சொந்த நாட்டவர்களுக்கு மட்டுமல்ல - வெளிநாட்டவர்களுக்கும் அறிவுரை சொல்லி புதிய பாதை - புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு அறிவூட்டினார் தந்தை பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

சொந்த நாட்டவர்களுக்கு மட்டுமல்ல - வெளிநாட்டவர்களுக்கும் அறிவுரை சொல்லி புதிய பாதை - புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு அறிவூட்டினார் தந்தை பெரியார்!

21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2:  தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, மே 2  சொந்த நாட்டவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டுக்காரர்களுக்கும் அறிவுரை சொல்லி, அவர்களைச் சிந்திக்க வைத்து, மாற்றி, புதிய பாதை யினை, புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு தந்தை பெரியார் அறிவூட்டினார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

21 மொழிகளில் பெரியார் - ஏன்? 

சிறப்புக் கூட்டம்

கடந்த 28.3.2022 அன்று மாலை காணொலிமூலம் ‘‘21 மொழிகளில் பெரியார் - ஏன்?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

30.4.2022 அன்று வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

சிங்கப்பூர் கிளாங் சாலையில் 1935 ஆம் ஆண்டு ஓர் அலுவலகத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டு முறைப்படி செயல்படத் துவங்கியது TRC  அமைப்பு. ‘தமிழ் முரசு’ என்ற பத்திரிகையை வெளியிடத் துவங்கியது. அந்த நாளிதழ் TRC  சங்கத்தின் பிரச்சார பீரங்கியாகவே மாறியது எனலாம். இந்தப் பத்திரிகையின் தலையங்கங்கள் பார்ப்பனிய எதேச்சாதிகாரத்தையும் பார்ப்பனிய இந்துயிசத்தையும் கடுமையாக விமர்சித்தது வாசகர்களை கவர்ந்தது. இதனால் பத்திரிகையின் விற்பனையும் அதிகரித்தது. ஜாதிபாகுபாட்டையும் மத வெறியையும் எதிர்த்தவர்களின் ஆதரவு பெருகியது.’’

தந்தை பெரியார் அவர்கள் 1929 இலும், பிறகு 1953-1954 இலும் இரண்டு முறை மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்றிருக்கிறார்.

முதலில் செல்லும்பொழுது அன்னை நாகம்மையார் பெரியாருடன் சென்றார்; இரண்டாவது முறை செல்லும்பொழுது, அன்னை மணியம்மையார் அவர்கள் சென்றிருந்தார்.

மக்களை எப்படி மாற்றினார்?

மற்றவர்கள் எல்லாம் மலேசியா, சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்வதுபோன்று செல்வார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அங்கே சென்று, அங்குள்ள மக்களை எப்படி மாற்றினார்?

இங்கே இருந்து குடிபெயர்ந்து போனவர்கள், தோட் டப்புறத் தொழிலாளர்களாக அவதிப்பட்டுக் கிடந் தார்கள். ஏதோ தொழில் செய்தார்கள், சம்பாதித்தார்கள். நிறைய கள்ளுக்கடைகள் அங்கே உண்டு.

வரவுக்குட்பட்டு செலவழிக்கத் தெரியாமல், வாங்கிய சம்பளத்தை சேமிக்கத் தெரியாது இருந்த நேரத்தில், 

சம்பாதித்ததைக் 

கண்டபடி செலவழிக்காதீர்கள்

தந்தை பெரியார் அவர்கள் அங்கே சென்று, உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்; சம்பாதித்ததைக் கண்டபடி செலவழிக்காதீர்கள்; குடிப்பழக்கம், போதைப் பழக்கத்தை ஒழியுங்கள் என்றார்.

முதல் முறையாக 1929 ஆம் ஆண்டு சென்றார். அடுத்ததாக ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து செல்கிறார்.

அங்கே எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டு இருந் தன. அங்கே இருந்த மக்களுக்கு அறிவுரை சொல்கிறார்.

