கண்டேன் : பெரியாரின் உணர்வை உள்வாங்கிய இனமானப் பேராசிரியரின் உள்ளத்தை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

கண்டேன் : பெரியாரின் உணர்வை உள்வாங்கிய இனமானப் பேராசிரியரின் உள்ளத்தை!

திராவிட சமுதாயம் தழைத்திட தமிழர் தலைவர் குறிப்பிட்டதுபோல் (விடுதலை 25.12.2021) 85-ஆண்டுகள், பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் பேராசிரியர் க. அன்பழகனார். 

அவரின் நூற்றாண்டு விழாவைத் தாய்க்கழகம் பெரியார் திடலில் 20.12.2021இல் சிறப்பாகத் துவக்கியது. அதில் மானமிகு ஆசிரியர் உட்பட அறிவுசார்ந்த பலரும் பேராசிரியருடன் அவர்களுக்கிருந்த தொடர்பைப்பற்றி கூறிய பல செய்திகளைப் படித்தேன். அவற்றுடன் ஒப்பிடத்தக்கதல்ல என்றாலும், பேராசிரியருடன் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்த ஓரிரு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பேராசிரியரின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டும் கலைஞர் அவர்கள், “நெற்றிக்கண்ணைத்திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரனை நான் பார்த்ததில்லை. ஆனால் அன்பழகனார் அவர்களின் திருவுருவில் அதனைக் கண்டுகளிப்புறுகிறேன். நேர்மையான சிந்தனை - நிதானமான போக்கு - ஆழமான நீர்நிலைக்குரிய அமைதி இவற்றின் மொத்த உருவந்தான் இனமான பேராசிரியர்”. என்று சுட்டிக்காட்டுகிறார்.

தமிழர் தலைவர்கள் அவர்கள் குறிப்பிடுகையில் “அவர் பழகும் தன்மையும் கூட ‘தனிரகம்‘ ஆகும். மனதில் பட்டதை யாருக்காகவும், எதற்காகவும், எப்பொழுதும் மறைத்துப் பேசியறியாதவர்’’ என்று கூறுகிறார். (ஆதாரம்: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உடன் பயின்ற நண்பர் அ.ர. சனகன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு உருவாக்கப்பட்டு 02.08.2015இல் பெரியார் திடலில் வெளியிடப்பட்ட ‘இனமான பேராசிரியர் - வாழ்வும், தொண்டும்‘ என்ற நூல்)

இனி என் சிறிய அனுபவத்தைக் கூறுகிறேன். விழுப்புரத்தில் 60 ஆண்டுகளுக்கு முன், மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்டவர் டி. தியாகராசன் என்பவர் அவர் நகர் மன்றத்தலைவராகவும் இருந்தார். தந்தை பெரியாரிடமும், திராவிடர் கழகத்திடமும், பெற்றுக்கொண்டவர்.

விழுப்புரம் நகர் மன்றத்தலைவ ராகவும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மு.சண்முகம். டாக்டர். டி.தியாகராசன், 

மு. சண்முகம் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். டாக்டரின் திருமணத்தை மு. சண்முகம் தலைமை யில் விழுப்புரம் சீத்தாராம் திரையரங்கில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நடத்திவைத்தார்.

பேராசிரியர் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கி இருந்தார். அவரைத் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்காக மு. சண்முகம் அவர்கள் அவரின் குதிரை வண்டியுடன் பள்ளி மாணவனான என்னை அனுப்பி (அவர் என் பெரியப்பா) பேராசிரியரைத் திரையரங்குக்கு அழைத்து வரும் பணியை ஒப்படைத்தார். மிக மெலிந்த உடல்வாகு, நீண்ட கருப்பு ஜிப்பா, சிவந்த மேனி, “வண்டி வந்து விட்டது வாருங்கள்” என்று அவரை அழைத்தேன். ‘ரொம்ப தூரமா’ என்று கேட்டார். இல்லிங்க கிட்டதானுங்க என்று கூறினேன். வண்டியில் அழைத்துச்சென்று விட்டதுடன் என் வேலை முடிந்தது. இதுவே நான் அவரை முதலில் பார்த்தது. பெரியாரைப்பற்றியோ, கருப்பு சட்டை அணிவதைப்பற்றியோ எதுவும் அறியாத நிலை.

பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தந்தை பெரியாரின் தத்துவ நெறியே வாழ்க்கை நெறி என்று நான் வாழ்ந்து வந்த காலம். உடுமலை அமராவதி சைனிக்பள்ளியில் பணியாற்றிய காலம். பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டு அதற்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியரை அழைக்க முடிவெடுக்கப்பட்டது. சிதம்பரத்தில் பேராசிரியர் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசித்தவரும், பேராசிரியரை நன்கு அறிந்தவரும், விழுப்புரத்தில் ஆசிரியராக இருந்தவருமான ஜி.ழி.பாண்டுரங்கன் என்பவரை அழைத்துக்கொண்டு புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் சந்தித்து வேண்டுகோளை வைத்தேன். நான் விழாவின் ஏற்பாடு பற்றியெல்லாம் கூறிய உடன்,சிறிதும் காலம் தாழ்த்தாமல் “உடுமலையில் நடத்தப்படும் விழாவிற்கு அப்பகுதி அமைச்சர் சாதிக் பாட்ஷாவை வைத்து நடத்த வேண்டியது தானே, நான் இங்கிருந்து வரவேண்டுமா? அவரை வைத்து நடத்துங்கள்”. என்று கூறி முடிவுகட்டிவிட்டார்.

அடுத்து, என்னுடைய மகனின் இணையேற்பு விழா கடலூரில் 07.02.1988இல் நடந்தது. அதனை பேராசிரியர் தலைமையேற்று நடத்தி வைத்தார். பேராசிரியர் செ.வெ. சிட்டிபாபு, ஏ.ஆர். தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களை வரவேற்கும் போதும், அறிமுகம் செய்து கொண்டபோதும், வணக்கம் கூறி மகிழ்ச்சி தெரிவித்ததுடன் முடிந்தது.

விழுப்புரத்தில், ஆசிரியர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் பேராசிரியரும் பங்கு கொண்டார். தந்தை பெரியாருடன் என் இணையர், பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட நிழற்படத்தின் பின்பக்கத்தில் பெரியார் அவர்களின் கையெழுத்து பெற்றிருந்தேன். அதை தொடாந்து திராவிடர் இயக்க தலைவர்களின் கையெழுத்தையும் (கிutஷீரீக்ஷீணீஜீலீ) (கலைஞர், நாவலர், ஆசிரியர், க.பொன்முடி போன்றோர்) கையெழுத்தையும் பெற்றிருந்தேன்.

இனமான பேராசிரியர் கையெழுத்தையும் பெற்றுவிட வேண்டும் என்று மாநாடு மேடைக்குக்சென்று பேராசிரியரிடம் நிழற்படத்தைக்கொடுத்து கையெழுத்துக்கேட்டேன். “பெரியார் அய்யாவுடைய கையெழுத்துக்கு சமமாக என்னுடைய கையெழுத்து இருப்பது முறையல்ல” என்று கூறி நிழற்படத்தைத் தந்துவிட்டார்.

“கலைஞர் குறளோவியம் எழுதிவிட்ட பிறகு நான் எழுதிய திருக்குறளுக்கான உரையை வெளியிட சம்மதிக்கவில்லை” என்று பேராசிரியர் கூறியதை மானமிகு. சுப.வீ. கூறியதையும் (விடுதலை 23.12.2021) எண்ணி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் வழிகாட்டுதலின் இலக்கணமாகத்திகழ்ந்தார் பேராசிரியர் என்பதையும் வியந்து எண்ணிப்பார்த்து அந்த உணர்வைப்போற்றுவோம். திராவிடம் வெல்லும்!

மு.வி. சோமசுந்தரம் 

தலைவர், 

நகர பகுத்தறிவாளர் கழகம்

விழுப்புரம்.

No comments:

Post a Comment