சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாலம், சாலை திட்டங்களுக்கு நிலம் எடுப்பதற்கு 5 சிறப்பு கோட்டாட்சியர்கள், 144 வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருமங்கலம் தொகுதி உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ‘திருமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் எடுக்க நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை விரைவு படுத்த வேண்டும்’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ரயில்வே பாலங்களை பொறுத்தவரை நில எடுப்பு பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. நில எடுப்புக்கு வருவாய்த் துறையின் கோட்டாட்சியர்களை நம்பியுள்ளோம். அவர்களுக்கு வருவாய்த் துறை பணிகள் அதிகளவில் உள்ளதால், உரிய நேரத்தில் நிலஎடுப்பு பணிகளை செய்ய வருவதில்லை.
இதனால், நிலம் எடுப்பில் காலதாமதம் ஏற்பட்டு, நிலத்தின் மதிப்பு உயர்கிறது. இதனால் திட்டச்செலவு அதிகரித்து, நிதிச்சுமையும் ஏற்படுகிறது. இவை குறித்து, முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நில எடுப்பு பணிக்காக 5 சிறப்பு வருவாய் கோட்டாட்சியர்கள், 144 வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிலம் எடுக்க வேண்டிய இடங்களில் அப்பணிகளை மட்டும் மேற்கொண்டு நிலம் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களின் மேல் இரு புறமும் அணுகுசாலைகளை மாநில அரசு அமைத்தாலும், தண்டவாளங்களின் மேல் உள்ள பாலப்பகுதியை ரயில்வே நிர்வாகம்தான் மேற்கொள்ளும். இதனாலும், காலதாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
ரயில்வே பாலங்களை பொறுத்தவரை நில எடுப்பு பிரச்சினை பெரிய அளவில் உள்ளது என்று கூறினார்.
No comments:
Post a Comment