அந்த அறிவுரையைக் கேட்டு அந்த மக்கள் பயன்பெற்றனர். இங்கே இருந்து சென்ற மக்கள், மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்புகிறோம் என்று சொன்னபொழுது,

பெரியார் சொன்னார், ‘‘இந்த நாட்டிலே நீங்கள் வாழ்ந்து விட்டீர்கள். இங்கேயே நீங்கள் குடியுரிமை பெறுங்கள்’’ என்றார்.

தோழர் கோ.சாரங்கபாணி போன்றவர்கள் அதற்கான ஒத்துழைப்பை நல்கினார்கள்.

வீடு தவறாமல் சென்று மனு கொடுத்தார்கள். அய்யா நீங்கள் குடிமக்களாகுங்கள், குடிமக்களாகுங்கள் என்று சொன்னார்கள்.

அந்த அறிவுரையைக் கேட்டவர்கள், இன்றைக்கு உயர்ந்திருக்கிறார்கள்; கேட்காதவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

தமிழர் சீர்திருத்த சங்கம் சார்பில் 

தந்தை பெரியாருக்கு வரவேற்பு!

ஒரு தலைவர், தன்னுடைய வாழ்நாளில், அடுத்த முறை அங்கே செல்லும்பொழுது, இவரு டைய உரையைக்கேட்டு, தம்முடைய பிள்ளை களைப் படிக்க வைத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கே அவர்கள் பணியில் இருந்தார்கள். அதே தோட்டப் பொறுப்பில் இருந்தவர்கள், பிறகு, பெரிய அதிகாரிகளாக வந்து, தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தார்கள்.

பெரியாருக்கு வரவேற்பு என்றால், தமிழர் சீர்திருத்த சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டது.

ஆதித்தனார் அவர்களுடைய மாமனார், ஓ.இராம சாமி நாடார் அவர்கள். அதேபோன்று இன்னும் பிற தோழர்கள். நம்முடைய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் சீர்திருத்த சங்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்கள்.

இங்கே இருந்து குடியேறிய தோழர்கள், பெரும் பாலானோர் தோட்டத் தொழிலாளர்கள், தவறான பழக்க வழக்கத்தில் இருந்தார்கள்; அவர்களை மாற்ற பெரியார் அறிவுரை வழங்கினார்.

புதிய பாதையினை, புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு மாற்றினார்

சொந்த நாட்டவர்களுக்கு மட்டுமல்ல, வெளி நாட்டுக்காரர்களுக்கும் அறிவுரை சொல்லி, அவர் களைச் சிந்திக்க வைத்து, மாற்றி, புதிய பாதை யினை, புதிய வாழ்வு பெறக்கூடிய அளவிற்கு மாற்றினார்.

இன்றைக்கு சிங்கப்பூர் ஒரு நவீன நாடு. அந்த நாட்டில், ஜாதி முறை  - தேநீர் கடைகளில் இரட் டைக் குவளை முறை  முன்பு இருந்தது. அவையெல்லாம் பெரியார் இயக்கம் அங்கு வந்த பிறகுதான் மாற்றப்பட்டது.

ஒரு மாணவி (தாரணி), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பெரியாருடைய பயணத்தின் தாக்கங் கள் எப்படி சமூக மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதைப்பற்றி ஆய்வு செய்தார்.

இப்படி பல பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்தது மட்டுமல்ல - நடைமுறையில் அவை எப்படி வெற்றி பெற்றது என்பதைத் தெளிவாக அந்த ஆய்வுகள் காட்டியிருக்கின்றன.

பெரியார், உலகப் பெரியார் என்றால், எப்படி? மற்ற தலைவர்கள் எல்லாம் அவர்களுடைய நாட்டில் இருப் பார்கள். அல்லது வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வார்கள்.

பெரியார் அவர்களுடைய பயணங்கள், உலகப் பயணங்கள்கூட மிகவும் மாறுபட்டவை.

மற்ற தலைவர்களுடைய பயணங்கள் சுற்றுலா -

உலகளாவிய மானுடப் பார்வை பெரியாருடைய பார்வை.

ஆனால், அந்த மக்களுக்கு அறிவுரை - அங்கே இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துதல் - புத்தாக்கங்கள். இவற்றை ஏற்படுத்தியதால்தான், பெரியார் உலகத் தலைவர்.

ஏன் உலக மொழிகளில் அவருடைய தத்துவங்கள் வரவேண்டும்?

உலகளாவிய மானுடப் பார்வை பெரியாருடைய பார்வை.

மனித குலத்தில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு சரி பகுதி உரிமை வேண்டும்.

யாராக இருந்தாலும் கண்டிப்பார் பெரியார் அவர்கள்.

ஏன் அமெரிக்காவில் 

முட்டாள் இருக்க மாட்டாரா?

 அமெரிக்கா வளர்ந்த நாடு என்று சொல்கிறார்களே, அங்கே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருக்கிறதே என்று ஒருவர் அய்யாவிடம் சொன்னார்.

அய்யா அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘‘ஏம்பா, முட்டாள்தனம் என்ன உனக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்திற்கே சொந்தம். ஏன் அமெரிக்காவில் முட்டாள் இருக்க மாட்டாரா?’’ என்று கேட்டார்.

எவ்வளவு அற்புதமான பதில்; எவ்வளவு ஆழமான சிந்தனை.

தந்தை பெரியார் அவர்கள் கம்யூனிசத்தைப்பற்றி பேசியிருக்கிறார்.

அவருடைய பயணங்களை நாம் ஆவணப்படுத்தி யிருக்கிறோம்.  மற்ற தலைவர்களுக்கு இல்லாத அந்த சிறப்பு தந்தை பெரியாருக்கு உண்டு.

வரலாற்றுப் பேராசிரியர் 

இராமச்சந்திரா குகா

வரலாற்றுப் பேராசிரியர் இராமச்சந்திரா குகா அவர்கள் சொன்னார், ‘‘பெரியார் ஒரு தத்துவத்தை சொன்ன தலைவர் மட்டுமல்ல -  தனக்குப் பின்னாலும், இந்தத் தத்துவம் நிலைத்துப் பரப்பப்படவேண்டும் என்பதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்திய தலைவர்.

தி கிரேட் ஆர்கனைசர்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,

திராவிடர் கழகம்

வெளியீடுகள்,

பத்திரிகைகள் - என அவரது உருவாக்கங்கள் பலப்பல’’ என்றார்.

லெவி பிராகல், நார்வே நாட்டு பகுத்தறிவாளர் - இன்றைய காலகட்டத்தில் 21 ஆம் நூற்றாண்டில் உலகப் பகுத்தறிவாளர் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.

பலமுறை பெரியார் திடலுக்கு வந்திருக்கிறார். அவர் வியப்பாக சொன்ன செய்தி என்ன தெரியுமா?

உலகளாவிய இயக்கமாக இருக்கிறது எங்களுடைய இயக்கம். ஆனால், எங்களால் ‘விடுதலை’ போன்று ஒரு பகுத்தறிவு நாளேடு நடத்த முடியவில்லையே!

நான் சென்னையைப் பார்க்கிறேன். சென்னையில் இரண்டு பெரிய முக்கியமான சாலைகள்.

ஒன்றிற்குப் பெயர் பெரியார் சாலை -

இன்னொன்றுக்குப் பெயர் அண்ணா சாலை’’  என்றெல்லாம் குறிப்பிட்டு வியந்தார்.

நுகர்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்குப் பக்குவ மாக அவர்கள் இருக்கிறார்கள்.

பெரியாருடைய கருத்து என்பது அது ஒரு பெரிய ஆய்வுக் களம். அது ஒரு பெரிய சுரங்கம்போன்றது. தோண்டிக் கொண்டே இருந்தால், வந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவில் வேறு எந்த மொழிகளிலும் மொழி பெயர்ப்பதற்கு முன்பு, தமிழில்தான் - பொதுவுடைமை தத்துவத்தினுடைய அறிக்கையை (Communist Manifesto) மொழி பெயர்த்தார் அய்யா அவர்கள்.

