இப்பொழுது நடைபெறும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் முடிவல்ல -ஹிந்தித் திணிப்பு முடிவுறும்வரை தொடரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

இப்பொழுது நடைபெறும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் முடிவல்ல -ஹிந்தித் திணிப்பு முடிவுறும்வரை தொடரும்!

போர் முழக்கமிட்டார் தமிழர் தலைவர் - தார்ச் சட்டியுடன் புறப்பட்டார்!


சென்னை, மே 2 இப்பொழுது நடைபெறும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் முடிவல்ல - ஹிந்தித் திணிப்பு முடிவுறும்வரை தொடரும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார். 

ஒன்றிய அரசின் ஹிந்தித். திணிப்பு எதிர்ப்பைக் கண்டித்து கடந்த 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை தார்க் கொண்டு அழிக்கும் போராட்டத் தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவர் உரை வருமாறு:

தமிழ்நாடு மண் ஒருபோதும் காவி மயமாகாது - கலாச்சாரத் திணிப்புகளை ஏற்றுக்கொள்ளாது!

குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு, எழுச்சியோடு நடைபெறக்கூடிய, இன்றைய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான - அடையாளமாக எழும்பூர் ரயில் நிலையத் தில்  இருக்கக்கூடிய பெயர்ப் பலகையில் இருக்கக்கூடிய ஹிந்தி எழுத்துகளை அழிப்பது என்பது, ஒரு கலாச் சாரத் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு எதிர்ப்பு போராட் டமாகும். 1938 இல் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை எப்படியெல்லாம் நடத்தினார்களோ, அவை பல களங்களைத் தாண்டி, இன்றைக்கும் தேவைப்படுகிறது என்கிற காரணத்தினாலே, அமித்ஷாக்களுடைய ஹிந்தித் திணிப்பு - ஆர்.எஸ்.எஸினுடைய ஒரே கலாச்சாரமான சமஸ்கிருத கலாச்சாரம்தான் நாடு முழுவதும் இருக்கவேண்டும் என்ற திட்டத் திணிப்பை எதிர்த்து நாடே குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் - தமிழ்நாடு - இந்த மண் ஒருபோதும் காவி மயமாகாது - கலாச் சாரத் திணிப்புகளை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு அடையாளமாகத்தான் இன்றைக்கு இந்தப் போராட் டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

எண்ணற்ற இளைஞர்கள் - ஜாதி, மதம், கட்சி வேறுபாடில்லாமல், ஹிந்தித் திணிப்பை எதிர்க்கின் றோம் என்பதற்கான அடையாளம்தான் இந்தப் போராட்டம்.

அரசமைப்புச் சட்டப்படி மொழி, கலாச்சார, பண்பாடு அடிப்படை உரிமை

இந்தப் போராட்டம் வன்முறை போராட்டம் அல்ல. இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியாக நமக்கிருக்கின்ற உரிமையைக் காட்டுகின்ற மக்கள் போராட்டம்! இன்னும் சொல்லப்போனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், அவர்கள் எந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதியெடுத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்றார்களோ, அந்த அரசமைப்புச் சட்டத்தில், இந்திய குடிமக்கள் தங்களுடைய மொழி, கலாச்சார, பண்பாட்டு உரிமைகளைக் காப்பாற்றும் உரிமை - அடிப்படை உரிமை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த அடிப்படை உரிமையைப் பறித்து, ஹிந்தி தெரியாவிட்டால், ஹிந்தியை ஏற்காதவர்கள் இந்தி யாவை விட்டு வெளியேறலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டுக்கு உலை வைப்பவர்கள் மற்றவர்கள் அல்ல -  உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்ற ஹிந்திக்காரர்கள்தான் என்று உலகமே தெரிந்துகொள்ளக்கூடிய - அந்த ஆணவப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

தந்தை பெரியார் தொடங்கிய 

போராட்டங்கள் தோற்றதில்லை!

தந்தை பெரியார் தொடங்கிய போராட்டங்கள் தோற்றதில்லை. 1938 ஆம் ஆண்டில் எந்த ஆச் சாரியார் ஹிந்தியைத் திணித்தாரோ, அவரே, ''ஹிந்தி எப்பொழுதும் கிடையாது; எப்பொழுதும் ஆங்கிலம் தான்'' என்று சொன்னார்.

அப்பேர்ப்பட்ட நிலையை நாம் உருவாக்கியிருக் கிறோம். அதற்காகத்தான் இந்தப் போராட்டம். எண் ணற்ற இளைஞர்கள் இங்கே திரண்டு இருக்கிறார்கள். எல்லோருடைய மனதிலும் இந்த உணர்வு இருக்கிறது. உணர்வின் அடையாளமாகத்தான் இதைத் தெளி வாகச் சொல்லுகிறோம். கல்வித் துறையிலும், ஆட் சித் துறையிலும் ஹிந்தியைத் திணிக்கிறார்கள்; அதை எதிர்த்து நடைபெறுகின்ற ஓர் அடையாளப் போராட்டம்தான் இந்த ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டமாகும். இந்தப் போராட்டம் கட்டுப்பாடாக நடைபெறும். 

