தமிழர் தலைவரின் மே தின வாழ்த்து!!
நாளை (1.5.2021) மே முதல் நாள்; மேதினியெங்கும் மே தின நாள்!
உழைப்பாளர் உரிமை பெற்ற வரலாற்றை உழைக்கும் வர்க்கமாம் தொழிலாளத் தோழர்கள் கொண்டாடி மகிழும் பெருநாள் - திருநாள்!
நம் நாட்டில் தொழிலாளர்கள் என்றால் வர்க்கத்தைவிட வருணத்தையே மய்யப்படுத்தி, குலத்தொழிலால் கொத்தடிமைகளாக காலங்காலமாய் வாழ்ந்த மக்களுக்கு, சமூக விடுதலையும், மனித சமத்துவமும் தேவை என்று முழங்கி, இயக்கங் கண்ட தந்தை பெரியார் ‘‘தொழிலாளியை பங்காளியாக்கி, உரிமையில் பங்குபெறும் சம ஈவினை உண்டாக்குக'' என்று தாம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலம் புதியதோர் உலகு காண வழி வகுத்தவர்.
இன்றும் உண்மையான திராவிடர் இயக்கங்கள் அந்த சுயமரியாதைச் சூரியக் கதிரொளியாக தொழிலாளர் பிரச்சினை முதல் அனைத்திலும் செயல்படுகின்றன!
கரோனா காலத்தில் மேலும் தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்தோர் உட்பட ‘‘காணத் தகுந்தது வறுமையே, அவர்கள் பூணத் தெரிந்தது பொறுமையே'' என்று வறுமையாலும், தொற்று நோய் அச்சத்தினாலும் அலைக்கழிக்கப்படும் அவதியில் அல்லல் பட்டு ஆற்றாது அழு கின்ற கண்ணீர் விடும் நிலை மாறவேண்டும்.
புதிய அரசு - ஆட்சியில் ‘‘புதிய விடியல் வராதா'' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளா கட்டும்' மே தின நாள்!
சோவியத் ரஷ்யா வின் 1932 மே நாள் கொண்டாட்டத்தில் நேரில் விருந்தினராகக் கலந்துகொண்ட தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் உள் அடக்கம் நமது மே தின நாள் -
அனைவருக்கும் மே தின நாள் வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2021
No comments:
Post a Comment