பதவி உயர்வில் இடஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

பதவி உயர்வில் இடஒதுக்கீடு

ஒன்றிய அரசின் கீழுள்ள சுமார் 75 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 3,800 பதவிகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் கட்டுப்பாட்டு அதிகாரியும்,அந்தந்த துறையின் பதவிகளில் இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வுகளைப் பெற்று வருகின்றனர்

ஆனால் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையில் போதுமான பிரதிநிதித்துவத்தின் அளவை நிர்ணயம் செய்யக் கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும், ஜர்னைல் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஜனவரியில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினருக்கு இடஒதுக்கீடு பிரதிநிதித்துவத்துக்கான அளவை உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகள் தொடர்பாகவும் அரசின் எண்ணம் தொடர்பாகவும் தகவல்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை ஒன்றிய அரசு அண்மையில் தாக்கல்செய்தது. அதில் ஒன்றிய அரசு கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 27,55,430 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 4,79,301 பேர் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர். 2,14,738 பேர் பழங்குடியினப் பிரிவினர் ஆவர். மேலும் 4,57,148 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது சரியாக இருக்காது. மேலும் இது ஊழியர்களிடையே அமைதியின் மையை ஏற்படுத்தும். மேலும் இதுதொடர்பாக அதிக அளவிலான வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

இந்தப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்கான கொள்கையானது அரசமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டம் ஆகியவற்றைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அனுமதிக்கப் படாவிட்டால், தாழ்த்தப்பட்ட பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலன்களைத் திரும்பப் பெற வேண்டியிருக்கும். மேலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை திரும்பப் பெற வேண்டியிருக்கும்.

மேலும், இதற்கிடையில் ஓய்வு பெற்ற பல ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்தல், அவர்களுக்கு வழங்கப் பட்ட அதிகப்படியான ஊதியம், ஓய்வூதியத்தை திரும்பப் பெறுதல்  போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இது பல வழக்குகளைத் தொடர்வதற்கும், ஊழியர்களிடையே அமைதியின் மைக்கும் வழி வகுக்கலாம்

அரசு வேலைகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஊழியர்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. மேலும் இந்தப் பணி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது நிர்வாகத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பான 'இந்திரா சகானி' வழக்கில் தேவையில்லாமல், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.

அது மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்த நேரத்தில் சீதாராம் கேசரி சமூகநீதித் துறை அமைச்சராக (காங்கிரஸ்) இருந்தபோது   77ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 16(4கி) கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரச்சினை அத்தோடு முடிந்துவிட்ட நிலையில், ஆதிக்க வர்க்கம் சும்மா இருக்குமா? வழக்குகளுக்கு மேல் வழக்குகளாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

தேவையான தரவுகளை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில்இப்பொழுது ஒன்றிய அரசு  சில தரவுகளை அளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமையால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவை என்று கூறும் நிலைக்கு வந்தது. இல்லாவிடின் அமைதியின்மையும், தேவையில்லாத வழக்குகளும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு அவசியம் என்று கூறப்பட்ட போது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு கூறியதே தவிர 1995லிருந்து இதுவரை அதற்கான எந்த முயற்சியும் இல்லை.

ஓர் உண்மையை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. போதுமான பிரதிநிதித்துவம் அரசுப் பணிகளில் இல்லையென்றால் அமைதியின்மை வெடிக்கும் என்று ஒப்புக் கொண்டுள்ளது.

இடஒதுக்கீடு பிரச்சினையில் - நீட் உள்பட  இந்தக் கண்ணோட்டத்தை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குரிய இடஒதுக்கீடு சதவீதம் ஒன்றிய அரசின் துறைகளில் எட்டப்படவில்லை என்பதை நினைவிற் கொண்டு அமைதியின்மை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள  வேண்டியது  ஒன்றிய அரசின் அடிப்படைக் கடமையாகும்.

குறிப்பிட சில துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையும் ஆபத்தானது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

 

No comments:

Post a Comment