"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் இதுவரை 48 லட்சம் பேர் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 7, 2022

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் இதுவரை 48 லட்சம் பேர் பயன்

சென்னை, பிப்.7 தமிழ்நாட்டில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 48 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த 7 மாதங்களாக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை,  இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. மேலும் சிறு நீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கெள்வதற்கு தேவையான பைகளும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

இதுவரை இத்திட்டத்தின் மூலம் முதன்முறையாக 48 லட்சத்து 50 ஆயிரத்து 213 பேரும், தொடர் சேவையாக 42 லட்சத்து 77 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

.புதிய நிதிசேவை திட்டம் அறிமுகம்

சென்னை, பிப்.7 தொழில் முனைவோர்களுக்கான நிதிசேவை வழங்கும் நவி யு.எஸ். டோட்டல் ஸ்டாக் மார்க்கெட் ஃபண்ட்   என்னும் புதிய நிதித் திட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நவி குழுமத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறுகையில், அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய சுலபமான மற்றும் மிகக் குறைந்த செலவிலான முதலீட்டுத் திட்டத்தை இந்திய ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு முதல்முறையாக, நவி இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கி உள்ளது. எங்களது நோக்கமே குறைந்த செலவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடி பேருக்கு

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாகப்பட்டினம், பிப்.7 தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நாகையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகையை அடுத்த ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும், வாரந்தோறும் முகாம் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடியே 67 லட்சம் பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 34 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2ஆம் தவணையாக 5 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5 கோடியே 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2ஆவது தவணை தடுப்பூசியை ஒரு கோடி பேர் செலுத்தவில்லை. தடுப்பூசி செலுத்தி கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. 2 வாரத்திற்கு பிறகுதான் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூஸ்டர் தடுப்பூசி 34 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கதான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகளை போட மக்கள் தானாக முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு

அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்!

சென்னை, பிப்.7  அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி முறையிலான தேர்வுகள் தான் நடைபெறும் என்று பல்கலைக்கழக தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

முதல் 2 பருவமுறைத் தேர்வுகள் இணைய முறையில் நடந்ததால், மூன்றாவது பருவமுறைத் தேர்வுகள் கல்லூரிகளில் நேரடியாக சென்று எழுதும் தேர்வாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது செமஸ்டரில் எழுத்து தேர்வு இல்லை என்பதால், மூன்றாவது பருவமுறைத் தேர்வுகள் நேரடி எழுத்துத்தேர்வாக  நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த எம்.பி. பட்டப்படிப்பை தவிர்த்து, பிற முதுநிலை படிப்புகளுக்கான (முனைவர் படிப்பு உட்பட) நவம்பர்/டிசம்பர் 2021 பருவமுறைத் தேர்வுகள் எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment