பார்ப்பனர்கள் இன்னும் எழுத வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

பார்ப்பனர்கள் இன்னும் எழுத வேண்டும்

 கேள்வி: 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்கிறார்களே, வீரமணியும், ஸ்டாலினும், தி.மு..வில் யாரும் தலைவராகலாம் என்று அவர்கள் கூறுவார்களா?

பதில்: அது எப்படி முடியும்? கோவில்கள் பொதுச் சொத்து, யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். தி.மு.. அவர்களது சொத்து, அதில் எப்படி யார் வேண்டுமானாலும் தலைவராக முடியும்?

('துக்ளக்' 15.9.2021 பக்கம் 10)

பார்ப்பனர்களில் குறிப்பாக 'துக்ளக்'கின் சோ பாரம்பரியத்தின் லாஜிக் என்பது குதர்க்கம் என்ற தலைப்பின்கீழ் வரக் கூடியது.

நாமும்கூட கேட்கலாம். சங்கர மடம் யார் சொத்து? பொது சொத்தா - தனியார் சொத்தா?

தனி சொத்து என்றால் சங்கராச்சாரியார் மண் வெட்டி எடுத்து வெட்டி கோடாரி எடுத்து பிளந்து சம்பாதித்த பணத்தில் உருவாக்கப்பட்ட சொத்தா சங்கர மடம்?

ஹிந்துக்கள் அனைவருக்குமான சொத்து என்றால் ஹிந்து மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரியார் ஆகலாம் என்று சொல்லுவார்களா?

தி.மு.. அவர்களது சொத்து என்று சொல்லுவது எந்த அடிப்படையில்?

இதில் கடுகு மூக்கு அளவுக்காவது உண்மை இருக்கிறதா? சாணியைப் பிடிக்க வைத்து சாமி என்று சாதிப்பவர்கள் எதைத்தான் எழுத மாட்டார்கள் - பேச மாட்டார்கள்.

தி..விலோ, தி.மு..விலோ குறிப்பிட்ட இவர்கள்தான், குறிப் பிட்ட இந்தப் பிரிவினர்கள் தான் வர வேண்டும் என்ற விதிமுறை உண்டா? எந்தத் தடையும் இல்லையே. சங்கரமடம் அப்படித்தானா? பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது வர முடியுமா?

'சூத்திரர்களும், பஞ்சமர்களும் கொடுத்த பணம், காணிக்கை சங்கர மடத்தில் இல்லையா?

சங்கராச்சாரியாவது ஒருபுறம் இருக்கட்டும் - சங்கர மடத்திற்கு சுப்பிரமணிய சாமி சென்றால், சங்கராச்சாரியாரோடு, சரி சமமாக நாற்காலி போட்டு சங்கராச்சாரியார் பக்கத்தில் ஜம்பமாக உட்காரலாம்.

அதே சங்கர மடத்திற்கு அப்துல்கலாம் சென்றாலும் சரி, ஒன்றிய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் சென்றாலும் சரி, தரையில் தானே உட்கார வைக்கப்படுகிறார்கள்? இது எதைக் காட்டுகிறது?

காகாகலேல்கர் (பிற்படுத்தப்பட்டோர் முதல் ஆணையத்தின் தலைவர்) என்ன சொல்லுகிறார்?

1961 ஜூலை மாதம் தமிழ்நாட்டில் அமைச்சர் கக்கன் தலைமையில் நடந்த ஒரு பள்ளிக்கூட விழாவில் காகா கலேல்கர் பேசினார்.

"தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு 'பிராமணன்' என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள ஒரு 'ஹரிஜன்' எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ அப்போது தான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருத முடியும்."

(மயிலைநாதன் எழுதிய "பெரியார் படைத்த மனிதன்" பக்கம் 23,24)

பேசி இருப்பவரும் ஒரு பார்ப்பனர்தான், பிரபலமானவர்தான். குருமூர்த்தி அய்யர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

எப்படி ஏற்றுக் கொள்வர்? 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று கூறும்  சங்கராச்சாரியார்  சட்டப்படியான குற்றவாளியாயிற்றே.

சங்கர மடத்தில் உள்ளதுபோல, குறிப்பிட்ட ஸ்மார்த்த பார்ப் பனர்தான் சங்கராச்சாரியார் ஆக முடியும் என்பது போன்றதல்ல - தி..வும் - தி.மு..வும். எந்த பிரிவினைச் சேர்ந்தவர்களும் தலைவராக முடியுமே!

பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்கு விலை இத்தனை  என்று கூறும் கூறு கெட்டவர்கள் போல எழுதும் இவர்கள்தான் அறிவு ஜீவிகளாம். தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் அகந்தைக் குணம் அவர்களை விட்டுப் போவதில்லை.

'துக்ளக்'கின் பதிலில் ஒன்றை அவர்கள் அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டார்கள். அதுதான் கோவில்கள் "பொதுச் சொத்து" என்பதாகும்.

கோவில் பொதுச் சொத்து என்று ஆனபிறகு அனைவருக்கும் பொதுதானே! ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கூறும் இந்தக் கும்பல், ஹிந்து மதக் கோயில்களில் அந்த ஹிந்து அர்ச்சகராகக் கூடாது என்பது எதைக் காட்டுகிறது? ஹிந்து என்று சொல்லுவது ஒரு போர்வை, அந்தப் போர்வைக்குள் புகுந்து கொண்டால்தானே வசதியாக இந்தப் பார்ப்பனப் பெருச்சாளிகள் சுரண்டிக் கொழுக்க முடியும்.

எவ்வளவுதான் சாமர்த்தியமாகப் பேசினாலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆணையும், அதன் செயலாக்கமும் அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் பார்ப்பனர்களைப் பச்சையாகத் தோலூரித்துக் காட்டி, தோரணமாகத் தொங்க விட்டு விட்டதே!

பார்ப்பனர்கள் இந்த வகையில் இன்னும் வேகமாக - முட்டாள் தனமாக - போக்கிரித்தனமாக எழுத வேண்டும். அதன் மூலமாக பார்ப்பனர் அல்லாத புதிய தலைமுறையினரும், இளைஞர்களும், தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் பார்ப்பனர்களை அடையாளம் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்து கொண்டு இதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சொல்ல வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

 

1 comment:

  1. அருமை, பார்ப்பனர்களின் புளுகு மூட்டைகள் வெளிப்பட அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ஊருக்கு நாம் சொல்லும் உண்மை தெரியவேண்டும் ..

    ReplyDelete