மின்சாரம்
தந்தை பெரியார் சிந்தனைகள், எழுத்துகளை 21 மொழிகளில் கொண்டு வர தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது ‘துக்ளக்‘ (6.4.2022, பக்கம் 6 மற்றும் 7).
அதே போல பெரியார் நினைவு சமத்துவ புரங்களைச் சீரமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கும் ஒப்பாரி வைத்துள்ளது.
சீர்படுத்தவே முடியாத கங்கை என்னும் சாக்கடையைச் சுத்திகரிக்க 20 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி அழும் ஒன்றிய பா.ஜ.க. அரசைத் தலையில் தூக்கி ஆடும் இந்தக் கூட்டம் தான் மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் சகதிகளைச் சுட்டெரித்துப் பகுத்தறிவு சுத்திகரிப்புச் செய்யும் தந்தைபெரியார் சிந்தனைகளை உலகெங்கும் கொண்டு செல்ல ஓர் அரசு திட்டமிட்டால் கடுகடுக்கிறது திரிநூல் கும்பலுக்கு!
இருக்காதா? பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் நாங்கள் என்று மார்தட்டி “கல்வி, உத்தியோகம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே சொந்தம் - நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள், நாலாஞ் ஜாதி மக்கள் - உங்களுக்குக் கல்வி கிடையாது. படித்தால் நாக்கை அறுத்திடுவோம் - ஜாக்கிரதை - மற்றவர்கள் படிப்பதைக் கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி விடுவோம் எச்சரிக்கை, படித்து நெஞ்சில் வைத்திருத்திருந்தால், நெஞ்சைப் பிளந்திடுவோம் - சேதி தெரியுமா என்று ஆணவம் பிடித்துத் திரிந்த மதவாதக் கூட்டத்தின் மத்தளத்தைப் பிளந்து அனைவருக்கும் அனைத்தும் என்ற நீரோடையை நாடெங்கும் பரவச் செய்த ஒரு மனிதரின் சிந்தனைகள் உலகெங்கும் பரவுகிறது என்றால் வாந்தியும் - பேதியும் உடைப்பெடுக்காதா?
“தமிழின் சிறப்பை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடு களுக்கும் கொண்டு செல்வது வரவேற்கத் தகுந்தது தான். ஆனால் ஈ.வெ.ரா..வின் சிந்தனைகள் அதற்குத் தகுதி உடையவை அல்ல. தமிழில் பெருமைக்குரிய படைப்புகளை உருவாக்கியவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். வாழ்க்கை நெறியைப் போதித்த வள்ளுவர் போன்றோர் உண்டு.”
அடடே! வள்ளுவர் மீது இந்த அய்யன்மார் கூட்டத்துக்கு எப்படிப்பட்ட அளப்பரிய காதல்!
சங்கராச்சாரியார்கள் உள்ளிட்டு நாகசாமி வரை திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று வாய்க்கூசாமல் வக்கரித்த கூட்டம், தந்தை பெரியார் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றால் வள்ளுவரை இழுத்துக் குளிர் காயும் - அவர்களுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியைப் பார்த்தீர்களா?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்ற திருவள்ளுவர் ஆசானின் குறள் எங்கே? பிறப்பிலேயே உயர்வு தாழ்வு வருணம் பேசும் மனு தர்மம் என்னும் மானுடவிரோத குப்பை எங்கே?
ஆண்டாளின் திருப்பாவை இரண்டாம் பாடலில் வரும் ‘தீக்குறளைச் சென்று ஓதோம்‘ என்ற வரிக்குத் ‘தீய திருக்குறளை ஓதமாட்டோம்‘ என்று சொன்ன பேர்வழிதானே - இவர்களின் ஜெகத்குரு! குறளை என்றால் குற்றம், குள்ளம், கோட்சொல் என்று பொருள் என்பதைக் கூட அறியாத மரக்கட்டைகள் எல்லாம் - இவர்களுக்கு மகான் - மண்ணாங்கட்டி!
திருக்குறளுக்காக முதல் மாநாடு கூட்டி திருக்குறளை மலிவு விலையில் ஊரெங்கும் கொண்டு சென்றவர் தந்தை பெரியார் என்ற வரலாறு தெரியுமா? - இந்த வடிகட்டிய வருணாசிரம வெறியர்களுக்கு?
வெகு தூரம் போவானேன்? இந்தத் ‘துக்ளக்‘கையே எடுத்துக் கொள்வோம்.
கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளாரே?
பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான்! யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து இந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதும் என்று எழுதிய துக்ளக் தான் (19.8.2009 பக்கம் 3) கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திருவள்ளுவருக்குத் தலைப்பாகையைக் கட்டுகிறது.
‘பேசு நா இரண்டுடையாய்ப் போற்றி’ என்று ஆரியத்தை அர்ச்சித்தார் அறிஞர் அண்ணா (நூல்: ஆரிய மாயை)-
பரிதிமாற் கலைஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றவர்களின் சிந்தனைகள் தமிழ்மொழியின் சொத்து என்கிறது துக்ளக்!
‘துக்ளக்‘ சொல்லும் அதே பரிதிமாற் கலைஞர் இந்த ஆரியப் பார்ப்பனர்களைப் பற்றி என்ன கூறுகிறார்?
“வடமொழி தமிழ்நாட்டின் வெகுநாள் காறும் இயங்கியும், அதற்குத் தமிழ் மொழியைத் தம் வழியிலேயே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களையுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்களை வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குரியறாயும், கலையுணர்ச்சி சான்றவராயிருந்தமை பற்றித் தமிழரது திவ்ய ஸ்தலங்களுக்கும் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால் வகைச் ஜாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.
தமிழர்களிடத்திலிருந்த அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” என்று ‘துக்ளக்‘ எடுத்துக் காட்டிய பரிதி மாற் கலைஞரே ‘துக்ளக்‘ கும்பலின் கன்னத்தில் அறைந்தது போலவே எழுதியுள்ளாரே!
(‘தமிழ் மொழியின் வரலாறு’, பக்கம் 26 -28)
உ.வே.சா.வைப் பற்றியும் எழுதுகிறது துக்ளக். “திரு” என்ற அழகிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதற்கு உ.வே.சா.வும், இரா.இராகவய்யங்காரும் எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டனர் என்பதைப் பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான் விளாசியுள்ளாரே! (‘தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்‘)
உ.வே.சாவைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனர்கள் அவருடைய ஆசிரியரான மகா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையை இருட்டடிப்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.
“வள்ளுவர் திருக்குறளை. மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” மனுவாதிகளின் மரமண்டையில் அடித்த பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரையும் அழைத்து மொத்தடி பட வேண்டுமா?
பெரியாரின் நாத்திக சிந்தனைகளைப் பரப்ப மக்கள் பணத்தைப் பயன்படுத்துவது முறையா? என்று கேள்வி வேறு.
நாத்திகம் எங்கள் இந்து மதத்திலும் உண்டு என்று கூறும் இந்தக் கும்பல், பெரியார் நாத்திகம் பேசினால் கசப்பது ஏன்?
இனி வரும் உலகம் பற்றி 1938களிலேயே பேசியவர் பெரியார். சோதனைக்குழாய் குழந்தைப் பற்றி 84 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த தொலை நோக்காளர் அவர். முகத்துக்கு முகம் பார்த்துப் பேசும் காலம் வரும், கைக்குள் உலகு அடங்கும் என்ற சமுதாய விஞ்ஞானி பெரியார்.
மொழி விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்றவர் அவர்.
பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் (குடி அரசு, 17.11.1944) என்பது பெரியார் கொள்கை.
உள்ளதைப் பங்கிட்டு உண்பது. உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற சமதர்ம மானுட உலகத் தத்துவம் தந்தை பெரியாருடையது.
ஆண் என்றால் எஜமானன், பெண் என்றால் அடிமை என்ற நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உயர் எண்ணம்.
“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது”
(குடிஅரசு, 6.6.1935)
பெண்களைப் பற்றி இவ்வளவு உயர்வான எண்ணம் கொண்ட தலைவர் பற்றி மனச்சாட்சியைக் காலடியின் கீழ் புதைத்து விட்டு கற்பு தேவையில்லை என்று சொன்னவர் என்று தன் போக்கில் எழுதுவது பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலை!
கற்பு என்பது பெண்ணுக்கும் மட்டும்தானா? ஆணுக்குக் கிடையாதா, கூடாதா - என்று கேட்டதில் என்ன குற்றம்?
“கட்டுப்பாட்டிற்காகவும் நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது - கூடவே கூடாது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவகை கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் - ஆசை, மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும், நாணயமும், பொறுப்பும் இல்லவே இல்லை” என்கிறார் தந்தை பெரியார்.
