குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணின் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.க. மகளிர் அணித் தலைவி - "பார்ப்பனர் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது செல்லாது - தனக்குத்தானே திருமணம் செய்து கொண்டது சட்டவிரோதம், நாங்கள் அதைக் கடுமையாக எதிர்ப்போம்" என்று கூறியுள்ளார்
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.ஏ. பட்டதாரி கஷ்மா பிந்து (24). இவர் தற்போது வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிந்துவிற்கு நீண்ட காலமாக திருமணம் நடைபெறவில்லை. வரும் வரன்கள் அனைத்தும் அதிக வரதட்சணை கேட்பதால் அவரது திருமணம் தடைபட்டுக் கொண்டே போனது. வீட்டிலும் திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரிக்கத்துவங்க, பிந்து தன்னைத் தானே விரும்பி திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தார்.
முதலில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 11ஆம் தேதி, பிந்து கோத்ரி கோயிலில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். வழக்கமான திருமண விழாவில் உள்ள அனைத்து சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி திருமணம் நடைபெற்றது.
இந்த புதுவித திருமணம் குறித்து கஷ்மா பிந்து கூறுகையில், "எனக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் வருபவர்கள் எல்லாம் அதிக வரதட்சணை கேட்கின்றனர். இதனால் எனக்குத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் என்னை நேசிக்கிறேன், அதனால் நான் என்னையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்.
இதற்கு முன்னர் இந்தியாவில் வேறு யாரேனும் தங்களைத் தாங்களே திருமணம் செய்துகொண்டார்களா என இணையத்தில் தேடிப் பார்த்தேன். அப்படி யாரும் செய்யவில்லை எனத் தெரிய வந்தது. எனவே, நான் நாட்டில் சுய அன்புக்கு முன் மாதிரியாக இருக்கப் போகிறேன். ஒருவர் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்வார்கள். அந்தவகையில், நான் என்னை நேசிக்கிறேன், அதனால் நான் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் சுய அன்பை வெளிப்படுத்துவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்பு கிறேன். இந்த திருமணத்திற்கு என் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்" என்றார்.
பிந்துவின் திருமண நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், வதோதரா வின் மேனாள் துணை மேயர் பிஜேபி பிரமுகர் சுனிதா இந்தப் பெண்ணின் முடிவிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இளம் பெண்ணின் திருமணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஒரே ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கக்கூடாது. ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட யோகம் இருக்கும்போது, இளைஞர்களும், பெண்களும் பொதுவாக கும்பத்தை முதலில் திருமணம் செய்து, 'பிராமணர்கள்' முன்பு தீயை வலம் வந்து செய்யும் திருமணம் தான் திருமணம். ஆனால் இந்த நாகரிக நகரத் தில், இந்த வகையான சமூக திருமணங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது. கோயிலில் நடந்த கமிட்டி தாரர்களின் ஆலோசனைப் படி இளம்பெண்ணின் திருமணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்தப் பெண்மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க மதத் தலைவர்களோடு ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது வினோதமானதுதான். இப்பொழுது ஓரின சேர்க்கை என்பதற்தெல்லாம்கூட அனுமதி கிடைத்து விட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பார்க்க வந்தவர்கள் எல்லாம் கடுமையான வரதட்சணைத் தொகை கேட்டதுபற்றி வதோதராவின் மேனாள் துணை மேயரான பி.ஜே.பி. பிரமுகரான அந்தப் பெண் ஏன் எதுவும் பேசவில்லை? கோயிலில் பார்ப்பனப் புரோகிதர் முன் தீயை வலம் வந்தால்தான் திருமணம் செல்லுபடியாகும் என்று மட்டும் துள்ளிக் குதிப்பது ஏன்? இந்த வகையில் குஜராத்தையும், தமிழ்நாட்டையும் பொருத்திப் பாருங்கள். காரணம் என்ன என்பது விளங்கும்.
No comments:
Post a Comment