சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலே கரோனா பரிசோதனை கட்டாயம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

சளி, காய்ச்சல், இருமல் இருந்தாலே கரோனா பரிசோதனை கட்டாயம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜன.11 தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கரோனா பரிசோதனை தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நிலவி வரும் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, யார் எல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், யார் எல்லாம் வீட்டுத்தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை தேவையில்லை...

கரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கரோனா சிகிச்சை மய்யங்களில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமலும், அறிகுறிகள் தெரிந்து அல்லது கரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் முடிவுற்று எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருந்தால் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம். கரோனா சிகிச்சை மய்யங்களில் இருந்தும் வீடு திரும்பலாம்.

வீட்டு தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment