அமெரிக்கத் தலைவர் பைடன் அவர்களின் நேற்றைய உரை அமெரிக்காவின், ஏன் உலகத்தின் ஒரு திருப்பு முனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகமே “பணம், பணம், பணம்" என்று அலைந்து அதுவே கொள்கையாகி உலகெங்கும் பரவி விட்டது. தன்னலம் தலைதூக்கியது தனி மனித வாழ்வில் மட்டுமல்லாது பல அரசுகளே அந்த வழியில் நடக்க ஆரம்பித்து விட்டன . யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கோட்பாடு உலகத்தில் வந்து கொண்டி ருந்ததை அழித்து “அமெரிக்கா அமெரிக்கருக்கே" என்ற கோமாளி வென்று அதை உலக நாடுகள் சிலவும் பின் பற்றும் நிலை வந்தி ருந்தது .அவரவர் அவர்கள் நாட்டைப் பற்றி மட்டுமே நினைத்து செயலாற்றும் படி இயக்கங்கள் வெற்றி பெற்று வந்தன .
இந்த மனித நேய எதிர்ப்புக்களை ஒழித்துக் காட்டும் திருப்பு முனை தான் நேற்றைய பைடன் அவர்களின் கருத்தாக்கம் . அது செயலாகப் பல தடைகள் உள்ளன. அவற்றைத் தாண்டி அமெரிக் காவும், உலகமும் மனித நேய முன்னேற்றப் பாதையில் செல்லும் முயற்சிகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் .
முதலாவதாக அங்கே தலைமைப் பதவியில் அமெரிக்க, நாடாளுமன்ற அரங்கில் அமர்ந்திருந்த நான்சி பலோசி, மற்றும் அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹேரிசு இருவரையும் பார்த்து 'இன்று வரலாறு படைத்துள்ளோம், இரண்டு பெண்கள் தலைமையில் அமர்ந்துள்ளார்கள்' என்று, அந்த வரலாறு படைத்த முதல் அமெரிக்கத் தலைவன் நான் என்பதில் பெருமைப்படுகின்றேன் என்று தொடங்கினார்!
அரசு என்பது தாங்கள் தங்களைக் கவனித்துக் கொண்டு வாழ முடியாதவர்கட்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான்! செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்துக் கொள்வதற்காக இல்லை என்பதை ஆணி வேராகச் சொன்னார்!
ஏழைக் குழந்தைகளுக்கு மாதா மாதம் உதவித் தொகை! அவர்களது ஆரம்பக் கல்வி முதல் -- இரண்டாண்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வரை அரசு செலவிலே! ஏழைகள் வேலை வாய்ப்பு பெற வேண்டும், கல்வி, உடல் நலம், நல்ல வாழ்வு பெறப் பல திட்டங்களை அறிவித்தார்.
உடல் நலம் மக்களின் உரிமை. அதை நிறை வேற்றுவோம் என்று சொன்னார்.
வெள்ளை ஆதிக்கம் என்பது வெறியாகி விட்டது. இன எதிர்ப்பு ஒழிந்து அனைவரும் அமெரிக்கர் என்றும், குடியேறியவர்களால் அமெரிக்கா பெற்றுள்ள நன்மைகள், குடியேற்றத் தின் முக்கியம், வரவேற்பு என்று திட்டங்கள் சொல்கின்றார். அனைத்துக் குடியேற்றம் செய்த அமெரிக்கர்களுக்கும் பாது காப்பு இவையெல்லாம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
கரோனாவிற்கு 220 மில்லியனுக்கும் மேற் பட்டோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று அறிவித்தார்,அதை வெல்வோம், வாழ்வை முன்னேற்று வோம். உலகத்திற்கு உதவுவோம் என்று அறிவித்தார்.
குறைந்த ஊதியத்தை மணிக்கு 15$ ஆக உயர்த்தினார்.
செல்வந்தர்களும், பெரிய நிறுவனங்களும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். காற்றுத் தூய்மை ,குடி நீர் அனைவர்க்கும், செம்புக் குழாய்கள் நீக்கம் என்று பல திட்டங்களை அறிவித்தார்.
காவல்துறையின் போக்கைக் கட்டுப்படுத்திச் சீர் திருத்தங்கள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
"உலக அரசுகளுடன் சேர்ந்து அமைதி, முன் னேற்றம், மாசுக் கட்டுப்பாடு என்று பல் துறைகளில் கட்டாயம் ஒத்துழைப்பு தேவை, ஒன்றுபட்டு உதவு வோம்" என்று எடுத்துரைத்தார்.
மிகவும் எதிர் நீச்சல் போட்டுத்தான் இவற்றை யெல்லாம் நிறைவேற்ற வேண்டும்.
ஆனால் கட்டாயம் வெற்றி பெறுவார் .
டாக்டர் சோம.இளங்கோவன்
No comments:
Post a Comment