செந்தமிழ்க் கவிஞர் தேவை இந் நாட்டில்
எலியுள் ளத்தில் புலியுள்ளம் சேர்க்கக்
கணக்கிலாக் கவிஞர்கள் கட்டாயம் தேவை
தூங்கும் தமிழர் சுருக்கென விழிக்க
ஈங்குக் கவிஞர்கள் எண்ணிலார் தேவை!
தமிழைத் தமிழரைத் தமிழகத்தைத்
தமக்கென்று குதிக்கும் சழக்கரை கழிக்கச்
சிங்கத் தமிழரைச் செய்பவர் கவிஞரே!
ஆக்கலும் அழித்தலும் காத்தலும் செந்தமிழ்
மாக்கவி ஞர்கல்லாமல் மற்றவர்க் கியலுமோ?
ஒற்றுமை பாடி உயர்உல கொன்றை
இற்றைநாள் ஆக்கினும் ஆக்குவர் கவிஞர்
வேற்றுமை மதம்பல விளைத்து மக்களைக்
காற்றில் துரும்பெனக் காட்டினும் காட்டுவர்.
பல்கலைக் கழகம் இரண்டுபார்க் கின்றோம்
நல்ல தலைமை இல்லவே இல்லை!
ஆங்கிலத்தின் அழகு கங் காணிகள்’
தீங்கிழைப்பவர் செந்தமி முக்கே!
செந்தமிழ்க் கவிஞர் செத்தால் மகிழ்வர்!
சொந்தத் தாயைத் தூக்கில் இடுபவர்!
தலைமையை மாற்றி நிலைஉயர்த் திடுக
கவிஞர் தோன்றிடக் கடுந்தவம் புரிவோம்!
உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன அவற்றின்
அயர்நிலை நீக்க வேண்டும்; அந்தமிழ்க்
கவிஞரைப் படைக்கும் கருத்து வேண்டும்.
எல்லாப் பள்ளியும் இன்பத் தமிழைக்
கல்லார் இலை என்று காட்டவேண்டும்.
செல்வர்கள் கவிஞர் செய்யும் நூற்களை
வெளியிட வேண்டும் அவ்வப் போதே!
அவர்கள் அடைந்துள செல்வம் அனைத்தும்
பைந்தமிழ் வளர்க்கப் பயன்பட வேண்டும்!
ஈத்து வக்கும் இன்பம் பெரிதென
எண்ணிச் செயல்செய வேண்டும் செல்வர்!
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்றில்லெனப் புகல்வோம்!
எல்லா ஊரும் திருவாரூர்த் தேர்
இழுத்து நிலையில் நிறுத்தல் போலத்
தமிழர் எல்லாம் சரிநிகர் ஒன்றாய்த்
தமிழரின் தொல்சீர்த் தங்கத் தேரை
உளமெலாம் ஊற்றிடச் செய்தல் வேண்டும்!
தமிழைத் தமிழனே மறந்தநாள் இந்நாள்! -
தமிழரின் தொல்சீர் சாகும் வண்ணம்
எதிரிகள் தவங்கள் இயற்றுநாள் இந்நாள்!
தெற்கி லுள்ள சீரலை வாய்க்குத்
தெற்கில் ஏழ்மதுரை ஏழ்தெய்வம் என்ன
நாற்பத் தொன்பது நாடுகள் இருந்தன.
அவைகள் கடலுள் ஆழ்ந்தன; அதனால்
அங்கி ருந்த அந்தமிழ்ச் சங்கமும்
மறைந்தது; தமிழ்நான் மறையும் மறைந்தன!
இந்த உண்மையைக் கவிஞர் எல்லாம்
அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிகளால்
உலகுக் கெடுத்துக் காட்ட வேண்டும்!
கொடுங்கடல் கொண்ட அக் குமரிநா டுமுதல்
இமையம் வரைக்கும் எங்கள் தமிழகம்
என்ற உண்மையைக் கவிஞர் எல்லாம்
பாகம் அடிக்கடி நொடிக்கு நொடி அழகுறப்பாடுக!
தெலுங்கெனில் வேறு மொழியென்று செய்பவர்
மலையாள மொழியென்று மற்றொன்று கூறுவர்!
கன்னட மொழியென்று ஒன்று கழறுவர்!
துளுவென ஒன்று சொல்லி யிருந்தனர்!
இவையெல்லாம் தமிழே என்ற உண்மையை
அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிஞர்
எங்கணும் முழக்கம் இடுதல் வேண்டும்!
முந்தாநாள் தோன்றிய சிங்கள மூடர்
செந்தமிழர்தம் சிறிய திட்டைத்
தமதென்று சொல்லித் தலைதுள்ளு கின்றனர்
குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின்
சிறிய திட்டே அந்தத் திட்டெனக்
கவிஞர் எடுத்தக் காட்ட வேண்டும்
செந்தமிழ்க் கென்று வந்துள தீமையைத்
தமிழர்கள் ஒன்று சேர்ந்து தடுக்க
அஞ்சாது கவிஞர்கள் ஆவன பாடுக!
குறிப்பு: காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் 1963 நவம்பர் - திங்களில் நடை பெற்ற கவியரங்கத்திற்குத் தலைமையேற்றுப்புரட்சிக் கவிஞர் கவிதை பாடிய காலத்திற்கும், அவரது மறைவிற்கும், இடைப்பட்ட காலத்தில் பாடப்பட்ட கவிதை இது. இதுவரை இதழ்களில் வெளிவராத ஒன்று. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம் இதில் பாடியுள்ளார்கள். தமிழர்கள் ஊன்றிப் படித்திட வேண்டுகிறோம். இக்கவிதையைக் கொடுத்து உதவியர்
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
விடுதலை - 29.4.1991
No comments:
Post a Comment