செலவுகள் பயனுறு செலவுகளாக - அமைய வேண்டும்; அறிவுத் தேடலுக்குரிய நூல்களை வாங்குகிறோம் - அது பயனுறு அறிவு முதலீடும்கூட - வெறும் செலவு அல்ல.
மருந்துகள் தேவைப்படும் மருத்துவப் பரிசோதனை, நல்ல நடை பயிற்சிக்குரிய காலணி தேடுதல் முதல் எல்லாம் ஆக்க பூர்வச் செலவுகளே - உடல் நலம் காக்க, உள்ள வளம் பெருக்கும். அத்துடன் ஊர்வளம், ஊர்நலம், சமூகப் பணி சிறக்க உதவுதல் இவைகள் எல்லாம் ஆக்கப் பூர்வச் செலவுகளே - வீண் செலவுகள் அல்ல!
சிக்கனத்திற்குப் பெயர்போன தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஈரோட்டில் 'விடுதலை' ஆசிரியராக இருந்தபோது நல்ல புத்தகங்கள் பற்றி அண்ணா மூலம் அறிந்தால் ஒன்றுக்கு இரண்டு வாங்கும்படி கூறுவது உண்டாம்; அண்ணாவிடம் "ஒன்று நீங்கள் படித்து எழுதுவதற்கு; மற்றொன்று 'குடிஅரசு' நூலகத்தில் இருந்தால் எப்போதும் அது நமக்குப் பயன்படக் கூடும்" என்பாராம் (ஈரோடு நண்பர் ப.சண்முகவேலாயுதம் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்).
சில செலவு உள்ள நண்பர்கள் உறுபசி, மாளாத வறுமையைத் தகர்க்கவே கூட நமக்கு தம்மால் முடிந்த உதவி என்பதைச் செய்கையில் அது ஆக்கபூர்வ, கருணை வழியிலேயான செலவினத்தில்தான் சேர்க்கப்படல் வேண்டும்.
'ஈத்துவக்கும் இன்பம்' என்பது ஒரு வகையான தனியான இன்பம், அச்செலவின் மூலம் நமக்குக் கிட்டுகிறது என்றால் அது மகிழத்தக்கதுதானே!
'செலவு மட்டாகச் செய்து
செந்தமிழ் போற்றி வாழ்க'
என்ற வரிகள் மூலம் புரட்சிக் கவிஞர் என்ன சொல்லுகிறார் என்றால், பொதுத் தொண்டுக்கு, அதுவும் தமிழின எழுச்சி போன்ற நற்பணிக்கு உதவுங்கள் என்றுதான் சொல்ல வருகிறார்!
இதில் மட்டுமல்ல - 'குடும்ப விளக்கு' என்ற அரிய தொடர் நூலில் இல்லறம் பேணி நடத்தும் வாழ்விணையர்கள் பேசும்போது, 'தொழில் கணக்குப் பார்த்து, குடும்பச் செலவுக்குப் பணம் ஒதுக்கிடும்' பட்ஜெட் போட்டு செலவழித்து, தணிக்கை போல் ஆய்வு செய்த உரையாடல் பகுதியில் தலைவனும், தலைவியும் பேசும் காட்சியில் "ஊருக்கு - பொதுத் தொண்டுக்கு என்ன செய்தீர்கள்?" என்று தலைவி வினவ, தலைவன் "அதற்கென தொகையை ஒதுக்கி வைத்து விட்டேன்" என்று கூறிடுவது மிகவும் வியந்து போற்றக் கூடிய அறிவுறுத்தும் பாடப் பகுதி அல்லவா?
தாம் சேர்த்த பொருள், தனக்கு மட்டும் பயன்படாது, தான் சார்ந்த குடும்பத்திற்கு மட்டும் பயன் தருவதைத் தாண்டி ஒட்டு மொத்த சமூகத்திற்கு ஓரளவாவது பயன் தந்தால் அந்த வாழ்க்கையின் பொருள் அதிசயமானதாக மட்டுமல்லாது. அற்புதமான எடுத்துக்காட்டாகவும் அமையும் என்பது உறுதி.
பலரும் குறுக்கு வழியில் பொருள் சேர்த்து, அதை தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் - பொதுவுக்கும்கூட அது பயன்படாத வகையில் "வைக்கோல் போரில் அமர்ந்த நாய் போல" என்ற உவமைக்கேற்ப வாழ்வு வாழ்ந்து மடிந்தால், அச்செல்வம் வந்த வழியைவிட, வேகமாக சீரழிவினைத் தருவதோடு, நாளும் கரைந்து போகுமே தவிர ஆக்கங்கள் எவற்றையும் தராது. எனவே பொருளைச் சேகரிப்பதைவிட அதைப் பயனுறு முறையில் செலவழித்து உண்மை இன்பத்தையே பெற முயற்சியுங்கள்.
(முடிந்தது)
No comments:
Post a Comment