சென்னை, ஏப்.9 - மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள் ளார்.
சட்டப்பேரவையில் நேற்று (8.4.2022) கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப் பினர் செல்லூர் ராஜூ பேசும் போது, ‘‘அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்கை திமுக அரசு முடக் கியதால் மக்கள் பாதிக் கப்பட் டுள்ளனர். அவர்கள் நெடுந் தொலைவு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது’’ என தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன், ‘‘மக்கள் யாரும் நெடுந்தொலைவு சென்று சிரமப்படவில்லை. முதல மைச்சர் தொடங்கிவைத்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம், அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.
அப்போது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் பயன் படுத்தப்படுவதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துகளை பேணிக் காத்தல், சிறு சேமிப்புத் திட்டத்துக்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர், 1989 ஆம் ஆண்டு ஒரு ஊராட்சிக்கு தலா ஒரு ஆண், பெண் என்ற அடிப்படையில் மொத்தம் 12,617 ஊராட்சிகளுக்கு 25,234 மக்கள் நலப் பணியாளர்களை நியமனம் செய்தார். 1991ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க. அரசு, மக்கள் நலப் பணியா ளர்கள் என்ற பணியை ரத்து செய்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, 1997ஆம் ஆண்டு இந்தப் பணியிடங்கள் மறுபடியும் தோற்றுவிக்கப் பட்டன. 2001இல் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் மீண்டும் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்பிறகு 2006இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களை தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12,618 பேரை அப்போதைய முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நியமித்தார்.
இறுதியாக 2011ஆம் ஆண் டிலும் அன்றைய அ.தி.மு.க. அரசால் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்போ தெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களை ரத்து செய்திருக் கிறது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படு கிறார்கள். இதுதான் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு 2014 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
2017ஆம் ஆண்டு, இந்த சிறப்பு விடுப்பு மனுக்கள் சிவில் மேல்முறையீட்டு வழக்குகளாக மாற்றப்பட்டு, கடைசியாக இந்த ஆண்டு பிப்ரவரியில் விசார ணைக்கு வந்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த அரசு பொறுப் பேற்றவுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்புக்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடை முறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித் துறை அலுவலர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், மொத்தமுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் ‘வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப் பாளர்’ என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் மேனாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தப் பணிக்கென ஏற் கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி யும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதை கருத்தில்கொண்டு, அவர் களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளை கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்தில் இருந்து மாதம் ரூ.2,500 வழங்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி இவர் களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 10 ஆண்டு காலத்தில், உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர் களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங் கிணைப்பாளராக பணி யாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
No comments:
Post a Comment