(நூல்: ‘வாழ்க்கைத் துணை நலம்‘)
“படுக்கை, ஆசனம், அலகாரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர்” கற்பித்தார் (மனுதர்மம், அத்தியாயம் 9,
சுலோகம் 17)
“மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ள வர்களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.”
(மனு, அத்தியாயம் 9, சுலோகம் 19)
இத்தகைய மனு தர்மத்தோடு கட்டிப்புரண்டு கொஞ்சும் ‘துக்ளக்‘ வகையறாக்கள் கற்பு என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பொது எனும் தந்தை பெரியாரைப் பற்றி கொச்சைப்படுத்திக் கூக்குரல் போடுவது எத்தகைய கழிசடைத் தனம்!
விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்றும், வேலைக்கும் போகும் பெண்கள் பெரும்பாலும் ஒழுக்கக் குறைவானவர்கள் என்றும் சொல்லும் பேர் வழிகள் எல்லாம் இவாளுக்கு பெரியவாள், மகா பெரியவாள் மகான்..... வெங்காயம்!
இந்தத் ‘துக்ளக்‘கின் யோக்கியதைதான் என்ன?
கேள்வி: பெண்களைப் பற்றி உங்களுக்கு உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?
பதில்: உயர்ந்தவர்கள் - அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (துக்ளக்கில் சோவின் பதில் 18.3.2009)
இவர்களின் தாயும் மகளும் பெண்தான் என்ற எண்ணம் கூட இந்தக் கூட்டத்துக்கு இல்லாமல் இப்படி இரக்கமற்று எழுதுகிறதே - வெட்கக்கேடு!
பெண்ணுரிமை பற்றிப் பேசும் போது பெரியார் என்ன சொல்லுகிறார்? “பெண்ணுரிமை என்று வரும் போது உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர்கள். உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்” (நூல்: வாழ்க்கைத் துணை நலம்)
பொதுவாக ஒழுக்கத்தைப் பற்றித்தான் இவர்களின் கருத்தென்ன?
“ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து என்றவர் பெரியார் (சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் - மாணவர்களிடம் பேச்சு 24.11.1964)
ஆனால் ஒழுக்கம் பற்றி சங்கராச்சாரியார் என்ன கூறுகிறார்?
“நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது (‘கல்கி’, 8.4.1958)
யார் ஒழுக்க நெறியாளர்?
“பிராமணர்களுக்கு எதிரான அவரது ஜாதி துவேஷக் கருத்துகளுக்கு அளவே இல்லை” என்கிறது ‘துக்ளக்‘.
முதலில் பிராமணர் என்பதே பிறப்பின் அடிப்படையிலான அகங்காரம் தானே. “நீ பிராமணன் என்றால் நான் யார்? சூத்திரன்தானே! சூத்திரன் என்றால் வேசி மகன்தானே? என்று கேட்பது குற்றமா? மனிதன் என்றால் அவனுக்குச் சுயமரியாதை வேண்டாமா?
“மானமும் அறிவும் மனிதருக்கழகு” என்று குறளை விடக் குறைந்த சொற்களில் கருத்தினைக் கூறிய தலைவர் மீது சேற்றை வாரி இறைக்கலாமா?
‘தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்துத் துவேஷிகள் துவேஷிகள் என்பர்’ என்று லாலாலஜபதி சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.
சங்கரமடத்தில் ஒரு கடை நிலை ஊழியனாக ஒரு பார்ப்பனரல்லாதார் பணியாற்ற முடியுமா?
‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று கூறும் இழிவானவர்கள் தான் - இவர்கள் பார்வையில் லோகக் குரு என்றால், அவர்களை எந்த இடத்தில் நிறுத்துவது?
இன்னொரு குற்றச்சாட்டு:-
ஜாதி ஒழிப்பு நோக்கத்தோடு தந்தை பெரியார் பெயரில் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்காக ரூபாய் ரூ.190 கோடி தேவையா? என்று கேள்வி கேட்கிறது துக்ளக்.
ஜாதி ஒழிப்பு என்றால் நெரி ஏறுமே, வெறி - மண்டையைப் பிளக்குமே!
அக்கிரகாரம் என்றும், சேரி என்றும் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வாரியாகக் குடியிருப்புகளை உண்டாக்கிய குற்றப் பரம்பரையாயிற்றே! பெரியார் பெயரில் சமத்துவபுரம் என்றால் அக்குளில் தேள் கொட்டியது போல் கடுகடுக்காதா?
