தி.மு.க. தேர்தல் அறிக்கையான‘‘ஸ்டாலின் 7'' திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார்
மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி
சென்னை, மார்ச் 31 வெற்றி நடைபோடும் அரசல்ல - வெற்றுப் பேச்சு அரசாங்கம் இது; தி.மு.க. தேர்தல் அறிக்கையான ‘‘ஸ்டாலின் 7'' திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார் மு.க.ஸ்டாலின் என்றார் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.கலைஞர் செய்திகள்:
‘‘கேள்வியால் ஒரு வேள்வி''
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘‘கேள் வியால் ஒரு வேள்வி'' பகுதியில் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
கேள்வி: அ.தி.மு.க. அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகாலமாக நடந்து முடிந்திருக்கிறது. அதுகுறித்து தேர்தலுக்காக வெற்றி நடை போடும் விளம்பரம் என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதுகுறித்து, அது வெற்றுப் பேச்சு அரசாங்கம் என்று விமர்சித் திருந்தீர்கள், அது ஏன்?
வெற்றி நடை போடும் அரசல்ல -
வெற்றுப் பேச்சு அரசாங்கம்
பதில்: இது எப்படி வெற்றி நடைபோடும் அரசாங்க மாகும்? முதல் அய்ந்தாண்டுகள் யாருடைய ஆட்சி என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு முந்தைய 1991-1996, 2001-2006 அந்த ஆட்சியினுடைய தொடர்ச்சியாகத்தான் 2011 - 2016. அந்த ஆட்சிக்கான அத்தாட்சியைத்தான் உச்சநீதிமன்றம் கொடுத்தி ருக்கிறது.
நான்காண்டுகள் சிறைத் தண்டனை - 100 கோடி ரூபாய் அபராதம் - அனைத்துச் சொத்துகளும் பறிமுதல் என்று அத்தாட்சி கொடுத்துவிட்டது.
அந்த ஆட்சியை, வெற்றி நடை போடும் ஆட்சியாக சொல்ல முடியாது.
அடுத்த அய்ந்தாண்டுகளை எடுத்துக் கொள் ளுங்கள். திருவாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். முதல் நான்காண்டுகள், 6 மாதமாக என்ன செய்தார் என்று சொல்லட்டுமே!
இப்பொழுது அடிக்கல் நாட்டுகிறார், அறிவிப்பு களை வெளியிடுகிறார்.
அடிக்கல் நாட்டிய கற்களையெல்லாம் பொறுக்கி ஒன்றாகச் சேர்த்தால், ஒரு வீட்டைக் கட்டிவிடலாம். அத்தனை அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
ஆட்சி முடிக்கின்ற தருவாயில், ஒன்றரை மாதம் இருக்கும்பொழுதா, அடிக்கல் நாட்டுவது. ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஆட்சி முடியும் பொழுது நூறு சதவிகிதம் முற்றுப் பெற்று இருக்கிறது அல்லது 80 சதவிகிதம் முடித்திருக்கிறேன் என்று சொன்னால், அது பெருமை.
ஆட்சி முடிகின்ற நேரத்தில், அடிக்கல் என்ன நாட்டுவது? இரண்டாவது அறிவிப்பு - இது தள்ளுபடி, அது ரத்து என்று அறிவிக்கிறார்.
அப்படி அறிவித்து என்ன பயன்?
நிதி ஒதுக்கவேண்டும் அல்லவா?
பட்ஜெட்டில் எங்கே இருக்கிறது.
மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் ரத்து - அதற்காக பட்ஜெட்டில் ஒரு ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்களா என்றால், இல்லை.
நகைக் கடன் ரத்து - அதற்காக பட்ஜெட்டில் ஒரு ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்களா என்றால், இல்லை.
வேளாண் கடன்களுக்கு 12,110 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, பட்ஜெட் உரையில், 36 ஆவது பாராவில் பார்த்தீர்களேயானால், வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறார்கள். எஞ்சியுள்ள 7 ஆயிரத்து 110 கோடி ரூபாயை யார் தருவது?
தாங்கள் ஆட்சியில் இருக்க மாட்டோம் என்கிற தைரியத்தில்தானே அதுபோன்று அறிவிக்கிறார்கள்.
ஆக, இது வெற்றுப் பேச்சு அரசு - வெற்றி நடை போடும் அரசு அல்ல.
உருப்படியாக ஒரு திட்டத்தை ‘‘நாங்கள் தொடங்கி, முடித்தோம்'' என்றால்தான், அது வெற்றி நடை போடும் அரசு.
அதுபோன்று, தமிழ்நாட்டில் ஒரு திட்டத்தை ‘‘நாங்கள் தொடங்கி, முழுமை செய்திருக்கிறோம்'' என்று சொல்லக்கூடிய ஒரு திட்டமும் கிடையாது.
கேள்வி: விலைவாசி உயர்வு குறித்து வெளி யான ஒரு தனியார் தொலைக்காட்சி புள்ளி விவரத்தில், கிட்டத்தட்ட இந்தத் தேர்தலுடைய முடிவுகளைத் தீர்மானிப்பதில், 30 சதவிகி தத்திற்கும் மேலானவர்கள் விலைவாசி உயர்வை முக்கியமாக எடுத்துக் கொள் கிறார்கள் என்கிறது. இந்த விலைவாசி உயர்வு செயற்கையானது என்கிற ஒரு பார்வை இருக்கிறது, அதை நீங்கள் எப்படிப் பார்க் கிறீர்கள்?
மத்திய அரசின்
தவறான நிதிக் கொள்கை
பதில்: விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம், மத்திய அரசினுடைய தவறான நிதிக் கொள்கை.
இன்றைக்குப் பெட்ரோல் விலை 91 ரூபாய். டீசல் விலை 81 ரூபாய்.
பெட்ரோல் விலை 91 ரூபாயில், 33 ரூபாய், டீசல் விலை 81 ரூபாயில் 32 ரூபாய் நேரிடையாக மத்திய அரசுக்கு வரியாகப் போகிறது.
கச்சா எண்ணெய் எங்கள் ஆட்சிக் காலத்தில் பீப்பாய் 105 டாலர்.
105 டாலர் விற்ற நேரத்தில், நாங்கள் பெட்ரோல் 60 ரூபாய்க்கும்; டீசல் 55 ரூபாய்க்கும் கொடுத்தோம்.
இன்றைக்குக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 70 டாலராகக் குறைந்திருக்கிறது. மூன்றில் இரண்டு தான்.
ஆக, பெட்ரோல் விலையும், டீசல் விலையும் குறையவேண்டும். இது உலகறிந்த விஷயம்.
ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைகிறது; பெட்ரோல் விலை கூடுகிறது.
பாரதீய ஜனதா நடத்தும் நிழல் யுத்தத்தில் நாம் வெற்றி பெறவேண்டும்!
கச்சா எண்ணெய்யிலிருந்துதான் காஸ் வருகிறது. ஒரே கிணற்றிலிருந்துதான் கச்சா எண்ணெய்யும் கிடைக்கிறது; காஸ் கிடைக்கிறது. அல்லது ஒரு கிணற்றில் கச்சா எண்ணெய் கிடைக்கும்; அடுத்த கிணற்றில் காஸ் கிடைக்கும். இது உலக நியதி.
ஆக, கச்சா எண்ணெய் விலை குறைந்தால், காஸ் விலையும் குறையும்.
ஆனால், இப்பொழுது கச்சா எண்ணெய் விலை குறைகிறது; சமையல் காஸ் விலை கூடுகிறது.
இது செயற்கை அல்ல; இது உறிஞ்சுவது.
மத்திய - மாநில அரசுகள் வரியைப் போட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
செயற்கையெல்லாம் கிடையாது; தெரிந்து செய்கிறார்கள்; துணிந்து செய்கிறார்கள். மக்கள் தட்டிக் கேட்க முடியாது என்று நினைத்து செய்கிறார்கள். மக்கள் தட்டிக் கேட்பார்கள், சரியான பதிலை தேர்தலில் தருவார்கள்.
கேள்வி: 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து, அந்தத் தேர்தலின் கதாநாயகன் என்று நீங்கள் சொல்லி யிருந்தீர்கள். இந்த 2021 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக் காக தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழு பிரதான திட்டம் போன்று ஒரு விஷன் போன்று அறிவித்திருக்கிறார்கள். அந்தத் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது?
‘‘ஸ்டாலின் 7'' உறுதிமொழிகளை
நிச்சயமாக நிறைவேற்றுவார்!
பதில்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை முதல் பக்கத்திலிருந்து 126 ஆம் பக்கம் வரை படித்தேன்.
2006 ஆம் ஆண்டு சூழ்நிலை என்னவென்றால், அதற்கு முன்பு வரையில், தேர்தல் அறிக்கைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது - முதன்மை இடம் கொடுத்தது கிடையாது.
2006 ஆம் ஆண்டில்தான், மனதில் பதியும்படி கலைஞர் அவர்கள் ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்தார்கள்.
ஆகவேதான் சொன்னேன், இந்தத் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று சொன்னேன். அது எல்லோருடைய மனதிலும் பதிந்துவிட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லின்போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்பது, முந்தைய தேர்தல் அறிக்கையிலிருந்து மாறுபட்டு இருந்தது.
உலகத்தினுடைய அனைத்துப் பொருளாதார நிபுணர்களும், இந்தியப் பத்திரிகைகளில், நாளிதழ் களில் எழுதக் கூடிய அனைத்து அறிஞர்களும், அது வித்தியாசமான தேர்தல் அறிக்கை என்று சொன் னார்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேன்.
நியாயத் திட்டம் - அதாவது எல்லோருக்கும் குறைந்தபட்ச வருமானம் - கீழ்த்தட்டில் இருக்கின்ற மிகமிக ஏழைக் குடும்பங்களுக்கு 20 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதத்தினருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று ஒரு புரட்சிகரமான எண்ணத்தை விதைத்தோம்.
இன்றைக்கு எல்லாக் கட்சியினரும் அந்த விதை யைத்தானே எடுத்து மறுபடியும் விதைக்கிறார்கள். ஒரு கட்சி 1000 ரூபாய் என்கிறது; இன்னொரு கட்சி 1500 ரூபாய் என்கிறார்கள்.
ஒரு கட்சி 5000 ரூபாய் என்கிறது; இன்னொரு கட்சி 4000 என்கிறது.
புதிய விதை போடும்பொழுதுதான், அது தேர்தல் கதாநாயகன்.
இன்றைக்குத் தேர்தல் அறிக்கையினுடைய முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டன.
எல்லாக் கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு, மக்களைச் சந்தித்து, மக்களிடம் கேட்டு, ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.
அந்த வகையில்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், இந்த முறை, 126 பக்கங்கள் இருந்தாலும், கடைசியாக ‘‘ஸ்டாலின் 7'' என்று உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
பொருளாதாரம்
வேளாண்மை
நீர் வளம்
கல்வி மற்றும் சுகாதாரம்
நகர்ப்புற வளர்ச்சி
ஊரகக் கட்டமைப்பு
சமூகநீதி
போன்ற ஏழு தலைப்புகளில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள்.
நான் அதனை ஆழமாக, ஊன்றிப் படித்தேன். அவர்கள் கொடுத்துள்ள ஏழு தலைப்புகளில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும்.
அய்ந்தாண்டுகளில் நிறைவேற்றுவதற்கு, தமிழ் நாட்டு அரசிடம் நிதி ஆதாரமும் கிடைக்கும்; நிர்வாகத் திறமையும் இருக்கும்.
நிதி ஆதாரமும், நிர்வாகத் திறமையும் இருந்தால், நிச்சயமாக இந்த ஏழு உறுதிமொழிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு, திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.
கேள்வி: கடந்த 70 ஆண்டுகளில் இதுவரை சந்தித்த தேர்தல்களுக்கும், இந்தத் தேர் தலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது; இந்தத் தேர்தலில் ஏற்படும் தோல்வி, ஒரு மாறுபட்ட முடிவு வந்தால், அது பெரிய அளவில் பாதிக்கும் என்ற ஒரு பார்வை முன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதிரானதாக வந்தால், அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்தால், தமிழகமே துண்டாடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக் கின்ற என்ற வாதங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பாரதீய ஜனதா நடத்தும்
நிழல் யுத்தத்தில் வெற்றி பெறவேண்டும்!
பதில்: இதெல்லாம் விபரீதமான கற்பனை. இந்தத் தேர்தலில் முடிவு ஒரு முடிவுதான். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும். அதி லொன்றும் சந்தேகமே வேண்டாம்.
எப்படி வித்தியாசப்படும் என்றால்,
முடிவில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கும் கிடையாது; யாருக்கும் கிடையாது.
தமிழ்நாட்டில், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு மூத்த பெண்மணி, எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரிடம் நான் கேட்டேன்,
அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘‘ஆட்சி மாற ணும் அய்யா'' என்கிறார், அவருடைய பாஷையில்.
ஆட்சி மாற்றம் என்பது ஆழமாக அவர்களுடைய மனதில் பதிந்துவிட்டது. அதை அழிக்கவே முடியாது; இன்னும் சில நாள்களில் யாராலும் அழிக்க முடியாது.
எப்படி இது வித்தியாசமான தேர்தல் என்றால்,
யுத்தம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும். ஆனால், நிழல் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது. அந்த நிழல் யுத்தம் - பாரதீய ஜனதா கட்சிக்கும் - அனைத்து தேசிய கட்சிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
அந்த யுத்தம் மேற்கு வங்காளத்தில், மகாராட் டிராவில், கேரளாவில், புதுச்சேரியில், தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
தேசிய கட்சிகளுக்குத் திராவிட கட்சிகள் துணை நிற்கின்றன.
தேசிய கட்சிகள் என்று நான் சொல்வது, அகில இந்திய அளவில் காலூன்றிய கட்சிகள் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இவையெல்லாம் தேசத்தில் பல மாநிலங்களிலும் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.
நிழல் யுத்தத்தில், அந்தப் படைக்குத் தலைமை தாங்குவது பாரதீய ஜனதா கட்சி.
இந்த நிழல் யுத்தத்தில் அவர்களை வீழ்த்தப் போவது - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
யுத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும். நிழல் யுத்தத்தில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைய வேண்டுமானால், அவர்கள் தமிழ்நாட்டில் போட்டியிடுகின்ற அனைத்து இடங்களிலும் தோற்கவேண்டும்.
அப்பொழுதுதான், நிழல் யுத்தத்தில் மிகப்பெரிய தோல்வியை பாரதீய ஜனதா கட்சி சந்தித்தால்தான், யுத்தத்திலும் வெற்றி பெற்றோம் - நிழல் யுத்தத்திலும் வெற்றி பெற்றோம் என்று நான் பெருமைப்படுவேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment