பசுப் பிரச்சினைதான் உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியை முட்டித் தள்ளப் போகிறது!
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பசுவுக்குத் தான் பாதுகாப்பே தவிர - மக்களுக்கு அல்ல; பசுப் பிரச்சினைதான் உ.பி.யில் பி.ஜே.பி. ஆட்சியை முட்டித் தள்ளப் போகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
25.2.2022 அன்று வெளிவந்த 'இந்து தமிழ் திசை' நாளேட்டின் 8ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தியை அவ்வேடு போட்ட தலைப்புகளைக்கூட மாற்றாமல் அப்படியே தருகிறோம்.
உ.பி. தேர்தலில் பாஜகவை மிரட்டும் கைவிடப்பட்ட பசுக்கள் பிரச்சினையை சமாளிக்க பிரதமர், முதல்வர் புதிய அறிவிப்புகள்
புதுடெல்லி: "உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான
7 கட்ட தேர்தலில் 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந் துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பசுக்கள் விவகாரம் கிளம்பியுள்ளது.
பசுவை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பசுப் பாதுகாப்பை பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்தியில் பாஜக ஆட்சி 2014 இல் அமைந்தது முதல் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் கொலைகளும் நிகழ்ந்தன. அதேசமயம், கைவிடப்படும் பசுக்களும் பிற மாடு களும் தங்கள் பயிர்களை மேய்ந்து இழப்பை ஏற் படுத்துவதாக விவசாயிகள் இடையே புகார்களும் கிளம்பின.
உ.பி.யில் ஆளும் பாஜக அரசு, இப்பிரச்சினை களில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியது. இதனால் விவசாயிகள் அந்த மாடுகளைப் பிடித்து பள்ளி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவல கங்களில் அடைத்தனர். மாடுகள் முட்டி உயிர்கள் பலியாகும் செய்திகளும் ஆங்காங்கே வெளியாகின. இதனால் முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது விமர்சனங்கள் கிளம்பின.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 4-ஆம் கட்ட வாக்குப் பதிவை, பாந்தா மாவட்டத்தின் தஸத் பூர்வா கிராம மக்கள், பசுக்கள் பிரச்சினையை முன்வைத்து புறக்கணித்தனர். எஞ்சிய 3 கட்ட தேர்தல் நடைபெறும் உ.பி.யின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கைவிடப்பட்ட பசுக்கள் அதிகம் உள்ளன. இவற்றால் ஏற்படும் பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஆயுதமாக்கி பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.
இவர்களை சமாளிக்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது பிரச்சாரத்தில் பேசும்போது, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் உ.பி.யில் பசுக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பசுக்களின் சாணத்தை விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் எங்கள் அரசு மாற்றும்” என்றார்.
அமேதியில் முதல்வர் ஆதித்யநாத் கூறும் போது, “விவசாயிகளின் பயிர்களைப் பசுக்கள் சேதப்படுத்துவதை தடுக்க, மார்ச் 10-இல் புதிய ஆட்சி அமைந்த பிறகு மிகப்பெரிய அளவில் பசுப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும். இவற்றில் கைவிடப்பட்ட பசுக்களை பராமரிக்க விவசாயி களுக்கு ரூ.900 முதல் ரூ.1,000 வரை அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.
கடந்த 2017-இல் உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் ஆதித்யநாத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து பசுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்தது. உ.பி.யில் கைவிடப்பட்ட பசுக்கள் தற்போது சுமார் 16 லட்சம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உ.பி.யின் 5,617 பசுப் பாதுகாப்பு மய்யங்களில் 8 லட்சம் பசுக்கள் இருப்பதாகத் தெரிகிறது.''
- இதுவே 'இந்து தமிழ் திசை' கூறும் செய்தி!
பசுக்களைப் பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டத்தையும் முதல்வர் ஆதித்யநாத், அறிமுகப்படுத்தினார். இதன் எண் ணிக்கை சுமார் பத்தாயிரத்துடன் நின்று விட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பசுக்கள் பாதுகாப்புக்காக அரசு ரூ.355 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. ஆட்சியில் - குறிப்பாக உ.பி.யிலும் மற்றும் அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பசு மாட்டுக்குத் தரப்படும் பாதுகாப்பும், பராமரிப்பும் ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்குத் தரப்படுவதில்லை என்பது மறுக்கப்படாத உண்மை.
'கோமாதா குலமாதா' என்று கும்பிடும் பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவின் அரங் கேற்றமே பசு பாதுகாப்புச் சட்டம், மாட்டிறைச்சி என்ற சத்துணவுத் தடைச் சட்டம்.
வடகிழக்கு மாநிலங்களில் - குஜராத்தில் மாட்டிறைச்சி அதிகமான அளவுக்கு ஏற்றுமதி உண்டு. பா.ஜ.க. இதுபற்றி மூச்சு விடுவதில்லை; காரணம் மாட்டிறைச்சிக்குத் தடை போட முடியாத அளவுக்கு அங்கே அது மக்களின் உணவு.
தேர்தலில் பி.ஜே.பி.யின் வயிற்றைக் கலக்கும் பசுக்கள்!
உ.பி.யில் 'கோமாதா'வால் - 'ஹிந்துத்வா' மூலம் ஆட் சிக்கு வந்தவர்களை அதே 'கோமாதா'தான் ஆட்சியிலி ருந்து வீட்டுக்கு அனுப்பவும் ஆயத்தமாகி வருகிறது என்பது உ.பி. தேர்தலில் அவர்களுக்கு வயிற்றைக் கலக்குகிறது அல்லவா?
'கைவிடப்பட்ட பசுக்கள்' என்ற ஒரு புது சொற்றொடர் கூட பயன்படுத்தப்படுகிறது ஊடகங்களில்! சட்ட விரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டதனால் பசுக்களின் எண் ணிக்கை 17 சதவிகிதம் அதிகரித்துக் கைவிடப்பட்ட பசுக்கள் 16 லட்சம் உள்ளதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது.
உ.பி.யில் பசுக்களைப் பாதுகாக்கும் மய்யங்களில் 8 லட்சம் பசுக்கள் உள்ளதாம்!
பசுக்களைப் பொது மக்கள் தத்தெடுக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் யோகிஆதித்தியநாத் அறிமுகப்படுத்தி - இது பத்தாயிரத்தோடு நின்று விட்டதாம்!
மக்களைப்பற்றிக் கவலைப்படாத உத்தரப்பிரதேச பி.ஜே.பி. அரசு
உ.பி.யில் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட் டால் குழந்தைகள் இறந்த கொடுமை; கரோனா காலத்தில் கங்கையில் மிதந்த மனிதர்களின் பிணங்கள்; புலம் பெயர்ந்த தொழிலாளிகள் - வேலை கிட்டாத இளைஞர் பட்டாளம் பெருக்கம் - இதுபற்றி சாமியாரின் காவி ஆட்சி கவலைப்படவே இல்லை!
அதே "கோமாதா" இப்போது விவசாயிகள் ஆத்திரப் படும் வகையில் அவர்களது பயிர்களை மேய்வது - பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்புகளை இந்த 'பசு மாதா'க்கள் செய்வதால், விவசாயிகள் தேர்தல் மூலம் இதற்கு முடிவு கட்ட முனைந்து விட்டனர்.
பா.ஜ.க. அரசைப் பசு முட்டித் தள்ளிவிடும்!
விவிலியத்தில் ஒரு வாக்கியம் உண்டு. "ஆயுதம் எடுப்ப வன் அதனாலேயே முடிவைச் சந்திப்பான்" என்பது போன்று, பசு மாடு உ.பி. பா.ஜ.க. அரசை முட்டித் தள்ளிடும் என்ற அச்சம் அவர்களுக்கே வந்து தவிக்கும் பரிதாபம்! என்னே வேடிக்கை!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.2.2022
No comments:
Post a Comment