன்மை மாணவராக இருந்திருக்கின்றார் என்பதோடு மட்டுமல்ல, எல்லா பாடங்களிலும் அவர்தான் முதன் மையாக இருந்திருக்கின்றார்.

அந்தப் பட்டறிவை சுயநலத்திற்குப் பயன் படுத்த நினைத்திருந்தால், அவர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். படிப்பை படித்து உயரதிகாரியாக ஆகியிருக்கலாம்; எவ்வளவோ பெரிய இடத்திற்குச் சென்றிருக்கலாம்.

ஆனால், ஏற்றுக்கொண்ட கொள்கை என்பது கடினமான கொள்கையாகும். வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கின்ற மக்களிடம் சென்று சில கருத்துகளைச் சொல்லும்பொழுது, அதை சாதா ரணமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களும் எங்களுக்கு ஓட்டு வங்கி அரசியல் வேண்டாம் - இந்த சமுதாயத்தில், மக்களிடையே இருக்கின்ற மேலானவன் - கீழானவன்; உயர்ந்த ஜாதி - கீழ்ஜாதி என்கிற பாகுபாட்டைப் போக்கு வதற்காக நாங்கள் பாடுபடுகின்ற நேரத்தில், சில உண்மைக் கருத்துகளை சொல்லவேண்டி வரும் - அதை மக்கள் அப்போது ஏற்றுக் கொள்ளாவிட் டாலும், பிறகு ஏற்றுக் கொள்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால், அரசியலில் இருந்தால், மக்களுக்குப் பாயாசத்தை ஊற்றிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, கசப்பான உண்மை களைச் சொன்னால், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்கள் அதைத் தான் சொல்லியிருக்கிறார். இன்றும், நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் நான் என்ன பார்க்கின்றேன் என்றால், வந்திருக்கின்றவர்கள் சிலர் விபூதி பூசிக் கொண்டிருக் கின்றனர். அதை நான் தவறு என்று சொல்ல வில்லை. உங்களுக்குப் பிடித்திருக்கிறது, நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

எனக்குப் பிடிக்க வில்லை, அதனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஏற்றுக்கொள்ள வில்லை என்கின்ற காரணத் தினாலே, நீங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வதில், எனக்கு உடன் பாடு இல்லை.

பார்க்கின்றபொழுதெல்லாம் புத்தகங்களைத் தருவார்!

இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அவருடைய உரையில் சொல்லியிருக்கிறார். அவருடைய புத்தகங்களைப் படிக்கத் தூண்டியவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.

பார்க்கும்பொழுதெல்லாம் புத்தகங்களைத் தருவார், இலவசமாக. பெரியார் உயிரோடு இருந்திருந்தால், அதை அனுமதிக்கமாட்டார்.

ஏன் இலவசமாக தருகிறீர்கள்? என்று சொல்லியிருப்பார்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், வருகின்றவர்களுக்கு எல்லாம் புத்தகங்களைத் தருகின்றார். அதனுடைய நோக்கம் என்னவென்றால், இன்றைக்கு மாணவர்கள்கூட அந்த புத்தகங்களைப் படிக்க ஆரம் பித்துவிட்டார்கள்.

ஒருமுறை நான் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபொழுது, என் அருகே ஒரு கல்லூரியில் படிக்கின்ற இளம்பெண் அமர்ந்திருந்தார். அவர் ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக் கொண் டிருந்தார். பிறகுதான் தெரிந்தது, அது பெரியாரைப்பற்றிய புத்தகம்.

இன்றைக்கு நீ அறிவுள்ள மனிதன் என்றால், பெரியாரைப்பற்றி படி! அம்பேத்கரைப்பற்றி படி!

