ஒரு கொள்கை மாணிக்கத்தை நாம் இழந்திருக்கின்றோம்!
இராயபுரம் இரா.கோபால் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் உரை
இராயபுரம் (திருவாரூர்), ஜன.19 தோழர்கள் எல்லோரும் என்னுடைய உடல்நிலையைப்பற்றிக் கவலைப்படுவார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, நான் கவலைப்படுவது தோழர்களுடைய உடல் நிலையைப்பற்றித்தான். இராயபுரம் கோபால் அவர் களை நாம் இழந்திருக்கிறோம்; ஒரு கொள்கை மாணிக்கத்தை நாம் இழந்திருக்கின்றோம் என்றாலும், அந்த இடம் வெற்றிடமல்ல என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதை மற்றவர்கள் ஈடுசெய்யவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
படத்திறப்பு - நினைவேந்தல்
திருவாரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், மாநில விவசாய அணி செயலாளருமான மறைந்த சுயமரியாதைச் சுடரொளி இராயபுரம் இரா.கோபால் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 8.1.2022 அன்று திருவாரூர் மாவட்டம் இராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் நடைபெற்றது. மறைந்த இராயபுரம் கோபால் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும் இடையே உங்களையெல்லாம் நான் இங்கே சந்திக்கின்றேன்.
இராயபுரம் கோபால் அவர்கள், அதிர்ந்து பேசா தவர், மென்மையானவர். செயலில் உறுதியானவர். அவர் சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்டார். நேரி டையான இழப்பிற்கு ஆளாகியிருக்கக்கூடிய அவரு டைய வாழ்விணையர் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய வளர்மதி அவர்களே, அவருடைய அன்புச் செல்வி கோமதி அவர்களே, அன்புச்செல்வன் பிர பாகரன் அவர்களே, மருமகள் பிரியங்கா அவர்களே, அவருடைய உற்ற சகோதரர்கள், தோழர்கள் வெங்கடாசலம் அவர்களே, கரிகாலன் அவர்களே,
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா ராஜமாணிக்கம்
இந்நிகழ்வில் அவருக்குக் கடமையாற்றவேண்டும், இறுதி வணக்கம் செலுத்தவேண்டும் என்பதற்காக, பல்வேறு சூழ்நிலைகளையெல்லாம், ஏற்கெனவே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா, ஒமைக் ரான் இப்படிப்பட்ட நிலைகளையெல்லாம் தாண்டி, இந்தக் கடமையாற்றுவதற்காக வந்திருக்கக்கூடிய மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா ராஜமாணிக்கம் அவர்களே,
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்புச்சகோதரர் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களே,
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களே, மாவட்டச் செயலாளர் கோ.கணேசன் அவர்களே, மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர் தலையாமங்கலம் தோழர் பாலு அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் தோழர் தன்ராஜ் அவர்களே,
ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன் அவர்களே,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நீடாமங்கலம் நகர செயலாளர் அருமைச் சகோதரர் ஷாஜகான் அவர்களே,
திருவாரூர் மாவட்டத் தலைவர் தோழர் மோகன் அவர்களே,
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களே,
நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.ஏ.டி.நெப்போலி யன் அவர்களே,
திருத்துறைப்பூண்டி மண்டல தலைவர் முருகை யன் அவர்களே, தஞ்சை மண்டல செயலாளர் முனுசாமி அவர்களே, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன் அவர்களே, மாவட்ட செயலா ளர்கள் தஞ்சை அருணகிரி அவர்களே, திருவாரூர் வீர. கோவிந்தராஜ் அவர்களே, நாகை பூபேஷ்குப்தா அவர்களே, நீலன் அசோகன் அவர்களே,
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அழகிரி சாமி, சிவக்குமார் அவர்களே, அதிரடி.அன்பழகன் அவர்களே, பெரியார்செல்வன், இராம.அன்பழகன் மற்றும் இங்கே உரையாற்றிய கழகப் பொதுச்செயலா ளர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே,
ஏராளமாக வந்திருக்கின்ற திராவிடர் கழக, திரா விட முன்னேற்றக் கழக மற்றும் அனைத்து இயக்கத் தோழர்களே, பெரியோர்களே, இந்தக் குடும்பத்து உறுப்பினர்களான பெரியோர்களே உங்கள் அனை வருக்கும் அன்பார்ந்த வணக்கத்தினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கோபால் அவர்களைப்பற்றி ஏராளம் சொல்லலாம். எப்படிப்பட்ட பொறுப்பை அவரிடம் கொடுத்தாலும், அவர் மறுப்பை என்னிடத்தில் சொன்னதில்லை.
ஒரு ராணுவத்தில் இருக்கக்கூடிய ராணுவ சிப்பாய், எந்த உத்தரவை அந்த ராணுவ தளபதி போட்டாலும், அதற்கு மறுப்பு சொல்லாமல், கீழ்ப்படிவதுதான் சிப் பாயினுடைய வேலை என்ற அந்த ராணுவக் கட்டுப்பாட்டைவிட தாண்டியது பெரியாருடைய - தனி மனித ராணுவக் கட்டுப்பாடு.
மருத்துவம் ஒத்துழைத்தது;
அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை
அந்தக் கட்டுப்பாட்டை, நம்முடைய கோபால் அவர்கள் இறுதிவரையில் கடைப்பிடித் தவர். என்ன ஒரு வேதனையான, கஷ்டமான சங்கடம் என்றால், அவரை எப்படியாவது காப் பாற்ற வேண்டுமென - அதற்கென எப்படிப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டாலும், அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. மருத் துவம் ஒத்துழைத்தது, ஆனால், அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை.
காரணம் என்னவென்று சொன்னால், நான் அடிக்கடி நம்முடைய கழகத் தோழர்களுக்கெல் லாம் சொல்வேன்; அவரைப் பார்க்கும்பொழு தெல்லாம் அதைத்தான் நான் சொல்வேன். உடல்நலம் மிகவும் முக்கியமானது என்று.
எல்லாத் தோழர்களுக்கும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இப்பொழுது மீண்டும் மீண்டும் மூன்றாவது அலை, நான்காவது அலை என்கின்ற அச்சுறுத்தல் வருகின்றது. தாய்மார் கள், சகோதரிகள், வந்திருக்கின்ற பெரியோர் களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன். நாம் அதை எதிர்கொள்ளவேண்டும். நாம் பகுத்தறிவு வாதிகள். மனம் பீதியடையவேண்டிய அவசிய மில்லை.
பகுத்தறிவினுடைய விளைச்சலால் எதையும் வெற்றி கொள்ளலாம்!
நாம் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறலாம். அதுதான் பகுத்தறிவினுடைய விளைச்சல். அறிவியல் என்பது அதுதான். அதையும் தாண்டி, மருந்துகள், தடுப்பு வழிகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின் றார்கள்.
அதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண் டும். குறைந்தபட்சம் முகக்கவசம் அணியவேண்டும். நம்மவர்களில்கூட சிலர் முகக்கவசத்தை அணியாமல் இருக்கிறார்கள்; அதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
நான் தேர்தல் பிரச்சாரத்தில்கூட, முதல் பகுதியாக என்னுடைய உரையில், அதைத்தான் எடுத்துச் சொன்னேன்; உங்களுக்கெல்லாம்கூட அது நினை வில் இருக்கும்.
பழகக் கூடியவர்களைப் பாதுகாப்பதற்காக,
முகக் கவசத்தை அணியவேண்டும்; அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவவேண்டும். தடுப் பூசி போட்டுக்கொள்வதற்குத் தயக்கமே காட்டக் கூடாது. இப்பொழுது 60 வயதிற்கு மேற்பட்டவர் களுக்கு பூஸ்டர் என்று சொல்லக்கூடிய இன்னொரு தடுப்பூசியை 10 ஆம் தேதிக்குப் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள் அரசாங் கத்தின் சார்பில்.
அரசாங்கத்தின் முயற்சிகள் ஒரு பக்கத்தில் இருந் தாலும், அதிகாரிகள், இயந்திரங்கள் செயல்பட்டாலும், நாம் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான், அதனை செய்ய முடியும்.
வீட்டில் கட்டுப்பாடோடு இருப்பவர்கள் - வெளியிடங்களில் அப்படி இருப்பதில்லை!
நம்முடைய இராயபுரம் இரா. கோபால் அவர் களிடம்கூட, நான் அடிக்கடி சொல்வேன், உணவிலே கட்டுப்பாடாக இருங்கள் என்று.
இங்கே நம்முடைய சகோதரி அவர்கள், உணவில் கட்டுப்பாட்டோடுதான் இருந்தார் என்று சொன்னார். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன், சிலர் வீட்டில் கட்டுப் பாடோடு இருப்பார்கள்; எவ்வளவுக்கெவ்வளவு வீட் டில் கட்டுப்பாடோடு இருக்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு வெளியில் அந்த வாய்ப்பை எதிர்வினை யாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
உபசரிப்பவர்கள் என்ன நினைப்பார்கள், விருந் தினரின் உடல்நிலையைப்பற்றிக் கவலைப்படாமல், உபசரிப்பதுதான் மிகவும் முக்கியம் என்று நினைப் பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இராயபுரம் கோபால் அவர்கள், இங்கே படமாக மட்டுமல்ல, நமக்குப் பாடமாகவும் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னும் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும்; இயற்கையின் கோணல் புத்தி அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
அவருடைய மகள் திருமணத்திற்குக்கூட நான் வரவேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்த நேரத்தில், கரோனா கொடுந்தொற்று காரணமாக, காணொலிமூலமாக நடத்துங்கள், பரவாயில்லை என்று சொன்னார்.
இதுவரையில் எத்தனை முறை அடக்குமுறைகள், சிறைவாசங்கள் - வழக்குகளைப்பற்றி அவர் கவலைப் பட்டதே கிடையாது.
என்ன செய்யவேண்டுமோ, எந்தப் பகுதியில் செய்யவேண்டுமோ, எவ்வளவுப் பக்குவத்தோடு செய்ய முடியுமோ அதனை செய்யக்கூடியவர் அவர்.
வாழ்நாளில் பெருமையும், விருதும் வேறு எதுவும் கிடையாது!
திருவள்ளுவருடைய திருக்குறளில் ஒரு குறள் உண்டு - நிலையாமை என்பவை இருந்தாலும்கூட,
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து (குறள் 780)
''தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத்தக்க பெருமை உடையதாகும்.
இதைவிட அவர் வாழ்நாளில் பெருமையும், விரு தும் வேறு எதுவும் கிடையாது'' என்று வள்ளுவர் சொல்கிறார்.
அந்தத் தகுதியை இராயபுரம் கோபால் பெற்று விட்டார். ஆனால், நாங்கள் இழந்துவிட்டோமே. எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக ஆகிவிட்டதே! அதற்கு ஈடுகட்ட முடியுமா? முடியாது.
ஆலமரம் போன்றவர்
ஏனென்றால், ஒரு பெரிய ஆலமரம் விழுந்தது என்று சொன்னால், எவ்வளவுதான் விழுதுகள் பல மாக இருந்தாலும் அல்லது கிளைகள் சரியாக இருந் தாலும், மீண்டும் இன்னொன்றை வைத்து உற்பத்தி செய்துகொள்ளலாம் என்று சொன்னாலும், அதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகும்?
எவ்வளவு புயல்களைச் சந்தித்தாலும், எப்படிப் பட்ட சூறாவளிகளைச் சந்தித்தாலும், அதைக் கண்டு அசையாமல் இருக்கும் ஆலமரம் போன்றவர் அவர்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் இன்றைக்கு இழந் திருக்கிறோம். இயற்கையின் கோணல்புத்தி என்று தந்தை பெரியார் சொல்வார். அதை நினைத்துத்தான் நாம் தேறுதல் அடையவேண்டும்.
நான் கவலைப்படுவது தோழர்களுடைய உடல்நிலையைப்பற்றித்தான்!
அவருக்கு உடல்நலக் குறைவு என்று சொன்னதிலிருந்து, மன நிம்மதியை இழந்திருந்தோம். எங் களைப் பொறுத்தவரையில், என்னைப் பொறுத்த வரையில் தோழர்களே, எல்லா தோழர்களும் என் னுடைய உடல்நிலையைப்பற்றிப் பேசுவார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, நான் கவலைப் படுவது தோழர்களுடைய உடல்நிலையைப்பற்றித் தான். ஏனென்றால், அது ஒரு வகையான சுயநலம் என்று சொன்னாலும் - அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தோழர்கள் சரியாக இருந்தால்தான், நம்முடைய ஆதரவாளர்கள் சரியாக இருந்தால்தான், யார் நமக்குத் தோழமையோடு பழகுகிறார்களோ அவர்கள் சரியாக இருந்தால்தான், நம்முடைய பணிகள் சரிவர நடக்கும். படை வீரர்கள் சரியாக இல்லாவிட்டால், ஒரு படைத் தலைவன் தனியே இருந்து என்ன சாதிக்க முடியும்?