தமிழ்நாடு பிராமணர் சங்கம் கூட்டம் போட்டு, பெருகி வரும் கலப்புத் திருமணங்களைத் தடுத்திட ‘பிராமண சத்யம் பிரமாண நாள்’ (16.11.2019) என்று அறிவித்ததே - இது எதைக் காட்டுகிறது?
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பார்ப்பனர்களுக்கும் இடம் உண்டே!
பேதமற்ற ஒப்புரவு உலகைப் படைக்கத் தந்தை பெரியார் கொள்கை உலகெங்கும் தேவையே! அதற்குத்தான் 21 மொழிகளில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் எழுத்து உலாவரப் போகின்றன.
சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள் இருக்கிறார்களே ஒருவர் கூட எதிர்க்கவில்லையே என்று புலம்புகிறது ‘துக்ளக்‘.
பிஜேபி உறுப்பினர்களும் சேர்ந்துதான் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற ஆற்றாமையின் அலறல் - புலம்பல் புரிகிறது.
நினைவிருக்கிறதா? முருகன் தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக வந்த போது பிஜேபியினர் பெரியாரைப் பற்றிக் குறை கூறிப் பேச வேண்டாம் என்றாரே, அப்பொழுதும் ‘துக்ளக்‘ புலம்பியதுண்டு.
ஏன்? 7.10.2020 ‘துக்ளக்‘கின் முதல் பக்கத்தில் “பா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார்” என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்ததே!
கேள்வி: திடீரென்று தமிழக பா.ஜ.க. பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறதே? என்பதுதான் அந்தக் கேள்வி.
ஆம். பா.ஜ.க.வுக்குள்ளும் ஆரிய - திராவிடப் போராட்டம் - தந்தை பெரியாரின் கதிர்வீச்சு அங்கும் ஊடுருவ ஆரம்பித்து விட்டதே!
கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மீகத்தில் மூழ்கிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடர் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்துவம். (துக்ளக் - 19.2.2020, பக்கம் 29)
புரிகிறதா? இதுதான் தமிழ்நாடு! ஆரியம் அலறினால் அது தமிழர்களுக்கு நலம் என்று பொருள். இந்தப் பிரச்சினையும் இதுதான்.
பெரியார் நினைவு சமத்துவபுரம் தேவையா?
கேள்வி கேட்கும் "துக்ளக்குக்கு அர்ப்பணம்"
பார்ப்பனரின் விளம்பரம்
7.2.1983 நாள் ‘தினமணி' ஏட்டில் வெளிவந்த கீழ் கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.
இதோ அந்த விளம்பரம்:- கோவையிலுள்ள பிரபல இன்ஜினியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
1) ACCOUNTANTS: B.Com.
பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை
2) TYPIST நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள். குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை
3) SALES REPRESENTATIVES: வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம்.
மேற்கண்ட வேலைகளுக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு,
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்
RAJ & CO. POST BOX NO. 9, COIMBATORE - 641001
இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர்பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால் பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
தகவல்: மூர்த்தி, கோயி
இவர்கள்தான் ஜாதி ஒழிப்பு நோக்கத்தோடு திமுக அரசு உருவாக்கியுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களைக் குறை கூறுகிறார்கள்.
காஞ்சி காம கோடி பீடத்தில் சேவை செய்ய வாய்ப்பு
ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடத்திலும் மற்றும் அதைச் சார்ந்த ஊர்களில் உள்ள கிளைகளில் சேவை செய்வதற்கும் 1994க்கு பிறகு ஓய்வு பெற்ற தாசில்தார், , R.D.O பாங்க், தனியார் கம்பெனியில் ஓய்வு பெற்றவர்கள், நிர்வாகத்திறனில் அனுபவம் உள்ளவர்கள், அந்தணர் மட்டும் விண்ணப்பித்தல் வேண்டும். தகுந்த உதவி செய்து தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: சுவாமினாதன், காரியதரிசி. பிராமண சமாஜம், கொல்லாசத்திரம், காஞ்சிபுரம்-631502.
முகநூல் பதிவு
பணிநிறைவு பெற்ற பார்ப்பனர்களுக்காக கும்பகோணத்தில் பழைமை மாறாத அக்கிரஹார குடியிருப்புகளாம்!
இணையதளத்தில் விளம்பரம்
“அக்கிரஹாரத்திற்குள் மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது" என்று கும்பகோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாறு தெரியுமா தோழர்களே?
No comments:
Post a Comment