அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்திய தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாள் விழா!
நியூயார்க், செப்.30 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாள் விழா இணையவழி சிறப்பு காணொலி நிகழ்ச்சியாக 18.9.2021 அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழா மூன்று மணி நேரத்திற்கு மிகச் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்கத் தமிழர்களும், அய்ம் பதுக்கும் அதிகமான பெரியார் பிஞ்சுகளும், கழகத் தோழர்களும், பெரியார் பற்றாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் சிகாகோ அருள்செல்வி அவர்களும் தோழர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார்கள்.
சமூகநீதி நாள் உறுதி மொழி!
முதலில் மருத்துவர் சோம. இளங்கோவன் வரவேற்புரை வழங்கினார். இந்த ஆண்டு முதல் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அய், சமூகநீதி நாளாக அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப்பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக வாழ்த்து களையும், நன்றியையும் தெரிவித்தார். அவர் முன்மொழிய அனைவரும் சேர்ந்து சமூகநீதி நாள் உறுதி மொழி சொல்லி விழா இனிதே தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக பறை இசையை நியூ ஜெர்சியிலிருந்து தோழர் பிரபு "பெரியாரைப் படி படி படி" என்று முழங்கியபடி தெவிட்டாத பறையிசையை அள்ளி வழங்கினார். அடுத்தாக மழலைச் செல்வங்களின் மாறுவேட நிகழ்ச்சி. பிள்ளைகள் தலைவர் கலைஞராய், அண்ணல் அம்பேத்கராய், மருத்துவர் முத்துலட்சுமி அம்மை யாராய், பேரறிஞர் அண்ணாவாய் வேடமிட்டு வந்து தந்தை பெரியாரின் பொன்மொழிகளை எடுத்துரைத்தனர். அடுத்ததாக பெரியாரின் சிந்தனைகள் எப்படி தலைமுறைகள் தாண்டி சென்றுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நான்காம் தலைமுறை பெரியார் பிஞ்சு - ஏழு வயதான பெரியார் சித்தார்த் சிறப்பு விருந்தினராக நம்மோடு இணைந்தார். இவர் தனக்கு ஏன் பெரியாரைப் பிடிக்கும் என்றும், குழந் தைகள் ஏன் பெரியாரைப் படிக்க வேண்டுமென்றும் தன் அழகு தமிழால் எடுத்துரைத்து அனை வரையும் கவர்ந்தார்.
முத்தமிழ் விழா!
அடுத்ததாகப் பெரியார் பிஞ்சுகள் பெரியார் கருத்துகளில் தங்களை கவர்ந்த கருத்துகள்பற்றிப் பேசினார்கள். சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, பெரியாரின் இன்றைய தேவை என்பதைப் பற்றியெல்லாம் தங்கள் புரிதலை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். சமூகநீதி, சமத்துவம், மனித நேயம் இவற்றை பறைசாற்றும் ஓவியங்களை நம் பெரியார் பிஞ்சுகள் வரைந்திருந்தனர். அவற்றைத் தொகுத்துக் காட்டிய காணொலி மிகச் சிறப்பாய் அமைந்தது.
பல்சுவை நிகழ்ச்சியின் அடுத்தக் கட்டமாக சிலம்பாட்டம் அமைந்தது. பிள்ளைகளின் நேர்த்தி யான சிலம்பாட்டம் அருமையான பாடலுடன் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அடுத்ததாகப் பெரியார் பற்றிய கவிதைகளை நம் பிள்ளைகள் கூறினர் என்பதைவிட முழங்கினர் என்றே சொல்ல வேண்டும். இயலோடு நாடகத் தமிழும் பார்த்து மகிழ்ந்த நம்மை, இசைத் தமிழாலும் மூழ்கச் செய்தனர். இந்நிகழ்ச்சி முத்தமிழ் விழாவாக சிறப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு விருந்தினர், சமூக வலைத்தளத்தில் பெரியாரிய சிந்தனை களைச் சிறப்பாகப் பரப்பிவரும் செயலுக்காக பெரியார் பன்னாட்டு அமைப்பின் 2021 ஆம் ஆண்டின் முதல் விருதினை பெற்ற youtube பிரபலம் U2Brutus Minor வீரமணி அவர்கள். தான் பெரியாரை எப்போது அறிந்து கொண்டார் என்பதையும், தன் சமூக வலைத்தளப் பணிகள் பற்றியும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். பிள்ளைகள் பெரியாரைப்பற்றி பேசுவதோடு நின்றுவிடாமல், அவரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று சிறப்பாக எடுத்துரைத்தார். அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய அறிவு வழி காணொலி சேரலாதன் குழந்தைகளைப் பெரிதும் பாராட்டினார். அமெரிக்காவில் வளர்ந்த குழந் தைகள் பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி உரத்து பேசுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். சேரலாதன், தோழர்கள் தாமோதரன், மோகன்ராஜுடன் இணைந்து அறிவு வழி காணொலிமூலம் இதுவரை 394 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 395 ஆவது நிகழ்ச்சியாக இதை இணைந்து நடத்தினர்.
பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்னும் அய்ந்து பிரிவுகளில் குழந்தைகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்குபெற்ற அனைத்துப் பிள்ளைகளுக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசாக அமெரிக்க டாலர் மதிப்பில் 25 டாலருக்கான amazon பரிசு அட்டை வழங்கப் பட்டது.இதில் சிறப்பாக பங்கேற்ற எட்டு பிள்ளை களுக்கு சிறப்பு பரிசாக 100 டாலருக்கான amazon பரிசு அட்டை வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசுகளை தேர்ந்தெடுத்து அறிவித்த தேர்வு குழு - அட் லாண்டா ஜெயா மாறன் நியூஜெர்சி லட்சுமி சேதுபதி, அரிசோனா சித்திர செந்தாழை, கலி போர்னியா டெய்சி ஜெயபிரகாஷ் ஆவார்கள்.
இந்நிகழ்ச்சியை தோழர்கள் தமிழ்மணி, கண்மணி, ரவிக்குமார், அருள்செல்வி மற்றும் சரோ இளங்கோவன் ஆகியோர் மிக அழகாகத் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் விர்ஜினியா தோழர் அறிவுப்பொன்னி அனை வருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கும் தொழில்நுட்ப உதவிகளை செய்தவர் டெலவர் தோழர் துரைக்கண்ணன் மற்றும் சிகாகோ தோழர்கள் சரவணகுமார்., ரவி, விஜய் உடன் பணியாற்றினர்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அறிவுத் திருநாளாய் இளையோர் நிகழ்ச்சியாகக் கொண் டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை அமெரிக்கா தொலைக்காட்சி மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியினர் நேரலை செய்தனர்
நன்றி: வினோப்ரியா
No comments:
Post a Comment