சோவியத் ரஷ்யாவிற்குச் சென்றுவிட்டு வந்த பிறகு தான், பெரியாருக்கு கம்யூனிசத்தின்மேல் மிகப்பெரிய பற்று வந்தது என்று பல பேர் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால், உண்மை வித்தியாசமானது. இது பல பேருக்குத் தெரியும். பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.

ஆகவேதான், இந்தக் கருத்துகள் ஆழமான ஆய்வுக் கருத்துகள். ஆய்வுத் தலைப்புகள், 

‘‘கம்யூனிசம் எனப் பேசப்படும் பொதுவுடைமை வாழ்க்கை முறையை பெரியார் அவர்கள் எவ்வளவு முனைப்பாகவும், வரவேற்பாகவும் பரப்பிடச் செய்தார்’’ என்பதை ‘‘இதழாளர் பெரியாரும்’’, ‘‘குடிஅரசு’’ இதழும், பெரும் இதழ் நடத்திய ஏனைய ஆய்வுகளும் நினைவுபடுத்தின.

‘விடுதலை’ நாளிதழில் பொதுவுடைமை தொடர்பான கருத்துகளும், செய்திகளும் அதிக அளவில் இடம்பெற்றதில் வியப்பொன்றும் இல்லை.

‘‘கம்யூனிஸ்டுகளும் - நானும்‘‘

1966 இல் அய்யா எழுதுகிறார். அவர் எழுதிய கட்டுரையை 4.2.1966  இல் நான்தான் வெளியிட்டேன்!

‘‘கம்யூனிஸ்டுகளும் - நானும்‘‘ என்ற தலைப்பில் ஓர் அறிக்கை எழுதினார்.

‘‘நான், 1927 இல் திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் கம்யூனிசம்பற்றிப் பேசினேன். பிறகு, பொதுக் கூட்டங்களில் கம்யூனிசப் பிரச்சாரத்தைப் பலமாகச் செய்து வந்தேன்.

இது நான் ரஷ்யாவைப் பார்த்துப் பேசியது அல்ல. பார்ப்பானுக்கும், கடவுளுக்கும், காங்கிரசுக்கும், காந்திக்கும் விரோதமாகப் பிரச்சாரம் செய்து வந்ததில் தோன்றிய கருத்துகளே அவை.

இரயில், தபால் தந்தி முதலிய இலாகாக்கள் சர்க்காரால் நடத்தப்படுவது - கம்யூனிசத்துக்கு ஓர் உதாரணம் என் றும், அதுபோல மக்களுக்குத் துணி தைத்துக் கொடுத்தல், சவரம் செய்தல் போன்ற மக்களுக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் சர்க்காரால் நடத்தப்பட வேண்டும் என்றும் 1927- லேயே பேசியிருக்கிறேன்.

1929 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்த்துக் ‘குடியரசு’ இதழில் பிரசுரித்து இருக்கிறேன்.

“கம்யூனிசம் காரியத்தில் - செய்கையில் சாத்தியமானது தான்!”

பிறகு, 1931 இல் ரஷ்யா சென்றேன் என்றால், அங்குப் போய் நான் எதையும் கற்றுக் கொண்டு வரவில்லை. அங்கிருந்து நான் தெரிந்து கொண்டு வந்தது ஏதாவது இருக்குமானால், அது - “கம்யூனிசம் காரியத்தில் - செய் கையில் சாத்தியமானது தான்” என்பது தான்.

1932ஆம் ஆண்டுக் கடைசியில் நான் இரஷ்யாவில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்க வேலைத் திட்டம் என்பதாகக் கம்யூனிச பாணியில் சில திட்டங்கள் தயாரித்துச் சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், செயலாளர்கள், முக்கிய தொண்டர்கள் கூட்டத்தில் நிறைவேற்றினேன். இதற்காகவே சிங்காரவேலு செட்டி யாரையும் சென்னையிலிருந்து வழிச் செலவு அனுப்பி வர வழைத்து வாசகங்கள் அமைத்துத் தீர்மானித்தேன்.