ஆகவேதான், மிகுந்த ஒரு சங்கடத்தோடு, அவரை வழியனுப்புவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல; அவருடைய இழப்பு என்பது அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொண்டு, சமாதானம் அடைவதல்ல.
உங்களிடமிருந்து ஆறுதல் பெற நான் வந்திருக்கிறேன்
ஆகவேதான், நான் இங்கு வந்ததே, இவர் களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் என்பதற் காக அல்ல; உங்களிடமிருந்து ஆறுதல் பெற நான் வந்திருக்கிறேன். அவ்வளவு பெரிய துன்பத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
ஆறுதல் பெறுவதற்கு வந்திருக்கிறோம் - இந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் தருவது என்பது என்னுடைய கடமை. ஆனால், அதைவிட இவ்வளவு பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ள நேரத்தில், ஒரு போர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், முக்கியமான ஒரு தளபதி வீழ்த்தப் பட்டார் என்றால், அது எவ்வளவு பெரிய இழப்பு.
அது அவருக்கு மட்டுமல்ல; அல்லது தலை மைக்கு மட்டுமல்ல - எந்த லட்சியத்திற்காக அந்தப் போர் நடக்கிறதோ, அந்த லட்சியத் தையே வீழ்த்திவிடக் கூடிய அளவிற்கு, ஆபத்து அதன்மூலம் ஏற்பட்டுவிடும்.
ஆகவேதான், மிகுந்த வேதனையோடு, இங்கு ஆறுதல் பெற வந்திருக்கிறேன், ஆறுதல் தர வந்திருப்பதைவிட என்று நினைக்கின்ற நேரத்தில், அவருடைய பெருமைகளை மேலும் மேலும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அது முக்கியமல்ல.
இயக்கம் உங்களைப் பாதுகாக்கும்
ஒன்றே ஒன்றை சொல்லுகிறேன், பிரபாகரன் அவர்களுக்கும் சரி, அதேபோல, கோபால் அவர் களுடைய வாழ்விணையர் அம்மா அவர்களுக்கும் சரி, இந்தக் குடும்பத்தாருக்கும் சரி - அவர் இருந்த பொழுது, எப்படி இந்த இயக்கத்தில் இருந்தாரோ, அந்த நிலையையே நீங்கள் தொடரவேண்டும்; இந்த இயக்கம் உங்களைப் பாதுகாக்கும். எந்தப் பிரச் சினையாக இருந்தாலும்.
இயக்கத்தோடு இருக்கின்ற உறவு அறுந்துவிடக் கூடாது; அந்த உறவை நீங்கள் மேலும் மேலும் புதுப்பிக்கவேண்டும்; பிரபாகரன், அவரைவிட இன் னும் ஒருபடி மேலாக இருந்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் நேசிப்பவர்கள். உறவு என்பது வெறும் ரத்த உறவுகளால் இல்லை; ரத்த உறவுகளைவிட, கொள்கை உறவுகள் என்பது மிக ஆழமானது, பலமானது, பிரிக்கப்பட முடியாதது; இழக்கப்படக் கூடாதது.
ஆகவேதான், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், உங்களையெல்லாம் பார்த்து ஆறுதல் பெறுவதற்காக, ஆறுதல் சொல்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்குத் தோழர்கள் தடுத்தும்கூட வந்திருக்கிறேன். கரோனா தொற்று மிகக் கடுமையாக இருக்கிறது, இப்பொழுது போகவேண்டாம் என்று சொன்னார்கள்.
கடைசி வீர வணக்கம்கூட செலுத்த முடியாமல், நம்மைப் பாதுகாத்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பது முக்கியமா? என்று கேள்வி கேட்ட வுடன், தோழர்கள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
உங்கள் விருப்பம் என்று சொன்னார்கள். கோபால் அவர்கள் மறைந்தவுடன் வருவதற்கு முயற்சி எடுத்தோம்; அன்றைக்கு அந்த வாய்ப்பில்லை. கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் மற்றும் தோழர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
இன்றைக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில், குடும்பத்தோடு வந்திருக்கிறோம்.
எனக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை என்று சொன்னால், துடித்தெழுவார் கோபால் அவர்கள். அப்படிப்பட்ட இயற்கையாகவே தீவிரமான வீரஞ்செறிந்த ஒரு தோழர் அவர். அப்படிப்பட்ட ஒரு தோழரை நாம் இழந்திருக்கின்றோம்.
நாடு தழுவிய அளவில், கோபால் பெயரை அறியாதவர்களே இருக்கமாட்டார்கள்
இந்த வட்டாரத்தில் எல்லோருடைய மதிப்பையும் பெற்றவர். அய்யா பெரியவர் முருகைய்யன் அவர்களா னாலும், அய்யா சுப்பையா அவர்களானலும், இன்னும் மற்ற மற்ற தோழர்களானாலும், வரிசையாக நாடு தழுவிய அளவில், பெயர்ப் பெற்றவர்கள், இன்றைக்கு கோபால் அவர்களுடைய பெயரை அறியாதவர்களே இருக்கமாட்டார்கள். ஒரு இளைஞராக இந்த இயக்கத் திற்கு வந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அரசியல் கட்சி நண்பர்கள் எல்லாம் இங்கே இருக் கிறீர்கள். ஆறுதல் தர வந்திருக்கிறீர்கள்; ஆறுதல் பெற வந்திருப்பவர்களுக்கு, ஆறுதல் தர வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களோடு வந்தால் - சிறைத்தண்டனை ஒன்றுதான் கிடைக்கும்!
அதேநேரத்தில், ஒன்றை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்; இந்த இயக்கத்திலே இளைஞர்கள் சேருகிறார்கள் என்று சொன்னால், எதை எதிர்பார்த்து சேருகிறார்கள்; அவர்களுக்குப் பட்டம், பதவியைக் கொடுக்க முடியாது. நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லு வேன், என்னோடு சேர்ந்தால், உங்களுக்கு பட்டம், பதவி என்று எதுவும் கிடைக்காது; சிறைத்தண்டனை ஒன்றுதான் கிடைக்கும். அதைத்தான் நாங்கள் பெருமை யாகக் கருதுகிறோம் என்று சொல்லி வருவோம்.
அப்படிப்பட்ட முன்னணி வீரர்களில் ஒருவராக கோபால் அவர்கள் திகழ்ந்தார்கள். அருமையான ஒரு கொள்கை மாணிக்கத்தை நாம் இழந்திருக்கின்றோம் என்றாலும், அந்த இடம் வெற்றிடமல்ல என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அதை மற்றவர்கள் ஈடுசெய்ய வேண்டும்.
இந்தக் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் பெறவும், ஆறுதல் தரவும் நாங்கள் எல்லோரும் இங்கே வந்திருப்ப தற்குக் காரணம், என்றைக்கும் நம்முடைய குடும்பம், இந்தக் குடும்பம். இந்தக் குடும்பத்தினுடைய வாழ்வு என்பது நமக்கு மிகவும் முக்கியம். இந்தக் குடும்பத்தி னுடைய வளர்ச்சி என்பது எங்களுடைய இலக்கு.
தோழர்களுடைய அரிய உழைப்பின் காரணமாகத்தான்
ஆகவேதான், கோபால் அவர்கள் இல்லையே என்று நீங்கள் நினைக்கவேண்டாம்; இந்த இயக்கம் உங்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு ஆறுதலாக இருக்கும். இராயபுரம் கோபால் அவர்கள் எத்தனையோ பணிகளில், போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உருவானது என்றால், இப்படிப்பட்ட தோழர்களுடைய அரிய உழைப்பின் காரணமாகத்தான்.
அய்யா ஆர்.பி.சாரங்கன் அவர்கள், கோபால் அவர்கள் இளைஞராக இருந்தபொழுதே தயாரித்தார்; அவர் என்ன சொன்னாலும், அவருடைய வழிமுறையிலேயே அப்படியே வருவார் கோபால் அவர்கள். கோபால் அவர்களை எங்களிடம் ஒப்படைத்தார்.
இராயபுரம் கோபால் அவர்களின் பெயர் வைக்கப்படும்!
எனவேதான், தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பெரிய பகுதி அய்யா ஆர்.பி.சாரங்கனார் அவருடைய பெயரில் இருக்கிறது. கோபால் அவர்கள் எங்களைவிட்டுப் பிரியவில்லை; என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாகத்தான் தோழர்களே, அங்கே இன்னொரு பகுதிக்கு இராயபுரம் கோபால் அவர்களின் பெயர் வைக்கப்படும்.
அவர் நம்மோடுதான் இருக்கிறார்; அவர் மறைய வில்லை, உணர்வால், கொள்கையால், செயலால், வரலாற்றால் என்றைக்கும் இருக்கிறார் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறார் என்று சொல்லுவதற்காகத் தான் இங்கே வந்தோம். அப்படிப்பட்ட ஓர் எடுத்துக் காட்டான ஒரு தோழரை நாங்கள் இழந்திருக்கிறோம்; அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திரும்பத் திரும்பச் சொன்னால், வரப்போவது இல்லை.
பகுத்தறிவாளர்கள் பெறக்கூடிய ஒரு சமாதானம்
எதைத் தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதுதான் பகுத்தறிவாளர்கள் பெறக்கூடிய ஒரு சமாதானம்.
மரணம் என்பது எப்படி வருகிறது? யாருக்கு வருகிறது? எப்பொழுது வருகிறது? என்று யாரும் சொல்ல முடியாவிட்டாலும், அது இயல்பான ஒன்று - அது எதிர்பார்க்கவேண்டிய ஒன்று என்பதுதான் நாம் தத்துவ ரீதியாக சமாதானம் அடையக்கூடிய ஒரே வாய்ப்பு.
அந்த வகையிலே, ஆறுதலோடு இருங்கள் என்று உங்களுக்குக் கூறி, எல்லா வகையிலும் அவர் இருந்தால் எப்படி பணிகள் தொய்வில்லாமல் நடக்குமோ, அப்படி நடக்க, ஒவ்வொரு இளைஞரணி தோழர்களும், இராய புரம் கோபால் அவர்களை, உருவமாகப் பார்க்காமல், படமாகப் பார்க்கின்ற நேரத்தில், பாடமாகவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
கட்டுப்பாடு, இயக்க வளர்ச்சியில் அக்கறை, அதுபோல, தனி மனிதர்களிடம் பழகும்போது மிகுந்த மரியாதையுடனும், பண்போடும் பழகுவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும்.
நான் இந்தக் குடும்பத்தில் ஒருவராகவும், பாதுகாவலராகவும் இருப்பேன்
இந்த நெருக்கடி காலத்தில்கூட, ஏராளமானோர் இந்நிகழ்வில் வந்திருக்கின்றீர்கள். இயக்கத்தின் சார்பாக வந்திருப்பவர்களுக்கும், அனைத்துக் கட்சித் தோழர் களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குடும்பத்தின் பொறுப்பாளன் என்ற முறையில், நான் அனைவரையும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, என்றைக்கும் நான் இந்தக் குடும் பத்தில் ஒருவராகவும், பாதுகாவலராகவும் இருப்பேன் என்று கூறி, இந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் அத்துணை பேரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்; பாதுகாப் போடு இருக்கவேண்டும். அவரை நாம் இழந்திருக் கிறோம் என்று வருந்தினால் மட்டும் போதாது; ஏன் இழந்தோம்? எப்படி இழந்தோம்? என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாட்டு நலத்தைப் பாதுகாத்தார், இனநலத்தைப் பாதுகாத்தார், கொள்கை நலத்தைப் பாதுகாத்தார் - ஆனால், அவர் தன்னுடைய உடல்நலத்தைப் புறக் கணித்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.
தோழர்களுக்குப் பணிவன்பான வேண்டுகோள்!
உடல்நலப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இங்கே வந்திருக்கின்ற அத்துணைத் தோழர்களுக்கும் பணிவன்பான வேண்டுகோளாக வைக்கின்றேன்.
அருள்கூர்ந்து நீங்கள் விதிமுறைகளைக் கடைப் பிடியுங்கள்; இப்பொழுதுள்ள நிலைமைகளை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்; ஒவ்வொருவரும் பாது காப்பாக இருக்கவேண்டும். இந்தக் குடும்பத்தினருக்கு எத்தகைய உதவிகள் தேவை என்றாலும், அதை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
வீர வணக்கம், வீர வணக்கம்!
வீர வணக்கம், வீர வணக்கம்!
வீர வணக்கம், வீர வணக்கம்!
கொள்கைக் கோமான் கோபாலுக்கு
வீர வணக்கம், வீர வணக்கம்!
நன்றி,வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்
No comments:
Post a Comment