மும்பை, ஜூன் 30 சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டின் வீட்டில் குஜராத் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர். அவருடன் மேனாள் காவல் துறை அதிகாரி சிறீகுமாரும் கைது செய்யப் பட்டார்.
தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஒன்றிய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கண்டனம் தெரிவித்ததுடன் அவரை விடுதலை செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று (29.6.2022) காலை மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள தீஸ்தாவின் வீட்டில் குஜராத் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடத்தியதாக மும்பை சான்தா குரூஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாலாசாகேப் தாம்பே தெரிவித்தார். இந்த சோதனையின்போது தீஸ்தாவின் வீட்டில் இருந்த ஆவணங்கள் ஏதும் கைப் பற்றப்பட்டதா என்பது குறித்து குஜராத் காவல்துறை தகவல் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment