“அறியா மையெனும் இருட்டினிற் கிடந்தோர்க்
கறிவொளி பாய்ச்சி விழிப்புறச் செய்யவும்;
ஜாதியால் இழிவு செயப்பட் டோரெலாம்
வீதியில் நெஞ்சை நிமிர்த்தி நடக்கவும்;
மதமெனுஞ் சேற்றினில் மூழ்கிக் கிடந்தோர்
மானுடப் பற்றினைப் பற்றிடச் செய்யவும்;
இருபது நூறாண் டுகளாய்த் திராவிட
இனமேல் பூட்டிய விலங்குகள் நொறுக்கவும்;
உரிமைப் போர்க்குரல் ஒலிக்கவும் வெல்லவும்
அருமைத் தலைவர் பெரியார் அளித்த
“விடுதலை’’ என்னுமோர் பே(£)ரா யுதத்தின்
தொடர்பணி முடுக்கும் ஆசிரி யர்எனும்
அரும்பொறுப் பேற்றுத் திறம்பட நடத்தும்
“பெருமை எமக்கிலை; பெரியார்க் கே’’யெனப்
பீடுற முழக்கிடும் நீடறத் தொண்டர்
ஒருபதி னொன்றில் உழைத்திட வந்தவர்;
எழுபத் தெட்டாண் டுகளாய் இயக்கம்
தனைத்தம் மூச்சாய்க் கொண்டே உயிர்ப்பவர்;
ஆரிய நஞ்சுகள் முறித்திடும் மருந்தென
அறிக்கை பொழிவுகள் நாளும் அளிப்பவர்;
பெரியா ரென்னும் பே(£)ரா யுதத்தால்
நரியார் சூழ்ச்சிகள் யாவுமே அழிப்பவர்;
தகுதியான் பெரியார் கொள்கை உலகெலாம்
பரவிடச் செய்திடும் பாங்கினில் உயர்ந்தே
திராவிடர் கழகத் தலைவராய்த் திகழ்ந்து
வருகிற வீர மணிக்கோர் ஊட்டமாய்
அறுபத் தாண்டுகள் தொண்டதன் ஈட்டமாய்
அறுபதி னாயிரம் உறுப்பினர் சந்தா
தந்திடும் அரும்பெறற் றொண்டே
தந்தை பெரியார்க் காற்றுவ தாமே!
- கவிஞர் பெரு.இளங்கோ
No comments:
Post a Comment