பூவின் நறுமணம், சாக்கடையின் துர்நாற்றம், உணவின் வாசம் போன்று பல்வேறு வாசனை வகைகளை நம்மால் அறியமுடிகிறது. அதே மாதிரி ஒரு தாவரத்தால் வேறு தாவரத்தின் வாசனையை அறியுமா?
தாவரங்களுக்கு மூக்கு போன்ற உறுப்பு இல்லை. எனினும் கஸ்கட்டா கொடிக்கு வாசனை அறியும் உணர்வு உள்ளது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
கடுகு போன்ற விதையிலிருந்து வளரும் கஸ்கட்டா இளம் தளிர், பற்றிப்படர வசதியாக அருகில் உள்ள தாவரங்களைத் தேடுகிறது. ஏதேனும் தாவரம் அகப்பட்டால், அதன் தண்டில் ஸ்பிரிங் மாதிரி சுற்றிக்கொள்ளும். அந்தத் தாவரத்தின் நீரையும் ஊட்டச்சத்தையும் உறிஞ்சிக்கொள்ளும்.
கஸ்கட்டா விதை முளைத்த பத்து நாட்களில் அந்தத் தளிர் படர வேண்டிய தாவரத்தை எட்ட முடியவில்லை என்றால் மடிந்துவிடும். தாவரத்தைப் பற்றிப்படர்ந்துவிட்டால் அதன் வேர் அழிந்துவிடும். ஹஸ்டோரியா எனும் உறிஞ்சும் உறுப்பு உருவாகி, படர்ந்த தாவரத்தின் நீரையும் ஊட்டச் சத்தையும் உறிஞ்சி, ஒட்டுண்ணியாக கஸ்கட்டா வளரும்.
அருகில் தக்காளிச் செடி இருந்தால் அதன் வாசனையால் ஈர்க்கப்பட்டு, அதன் மீது பற்றிக்கொள்ளும். வாசனையை உணர்ந்துதான் தக்காளிச் செடியை அடைகிறது என்கிற முடிவுக்கு எப்படி வருவது? பென் பல்கலைக்கழக உயிரியலாளர் கான்சுலோ டி மோரேஸ், தொடர் ஆய்வுகளைச் செய்து இதை நிரூபித்திருக்கிறார்.
முதல் சோதனையில் காலியான தொட்டி, பிளாஸ்டிக் செடி நட்ட தொட்டி, நடுவே கஸ்கட்டாவை வளர்த்து சோதனை செய்தார்கள். எதை நோக்கியும் கஸ்கட்டா செல்லவில்லை. இரண்டு தொட்டிகளையும் புறக்கணித்தது.
தக்காளிச் செடியை அருகில் வைத்தபோது அதனை நோக்கி கஸ்கட்டா சென்றது. போதிய ஒளியில் தக்காளிச் செடியை வைத்தாலும் இருட்டில் வைத்தாலும் அதனை நோக்கி கஸ்கட்டா சென்றது. தக்காளிச் செடி பார்வைக்குப் படாமல் நடுவே திரையால் மூடினாலும் தக்காளிச் செடியை நோக்கிச் சென்றது. அதாவது தக்காளிச் செடியைப் பார்வை உணர்வு மூலம் அறிந்து செல்லவில்லை என இந்த ஆய்வுகள் நிறுவின.
அடுத்து கஸ்கட்டா கொடியையும் தக்காளிச் செடியையும் இரண்டு பெட்டிகளில் அடைத்து, இரண்டின் நடுவே குழாய் போன்ற அமைப்பை இணைத்தனர். குழாய் மூலம் தக்காளிச் செடியின் வாசனை பரவும். இந்த வாசனையை நோக்கி கஸ்கட்டா சென்றது.
தொடுவுணர்வு, காட்சி உணர்வு இரண்டும் இந்த இறுதிச் சோதனையில் விலக்கப்பட்டுள்ளன. எனவே மோப்ப உணர்வு கொண்டு கஸ்கட்டா கொடி செல்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.
தாவரங்கள் வெளியிடும் நறுமண வேதிப் பொருள்களின் கலவையைப் பிரித்து உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் செயல்படுகின்றன. இதுவும் ஒருவகை முகர்தல்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
(நன்றி: இந்து தமிழ் திசை)
No comments:
Post a Comment