அதன் பிறகு ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு என்றெல்லாம் பல மாநாடுகள் போட்டு நடத்தினேன். பிறகு மலையாளத்துக்குச் சென்று அங்கும் பல இடங்களில் மதமில்லாதார் மாநாடு, கடவுள் ஒழிப்பு மாநாடு, மதம் மாற்ற மாநாடு என்றெல்லாம் ஏற்பாடு செய்து பெரிய கிளர்ச்சிப் போரையும் செய்து வந்தேன்.

எனக்கு ஏற்பட்ட கம்யூனிச உணர்ச்சி கடவுள், மத சாஸ்திர, காங்கிரசை வெறுக்க ஏற்பட்ட உணர்ச்சிதான் என்னைக் கம்யூனிசத்தில் கொண்டு போய் விட்டது. இன்று நான், கடவுள் ஒழிப்பில், மத ஒழிப்பில் அன்றிலிருந்து ஒரு சிறு மாற்றங்கூட அடையவில்லை. நாளுக்கு நாள் பலப்படுகிறது. பலாத்காரத்தை விட்டால் வேறு வழி இல்லையே என்ற கவலை என்னைச் சதா வாட்டுகிறது.’’

மறுபடியும் அவர் விருதுநகரில் பேசுகையில் இதே கருத்தைப் பேசினார்.

ஆகவே, இந்தக் கருத்துகளை ஒவ்வொரு இடத்திலும் தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்.

‘பெரியார்’ திரைப்படத்தில் வசனங்கள் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னால், அது ஆச்சரியமானதல்ல!

‘‘பெரியார் என்பவர் இன்றைக்கு முற்போக் காளர் என்று சொல்கிறீர்கள். என்னுடைய கருத் தையே பிற்போக்கானது என்றுகூட 200 ஆண்டு களுக்குப் பிறகு சொன்னால், அது ஆச்சரிய மானதல்ல’’  என்று அவரே சொல்கிறார்.

‘‘என்னுடைய கருத்தை வைத்துக்கொண்டு முன்னால் செல்லுங்கள்; வளர்ச்சியடையுங்கள். பின்னுக்குப் போகாதீர்கள்’’  என்றார்.

சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பி வரும் பொழுது, லண்டனில் தந்தை பெரியார் பேசுகிறார்.

கம்யூனிஸ்ட் தோழர் சக்லத்வாலா

‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில், அவருடைய வாழ்க்கை வரலாறான புத்தகத்தில் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

‘‘ஈ.வெ.ரா. இங்கிலாந்து சென்றபொழுதும், பல தொழிலாளர் தலைவர்களை சந்தித்தார். கம்யூனிஸ்ட் தோழர் சக்லத்வாலாவைக் கண்டு உரையாடினார்.

26.6.1932 இல் இங்கிலாந்தில் மெக்ஸ்பரோ நகர பார்க்கில் ஒரு தொழிலாளர் பொதுக் கூட்டம் நடை பெற்றது. அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் தலைவர் தோழர் லான்ஸ்பரி ஒரு சொற்பொழிவாற்றினார்.

அதற்கு விடைகோரும் முறையில், ஈ.வெ.ரா. பேசியது.

இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக் கத்தக்க பயந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை, மேதிய பரிகசிக்கத்தக்க விஷயமாகக் கருதுகிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

இந்தியச் சுரங்கங்களில் 10 மணிநேர வேலைக்கு எட்டணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு வேலை செய்துகொண்டிருக் கிறார்கள். இந்தக் கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

அதோடு மாத்திரமல்லாமல், இந்தியாவானது, இந்திய அரசர்களும், ஜமீன்தாரர்களுக்கும், முதலாளிமார்களுக் கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்குமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்கு பாத்தி யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் கதை மூலமாக நிர்வாகம் நடக்கும்படியான காரியத்தை தொழில் கட்சியினர் செய்கிறார்கள்.

அதனால், யார்ஷ்ஷேர் தொழிலாளர்களே, நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூகத்தின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்.’’

எப்படிப்பட்ட உரை - இந்தத் துணிச்சல் யாருக்காவது வருமா தோழர்களே!          (தொடரும்)


No comments:

Post a Comment