பெரியாருடைய பேச்சைக் கேட்பவர்களுக்கு, பெரி யாருடைய எழுத்தைப் படிப்பவர்களுக்கு சொர்க்கம் கிடையாது என்றெல்லாம் சொன்ன காலம் மாறிப்போய்,. இன்றைக்கு நீ அறிவுள்ள மனிதன் என்றால், பெரியா ரைப்பற்றி படி! அம்பேத்கரைப்பற்றி படி! என்று சொல்லக்கூடிய நிலைமை வந்திருக்கிறது என்றால், பெரியாருக்குப் பிறகு அதைத் தொடர்ந்து சிறப்பாக செய்து கொண்டிருப்பவர் ஆசிரியர் அவர்கள்தான் என்று, என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இன்றைக்குப் பெரியாரைப்பற்றியும், இந்த இயக்கக் கொள்கைகளைப்பற்றியும் பிரச்சாரம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக இருந்து, அதனை செய்து வருகிறார் என்பது மட்டுமல்ல,

ஒரு பகுத்தறிவுவாதியாக, சம தர்மவாதியாக, ஒரு சுயமரியாதைக்காரராக, தமிழ்நாடு மட்டுமல்ல, டில்லி முதல் இந்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஏற்பாடு களை செய்தவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தான்.

அதற்காக நாம் அவரைப் பாராட்டவேண்டும். அவர் என்ன பதவி ஏதாவது கேட்கின்றாரா?

பதவி என்ற நினைப்பே இல்லாதவர்கள்தான் இந்தக் கருஞ்சட்டைக்காரர்கள்.

தமிழர் தலைவர் அவர்கள் மாநில அமைச்சராக அல்ல - ஒன்றிய அமைச்சராகக்கூட ஆகியிருக்கலாம்!

குறிப்பாக, ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் நினைத்திருந்தால், தமிழ்நாடு அமைச்சராக ஆகியிருக்க முடியும். அண்ணா காலத்தில்தான், கலைஞர் காலத்தில் தான் என்று மட்டும் இல்லை. காமராசர் காலத்திலேயே இவர் விரும்பியிருந்தால், அமைச்சராகி இருக்க முடியும்.

அதுமட்டுமல்ல, அவர் நினைத்திருந்தால், வி.பி.சிங் அவர்களோடு கொண்டிருந்த கொள்கை உறவின் காரணமாக, ஒன்றிய அமைச்சராகவும் ஆகியிருக்க முடியும். ஆனால், அமைச்சர் பதவியெல்லாம் அவ ருக்குப் பெரிதல்ல.

தந்தை பெரியார் அவர்கள் இருக்கும்பொழுது, இரண்டு முறை அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று, வெள்ளைக்கார அரசும், காங்கிரஸ்காரர்களும், ஏன் இராஜாஜி உள்பட சொல்லியபொழுதும்கூட, அதை ஏற்க முடியாது என்று மறுத்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர்தான்  பெரியாருடைய உண்மையான வாரிசு

அந்த வழியில் வருகின்ற இவர்கள்தான் - இந்தக் கருஞ்சட்டைக்காரர்கள்தான் - இந்தத் தமிழர் தலைவர் ஆசிரியர்தான் பெரியாருடைய உண்மையான வாரிசுகளே தவிர, மற்றவர் யாரும் கிடையாது.

எனக்கொன்றும் அவரைப் புகழ்ந்து எதுவும் ஆகப் போவதில்லை; என்னுடைய அரசியல் வாழ்வில் கடைசி கட்டத்தில் நான் இருக்கின்றேன். எனக்கு 73 வயதாகி விட்டது; இன்றைக்கு என்னுடைய மனசாட்சிக்கு நான் திருப்தியாக நடந்துகொள்கின்றேனா என்று பார்த்தால், கொஞ்சம் சந்தேகம்தான்.

ஏனென்றால், வாக்கு வங்கி அரசியல் நடத்தும் பொழுது, பல பொய்களைச் சொல்லவேண்டி இருக் கின்றது மக்களிடம். மக்களை ஏமாற்றுவதற்காக.

(தொடரும்)


No comments:

Post a Comment