இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில் அறிவியல் கலைக் கல்லூரிகள் தொடங்க முடிவு - வரவேற்கத்தக்கதே - துறை அமைச்சருக்கு நமது பாராட்டுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில் அறிவியல் கலைக் கல்லூரிகள் தொடங்க முடிவு - வரவேற்கத்தக்கதே - துறை அமைச்சருக்கு நமது பாராட்டுகள்!

‘‘பணிக்கு இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்கவேண்டும்'' என்று விளம்பரம் கொடுத்திருப்பது அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு விரோதம்!

இம்மாதிரி சட்ட விரோதக் குறைபாடுகள் தொடக்கத்திலேயே களையப்படவேண்டும்!

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை யின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில் அறிவியல் கலைக் கல்லூரிகள் தொடங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது - இத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நமது பாராட்டுகள்; வேலை வாய்ப்பில் இந்துக்கள் மட்டும்தான் விண் ணப்பிக்கவேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருப்பது அரசமைப்புச் சட்ட நடை முறைக்கு விரோதம்; சட்ட விரோதக் குறை பாடுகள் தொடக்கத்திலேயே களையப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அண்மையில் தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில், நான்கு அறிவியல் கலைக் கல்லூரிகளைத் தொடங்குவதென முடிவெடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் நிர்வாகத்தின்கீழ் நடத்தப்பட அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஏற்கெனவே இதற்கு முன்னுதாரணங்கள் ஏராளம் - ‘திராவிட மாடல்' ஆட்சியில் உண்டு. பழனியாண்டவர் கல்லூரி, பாலிடெக்னிக், மதுரை மீனாட்சி அம்மன் அரசு பெண்கள் கல்லூரி, திருக்குற்றாலம் ஆதிபராசக்தி கல்லூரி (நிர்வாகம் மேற்கொள்ளப்பட்ட கல்லூரி) என இப்படி சான்றுகள் உள்ளன.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நமது பாராட்டுகள்

அதனையொட்டி சென்னை கொளத்தூரில் ஏற்பாடு செய்து, இவ்வாண்டே தொடங்க, தற்காலிகமாக அரசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக் கட்டடத்தில் (தகுந்த தனிக் கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்ட உரிய இடத்தில் கட்டி முடிக்கப் படும்வரை) இயங்க ஏற்பாடு செய்திருப்பதும் சரியான ஏற்பாடாகும்.

இவ்வளவு வேகமான முறையிலான செயல் பாடுகளுக்குக் காரணமான அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நமது பாராட் டுகள்!

ஆனால், அதேநேரத்தில் இன்று (16.10.2021) சில ஏடுகளில் வெளிவந்துள்ள ஒரு விளம்பரம் நம்மையும், மற்ற பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

‘‘வேலை வாய்ப்பு - விளம்பர அறிவிப்பு'' என்ற தலைப்பில், உதவி விரிவுரையாளர்களுக் கான விண்ணப்பம் கோரும் விளம்பரம் அது.

அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு

முற்றிலும் விரோதமான - தவறான செய்கை

அதில் இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி‘Only Hindus' என்று போட்டிருப்பது மிகவும் அதிர்ச்சிக்கு உரியது - அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கும் முற்றிலும் விரோதமான - தவறான செய்கை.

இது ஹிந்துக் கோவில் பணிக்கான வேலை அல்ல - ஹிந்துக்கள் மட்டும் என்று கூறுவதா?

இது அனைவருக்கும் கல்வி சொல்லிக் கொடுக்கும் கல்லூரிப் பணி - அரசுப் பணி. அனைத்து மத மாணவர்களும், மத மற்றவர் களும்கூட அக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் உரிமை பெற்ற வர்கள்தானே!

அனைத்து மாணவர்களும் சேர உரிமை உண்டு

எப்படி கிறித்தவ நிர்வாகம் நடத்தும் கல்லூரிகளில் கிறித்தவர் கள் மட்டும் என்று இருப்பதில் லையோ, முஸ்லீம்கள் நடத்தும் கல்லூரிகளில் முஸ்லீம்கள் மட்டும் என்று இருப்பதில்லையோ - அது போல அனைத்து மாணவர்களும் சேர உரிமை உண்டு.

அதுபோலவே வேலை வாய்ப் பில், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் அனைத்து மதத்தவரும் விண்ணப்பிக்க உரிமை உண்டு.

1928-க்குமுன் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லீம் மாண வர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது; அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சி தான் மாற்றியது. (காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து; அவரது அறக்கட்டளைமூலம் நடத்தப் படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டுகாலம் இருந்ததை தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது).

இன்று இது அரசு கல்லூரி; இந்து அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசின் துறை.

கோவில் பணிகளுக்கு, அர்ச்சகர் நிய மனங்களுக்கு அந்நிபந்தனை பொருந்தக்கூடும்; ஆனால், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அது பொருந்தாது; நாளைக்கு ஒருவர் நீதிமன்றத்திற்குப் போனாலும் இந்த நிபந்தனை சட்ட விரோதம் ஆகும்!

சட்ட விரோத குறைபாடுகள் தொடக்கத்திலேயே களையப்படவேண்டும்!

கல்லூரியை நடத்தும் நிர்வாகம் எதுவாக இருந்தாலும், அந்தந்த மதத்தவர் என்றால், அதுசெக்டேரியன்' (ஷிமீநீtணீக்ஷீவீணீஸீ) என்ற குற்றத்திற்கு ஆளாகக்கூடும் - இது அர்ச்சகர் நியமனம் போன்றது அல்ல.

எனவே, இதனை தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். காரணம், இது அவரது தொகுதியில் தொடங் கப்படும் சிறந்த முயற்சி - அதில் இதுபோன்ற சட்ட விரோத குறைபாடுகள் தொடக்கத்திலேயே களையப்படவேண்டும்.

இதற்குக் காரணமான துறையினருக்கும் போதிய விளக்கத்தை அளித்து, மீண்டும் இத் தவறு மற்ற கல்லூரி விளம்பரங்களிலும் வராமல் இருக்கவேண்டும் என்பதைக் கனிவுடன் தெரி வித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

16.10.2021          


1 comment:

  1. அரசியலமைப்பு பற்றி தெறிந்து கொண்டு பேசினால் நல்லது.

    ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்மே ஹிந்து சமய அறநிலைய துறையில் பணி புரிய தகுதியானவர்கள்.

    தங்கள் அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுப்பீர்களா?

    ReplyDelete