சென்னை, ஏப்.22 தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் என்று சட்டமன்றத்தில் இன்று (22.4.2022) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இத்துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த போது அதில் தெரிவித்ததாவது:
அரசுப் பணிகளில் நியமனங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை . தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக வரிச்சலுகை போன்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தப் பயன்கள் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் சென்றடையும் விதத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அவசியம் என கருதப்படுகிறது. ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழக்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, IIT. IIM, AIIMS ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை இவ்வரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க இயலும். எனவே, இதற்குத் தேவையான அரசமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும்" என இத்துறைக்கான மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment