அதிகார பலத்தால் மதமாற்றமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

அதிகார பலத்தால் மதமாற்றமா?

உடுப்பி ராமகிருஷ்ணா மடத்தில் பா... மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூரியா பேசும் போது. “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டாயத்தின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, அச்சுறுத்தப்பட்டோ, ஆசைகாட்டியோ இந்துக்கள் தங்கள் மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஒன்றே ஒன்றுதான் தீர்வு. பல்வேறு சமூக பொருளாதார அரசியல் காரணங்களுக்காக தங்கள் மதத்திலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் தங்கள் தாய் மதத்துக்குள் அழைத்து வருவது மட்டுமே ஒரே வழி” “அது சாத்தியமா என்று கருதினால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அது இயற்கையாக நடக்காது. நாம்தான் பெரு முயற்சி எடுத்து நம் மரபணுவில் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்என்று கூறினார்.

ஒவ்வொரு கோயில் மற்றும் மடத்துக்கும் ஆண்டுக்கு இத்தனைப் பேரை இந்து மதத்துக்குத் திரும்ப அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விழாவுக்காக நாம் பல மக்களை இந்து மதத்துக்கு அழைத்து வந்தோம்.

திப்பு சுல்தான் காலத்தில் மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்து வந்ததைக் கொண்டாடும் வகையில் திப்பு இறந்த நாளை நாம் கோலாகலமாக இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். அப்போதுதான் இந்திய தேசம் மீண்டும் பிறக்கும்.இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அரேபியாவிலிருந்தோ ஜெருசலேமிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இனி இந்துக்கள் யாரும் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்துக்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் பணியில் இது பாதிதான். மீதி பாதி இன்னும் தீர்க்கப்படவில்லை

மதம் மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இது குறித்து நாம் முன்பே ஆலோசித்துள்ளோம். தேர்தல் வரும் போது, அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் குறித்து விவாதித்துள்ளோம். தற்காலிகமாக அவர்களின் எண்ணிக்கையையும் வலிமையையும் குறைக்க, தொகுதி வரையறைகளில் பரிந்துரை செய்கிறோம், ஆனால் அது ஒரு வலுவான தீர்வல்ல. நம்மால் பிரச்சினையை ஒத்திவைக்கத்தான் முடிகிறதே ஒழிய, தீர்வு காண முடியவில்லை. இந்து தர்மமும் இந்து சமூகமும் தழைக்க வேண்டுமானால் அரசியல் அதிகாரம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைதான் ஜனநாயகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது, எனவே நமக்கு வேறு வழியில்லை,” என்று கூறினார்.

அப்பிரச்சினையைத் தீர்க்க, நம் சொந்த ரத்தங்களை மீண்டும் இந்து மதத்துக்கு, உண்மையான நம்பிக்கைக்கு அழைத்து வருவதுதான் ஒரே வழி, அதை நாம் செய்தே ஆக வேண்டும் என்று கூறினார் தேஜஸ்வி சூரியா.

இந்து மதம் மட்டுமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தை எதிர்கொண்டு பிழைத்த மதம். உலகின் பல பகுதிகளில் பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இந்து மதத்தில் கோடிக்கணக்கான கடவுளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்திலும், கிறிஸ்துவத்திலும் ஒரேயொரு கடவுள்தான் இருக்கின்றார். இஸ்லாத்தில் அவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் காஃபிர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தில்  மத நம்பிக்கையற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இரு மதங்களும் உருவ வழிபாட்டை அழிக்க விரும்பின

இப்போது நம் எதிரி யார் என்று நமக்குத் தெரியும், நாம் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் தெரியுமா...? பஞ்சாயத்துத் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை என்ன மாதிரியான தேர்தலாக இருந்தாலும், யார் வேட்பாளராக இருந்தாலும், வாக்களிக்க இருப்பவர்கள் இந்துக்களை பாதுகாக்கும் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 2014ஆம் ஆண்டுக்கு முன் மதச்சார்பின்மைக் கட்சிகள் மசூதிகளுக்குச் செல்ல போட்டியிட்டன. பலர் தாடி கூட வளர்த்தனர்,  2014க்குப் பிறகு தான், இந்துக்களை பாதுகாக்கவில்லை எனில் நீங்கள் தேர்வு செய்யப்படமாட்டீர்கள் என்கிற ஒரு தெளிவான விஷயத்தை இந்துக்கள் உரக்கக் கூறினர்,” என்று பேசினார்.

இந்து மற்றும் இஸ்லாமியர்களுக் கிடையில் சண்டை என்றால் அவ்வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் அஞ்சின. ராமர் கோயில் வழக்கில் கூட நீதிமன்றம் தீர்ப்பளிக்க அஞ்சியது. இந்துக்களின் விழிப்புணர்வால் உச்ச நீதிமன்றம் துணிச்சல் பெற்று ராமர் கோயில் விவகாரத்தில் தீர்ப்பளித்தது,” என்று குறிப்பிட்டார்.

இவையனைத்தும் இந்து அதிகாரத்துக்கு வந்ததால் நடந்தது. எனவே அந்த விஷயத்தில் எதுவுமே பேரம் பேசுவதற்கு இல்லை. இந்து இனம் வாழ இந்துக்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற விஷயத்தில் மாற்றுக் கருத்து இல்லை. இந்து இனம் தழைக்க, இந்த விஷயம் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்என்று தேஜஸ்வி சூரியா கூறினார்.

இந்த ஹிந்த்துவா வாதிகளை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது. வேறு சரக்கு ஏதும் இல்லாது கையறு நிலைக்கு ஆளாகி விட்டவர்களின் வெற்றுப் புலம்பலாகத் தான் இதனைக் கருத வேண்டும்.

ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். முஸ்லிம்களும், கிறித்தவர்களும் வேறு நாடுகளிலிருந்து வந்தவர் அல்லர் என்பதுதான் அது. 5 இலட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் புத்த மார்க்கம் தழுவினார்களே, அதைப் பற்றி ஏன் பேசவில்லை?

இந்து மதத்தைப் பீடித்த பெரு நோயான ஜாதி - தீண்டாமைதானே காரணம். அதனை ஒழிப்பது பற்றி உதட்டை அசைப்பதில்லையே, ஏன்? புண்ணை மூடி மறைத்தால் புரை யோடிப் போகாதா?

வாள்தான் மதமாற்றத்தை முழுதும் ஏற்படுத்தியது என்பது சரியல்ல. வாளும், நெருப்புமே இத்தனைப் பேரையும் மத மாற்றியது என்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்றால் இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்? (The Man Making Message of Vivekananada for the use of College Students)

இதற்கு என்ன பதில்?

இந்துக்களின் விழிப்புணர்வால் தான் ராமன் கோயில் விஷயத்தில் உச்சநீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது என்று பா... எம்.பி. கூறுகிறாரே - இதன் உட்பொருள் என்ன?

தன்னாட்சி அமைப்புகள் எல்லாம் காவிகளின் கைக்குள்ளா?

திப்பு சுல்தான் மறைந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டுமாம். வரலாற்றைத் தலைகீழாகத் தொங்க விட்டுப் பார்ப்பதில் இவர்களுக்குப் பெரு மகிழ்ச்சி - உண்மை என்னவென்றால் திப்பு சுல்தான் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடத்துக்குப் பலவகைகளிலும் உதவியுள்ளார் என்பதுதான்.


 

No comments:

Post a Comment