முதலமைச்சரின் துபாய் பயணத்தால் தமிழ் நாட்டுக்கு ஏற்படும் பயன்கள் பார்ப்பனர்களுக்கும் அரசியல் எதிரி களுக்கும் பெரும் வயிற்றெரிச்சலைக் கொடுத்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டின் அனைத்து பாஜக பிரபலங்களும் முதலமைச்சர் விமானம் ஏறிய நாள் முதல் இறங்கும் கடைசி நிமிடம் வரை புலம்பித்தள்ளிகொண்டே இருந்தனர்.
இதில் பா.ஜ.க. தலைவர் என்பவர் முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்துத் தவறான செய்தியைப் பரப்பி இப்போது இழப்பீடு வழக்கிலும் சிக்கிக் கொண்டார்.
முதலமைச்சரின் விமானப்பயணம் குறித்து தி.மு.க. விளக்கம் அளித்துவிட்டது. அவருடன் சென்றவர்கள் முதலமைச்சரின் மனைவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, உதவியாளர் உதய் சந்திரன், செயலாளர் உமாநாத், செயலாளர் சண்முகம், செயலாளர் அனு ஜார்ஜ், செயலாளர் நிதின் ஜான் சாமுவேல் மற்றும் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர்.
பா.ஜ.க.வினர் கூறுவது போல் முதலமைச்சர் தனது குடும்பத்துடன் விமானத்தில் செல்லவில்லை. முதலமைச்சரின் குடும்பத்தினர் முதலமைச்சர் பயணத்திற்கு சில நாட்கள் முன்பே துபாய் சென்றுவிட்டார்கள்
கடந்த ஆண்டு தொழில் துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் அரபு நாட்டை சேர்ந்த (DP World) டி.பி. வேர்ல்ட் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு வேலையும் நடைபெறுகிறது.
இதன் நீட்சியாக தொழில் துறை அமைச்சர் தற்போது நேரில் பார்வையிட்டு அடுத்த கட்ட நகர்வை துரிதப்படுத்தி உள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி, திருவள்ளூர், சிறீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாகி உள்ளன.
டி.பி. வேர்ல்ட் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் - முதலமைச்சர் மீதான நம்பிக்கையை! இதன் தொடர்ச்சியாக தற்போது கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 1,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பு! துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு. (3 வருடத்தில் ரூ.150 கோடி முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 வருடத்தில் ரூ.350 கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலும் இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் நிறுவுவதற்கான ஒப்பந்தம்) துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேர்ல்டு குழுமம் ரூ.100 கோடி முதலீடு மற்றும் 1,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அய்க்கிய அரபு நாடு ஆஸ்டர் ஞிவி ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீடு. 3,500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 500 பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக ஒப்பந்தம்.
ஷெராப் குழும நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்கான ஒப்பந்தம்.
லுலு குரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டிலும் இரண்டு மால்களை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது. மொத்தமாக மால்கள் மற்றும் உணவு பதனிடும் அமைப்பும் சேர்த்து தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்சிக்கு வந்து பத்துமாதத்தில் ஒரே ஒரு வெளி நாட்டுப் பயணத்தில் உலகத்தின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கமாக திருப்பி உள்ளார் நமது முதலமைச்சர்.
ஒரு அகில இந்திய ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் இதையெல்லாம் பற்றி பேசாமல் தனிப்பட்ட முறையில் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார்.
மகாராட்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மகாராட்டிராவின் மத்திய மாவட்டங்களில் குடிநீர்பஞ்சம் ஏற்பட்டு, ரயிலில் தண்ணீர் கொண்டுவந்த நிலை நிலவியது. முதலமைச்சர் தொகுதியிலேயே குடிக்க நீர் இல்லாமல் கால்நடைகள் மடிந்துகொண்டு இருக்க, நாள் ஒன்றுக்கு ஒரு குடம் தண்ணீர் என்ற நிலையில் அந்த மக்கள் இருந்த சூழலில் - பட்னாவிஸ் குடும்பத்தோடு சென்ற சுற்றுப் பயணம் குறித்து சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது, அதற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய பட்னாவிஸ் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
ஆனால் நமது முதலமைச்சரின் பயணமோ மிக வெற்றிகரமாக பயனுள்ளதாக அமைந்துள்ளது.
நமது முதலைமைச்சர் துபாய் சென்று வந்த பிறகு, அங்கு சில ஒன்றிய அமைச்சர்கள் குடும்பத்தோடு சென்று ஆட்டம் பாட்டம் கும்மாளமிட்டனர், இதைத் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இது குறித்து யாருமே விமர்சனம் செய்யவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் துபாயில் இருந்த அனைத்து நாட்களிலும் தமிழ்நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அனைத்து ஊடகங்களும் தெளிவாக முதலமைச்சரின் அயராப்பணியை வெளியிட்டன.
அப்படி இருந்தும் இவர்கள் புலம்புகிறார்கள். இவர்கள் புலம்பலைக்கண்டு திராவிட மாடல் பயணம் சுணங்காது.
நமது முதலமைச்சரைப் பொறுத்தவரை துபாய் சென்று வந்தார் - வென்று வந்தார்! வயிற்றெரிச்சல்காரர்களே அதில் எரிந்து விழாதீர்கள் - அதிகம் எரிந்தால் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடும்!
No comments:
Post a Comment