நாம் கழுத்தைக் கொடுக்க முடியாது; நெரிக்கின்ற கைகளைத்தான் விலக்க வேண்டி இருக்கும்!

பெரியார் அவர்களே தார்ச்சட்டியையும், பிரசை யும் கொண்டு ஹிந்தி எழுத்துகளை அழித்தார். அன் றைக்கு அவர் ஹிந்தியை அழித்ததினால், மேலே இருந்த ஹிந்தி எழுத்துகள் - கீழே வந்தது. கீழே வந்த ஹிந்தி, மீண்டும் இன்றைக்குக் கழுத்தை நெரிக்கின்றது என்று சொன்னால், நாம் கழுத்தைக் கொடுக்க முடி யாது; நெரிக்கின்ற கைகளைத்தான் விலக்க வேண்டி இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தப் போராட் டம் நடைபெறவிருக்கிறது.

இங்கே நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அய்யா இரா.முத்தரசன் அவர் கள், இந்தப் போராட்டத்தினைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இதே இடத்தில், இந்தப் போராட்டத்தை அன் றைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தார்ச் சட்டியையும், பிரசையும் கொடுத்து தொடங்கி வைத் தார். 

அன்றைக்கு முத்தமிழ் அறிஞர், 

இன்றைக்கு முத்தரசன்

மீண்டும் ஹிந்திப் பாம்பு படமெடுக்கின்ற நேரத்தில், அன்றைக்கு முத்தமிழ் அறிஞர், இன்றைக்கு முத்தரசன் அவர்கள்.

தந்தை முதலிலே போகட்டும், தனயன் தொடர்வார் என்று சொன்னார்கள்.

ஆம், போராட்டங்களில் தந்தை போனாலும், தனயர் கள் தொடர்ந்து நடத்துவோம் என்பதைக் காட்டத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

தந்தை தொடங்கினார் - தனயர்கள் நடத்துகின்றோம் - அதுதான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தினுடைய வரலாறு.

அந்த அடிப்படையில்தான், தந்தைமார்கள் வயதான வர்கள் - அடுத்து நடத்தக்கூடியவர்கள் இருக்கிறார்கள் தனயர்கள் - இவர்கள்தான் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருக்கிறார்கள்.

வெற்றி கிட்டும் வரையில் போராடுவோம்!

இது ஒரு தொடர் போராட்டமாக நடக்கும் - வெற்றி கிட்டும் வரையில் போராடுவோம், போராடுவோம் என்று சொல்வதற்கு இது அடையாளம் என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி, இந்தப் போராட்டத்தினைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மொழியின்மீது எங்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பில்லை - 

பண்பாட்டு திணிப்பின்மீதுதான் எங்களுக்கு வெறுப்பு

வீழ்க வீழ்க ஹிந்தி ஆதிக்கம்!

வீழ்க வீழ்க ஹிந்தி ஆதிக்கம்!

இந்தியாவை ஒரே கலாச்சாரம்

ஒரே மொழி என்று ஆக்குகிற ஜனநாயக விரோத, மக்கள் விரோத, எதேச்சதிகார, பண்பாட்டுத் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! என்றும் ஏற்கமாட்டோம்! என்றும் ஏற்கமாட்டோம்! என்பதற்காகத்தான் இந்த முறையிலே தொடக்கம் - இதைக் கண்டு ஹிந்தித் திணிப்பாளர்களே பணியுங்கள் - மத்தியிலே இருக்கின்ற ஹிந்தித் திணிப்பாளர்களே, மொழியின்மீது எங்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பில்லை - பண்பாட்டு திணிப்பின்மீதுதான் எங்களுக்கு வெறுப்பு.

ஹிந்தியைத் திணிக்காதே, மக்களை வெறுக்காதே!

மக்கள் ஒருமைப்பாட்டுக்கு 

மொழித் திணிப்பு விரோதமாகும் 

வெறுப்புப் பிரச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் மனிதநேயத்தோடு, தேசிய ஒருமைப்பாட்டோடு, மக்கள் ஒருமைப்பாட்டுக்கு மொழித் திணிப்பு விரோதமாகும். எனவேதான், இந்தப் போராட்டம் - நாங்கள் முடிவு செய்வதல்ல - எங்கள்மீது திணிக்கப்பட்டு இருக்கின்ற போராட்டம், போராட்டம்.

ஹிந்தி ஒழிகின்ற வரையில் 

ஓயாது, ஒழியாது! ஓயாது, தொடரும்!

இந்தப் போராட்டம், ஹிந்தி ஒழிகின்ற வரையில் ஓயாது, ஒழியாது! ஓயாது, தொடரும்! தொடரும்!! தொடரும்!!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment