புதுடில்லி, மார்ச் 31 தமிழ்நாடு கடற்கரைகளை மேம்படுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்
மக்களவை கூட்டத் தொடரில் கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:
“சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைகளில் சுகாதாரம் மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு தேவையாய் இருக்கிறது.
கடற்கரைகள் ஒரு சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், சிறிய கடல் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் விளங்கு கின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால், கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மாசு குறைப்பு, கடற்கரை மேம்பாடு, அழகுபடுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் கண்காணிப்பு குறித்த விழிப்புணர்வு செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் (பெசன்ட் நகர்) கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், அதிவேக மீட்புப் படகுகள், சுத்தமான துர்நாற்றம் இல்லாத பயோ-கழிப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி, மாமல்லபுரத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரியில் நகராட்சி அமைப்புடன் இணைந்து பணி செயல்படுத்துகிறது. இதற்கு கூடுதலாக ரூ.100 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு கடற்கரைகளை அழகுபடுத்த ரூ.100 கோடி வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு கடற்கரை களுக்கு நீலக்கொடி சான்றிதழும் வழங்க வேண்டும்'' என்று அவர் பேசினார்.
கல்விக்காக வசூலிக்கப்பட்ட
ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன்?
- திமுக எம்.பி. கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி
புதுடில்லி, மார்ச் 31 கல்விக்கான மேல் வரியாக வசூலிக் கப்பட்ட ரூ.94 ஆயிரம் கோடியை செலவிடாதது ஏன் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதுஅவர் பேசியதாவது:
உயர் நிலை,மேல்நிலைக் கல்வி மேம்பாட்டுக்கென செஸ் எனப்படும் கூடுதல்வரியை ஒன்றிய அரசு வசூலிக்கிறது. இதன்படி, 2006-2007 ஆம் ஆண்டுமுதல் வசூலான ரூ.94 ஆயிரம் கோடி நிதி, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தவறாகும்.
கூடுதல் வரியாக வசூலாகும் தொகை, எந்த திட்டத்துக்காக வசூலிக்கப்பட்டதோ, அதற்கென தனியாக இருப்பு வைக்க வேண்டுமென்பது விதியாகும். தொடக்கக் கல்விக்கென வசூலிக்கப்படும் கூடுதல் வரியை செலவிட பிரத்தியேகத் திட்டங்கள் உள்ளன. ஆனால், உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்கென வசூலாகும் கூடுதல் வரியை செலவழிக்க சிறப்புத் திட்டங்கள் எதுவுமில்லை. இதனால், ரூ. 94 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படாம ல்உள்ளது. கரோனா காலத்தில்கூட இந்த நிதியைப் பயன்படுத்தாதது வேதனைக்குரியது.
வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்களின் கருத்துபடி, பெருந்தொற்றுக் காலத்தில் இறுதியாக மூடப்பட வேண்டியது பள்ளிகள்தான். ஆனால், இந்தியாவில் 82 வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், 2018-2021 ஆம் காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளியில்சேருவது பெரிதும் பாதிக்கப்பட் டது. மேலும், கற்கும் திறன் குறைந்ததுடன், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் அளவுக்கு நிலமை மோசமானது.
பள்ளி மாணவர்களின் நலனுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல்வரியை முறையாகப் பயன்படுத்தாததும் இதுபோன்ற நிலைக்கு முக்கியக் காரணமாகும். ஒன்றிய அரசின் பொறுப்பற்றத் தன்மையும், சரியான பொருளாதாரப் பார்வைஇல்லாததும் கூடுதல் காரணங் களாகும். எனவே, கரோனா காலத்தில் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட மோசமான விளைவுகளை மாற்றும்வகையில், கல்விக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிப் பணத்தை முறையாகச் செலவிடும்படி ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment